(வைகாசி 25,2045 / சூன் 8, 2014 இதழின் தொடர்ச்சி)

உங. பெற்றதும் திரும்புவர்

சற்றும் வருந்தேல் – தோழி

சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

cheralathan01

(தலைவன் பொருள் தேடச் சென்றபின் அவன் பிரிவை ஆறறியிருக்க முடியாது தலைவி வருந்துகின்றாள். தோழி ஆறுதல் கூறி விரைவில் திரும்பி விடுவானென்று உறுதி கூறுகின்றாள்)

தோழி: அம்ம! நின் கை வளையல்கள் கழன்று கழன்று விழுகின்றனவே. எவ்வளவு இளைத்துப்போய் இருக்கின்றாய்? தலைவன் பிரிந்து சென்றதால் அல்லவா இவ்வளவு வாட்டம்.

தலைவி: ஆம்! என் செய்வது. “செல்லாமை உண்டேல் எனக்குரை: மற்றுநின் வல்வரவு வாழ்வார்க்குரை” என்று கூறினேன்.

தோழி:- ஆம்; நீ கூறியதை நானும் அறிவேன். உன்னிடத்தில் விடைபெற்றுச் செல்வதற்கு வந்து கண் கலங்கி அவர் நின்றதும் தழுதழுத்த குரலில் “விரைவில் திரும்பிவிடுவேன்” என்று கூறியதும் நீ “போகாமலிருக்கின்ற செய்தியிருந்தால் சொல்லுங்கள். விரைவில் திரும்பி வருகின்றேன் என்ற செய்தியை, நீங்கள் வருகின்ற காலத்து உயிரோடு இருப்பார்க்கு உரையுங்கள்” என்று கூறினதும் என் மனக்கண்ணை விட்டு அகலவில்லையே; வருந்தேல், அவர் விரைவில் திரும்புவர்.

தலைவி: விரைவில் திரும்புவார் என்பது என்ன உறுதி. ஒருவர்க்கும் பொருள்மீது பற்றுதல் உண்டானால் அதற்கு எல்லை ஏது? மேலும் மேலும் ஈட்டவேண்டும் என்ற எண்ணம் தானே அவரை வாட்டி அங்கேயே தங்கச் செய்யாதா?

தோழி:- அப்படி நினையாதே, மேல்கடல் தீவில் உள்ள பகைவர்களை வென்று, அவர்கள் காவல் மரமாகிய கடம்ப மரத்தை வெட்டி முரசு செய்து வெற்றிபெற்றும் இமயமலைவரையில் சென்று இமயத்தின் தன் ‘வில்’ கொடியை நாட்டியும் புகழ் கொண்ட சேரலாதன், மாந்தை என்ற ஊரில் தங்கி சிற்றரசர்களின் திறையைப் (கப்பத்தை) பெற்று அங்கேயே போட்டு விட்டுப்போன கதையை அறிவாயா?

தலைவி: அறிவேன்.

தோழி:- ‘ஆம்பல்’ என்று சொல்லும் பெரிய எண் அளவு பொருளைக் குவித்தானாம். குவித்தவன் எடுத்துச் செல்லாமல் விட்டுச் சென்றானாம்.

தலைவி: ஆம், நானும் கேள்விப்பட்டுள்ளேன்.

தோழி: அவ்வளவு மிகுந்த செல்வத்தைப் பெற விரும்புவார். பெறுவார், பெற்றதும் பின்னர் ஒரு நொடி கூட அங்குத் தங்கார். பெற்றதும் திரும்பிவிடுவர் சற்றும் வருந்தேல்.

தலைவி: அவர் சென்றுள்ள நாடோ நம் நாடல்ல; மொழி வேறு பட்ட பிறநாடு. வழியின் நிலையோ?

தோழி: எல்லாம் அறிந்ததுதான் குறுக்கும், நெடுக்கும் பல பிரிவுபட்ட வழிகள் உண்டு அங்கங்கே வேட்டுவ வீரர்கள் தங்கியிருப்பர். சிறிதும் படியாதவர்கள் வில்லும் கையுமாக இருந்து வருவாரை எண்ணி வழிமேல் விழி வைத்திருப்பர். அதுபற்றிக் கவல்கின்றாயோ?

தலைவி: நன்று சொன்னாய். அதுபற்றி நான் கவலவில்லை. குற்றமற்ற நம் காதலர் சென்ற இடமெல்லாம் வெற்றி பெற்றுத் திரும்புவர். அதில் எனக்கு உறுதியுண்டு.

தோழி: பின்னர் ஏன் வருந்துகின்றாய். வேண்டிய காலந்திற்குமேல் ஒரு நொடி நேரம்கூட அங்குத் தங்கி இரார். வருந்தாதே. தங்காது விரைவில் வருவர்.

thalaivi thozhi001

உங. பாடல்

அகநானூறு 127 பாலை

இலங்குவளை நெகிழச் சாஅய் அல்கலும்

கலங்கு அஞர் உழந்து நாம் இவண் ஒழிய

வலம்படு முரசின் சேரலாதன்

முந்நீர் ஒட்டிக் கடம்பு அறுத்து இமயத்து

முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து

நல்நகர் மாந்தை முற்றத்து ஒன்னார்

பணிதிறை தந்த பாடு சால் நன் கலம்

பொன் செய்பாவை வயிரமொடு ஆம்பல்

ஒன்று வாய் நிறையக் குவை இ அன்று அவன்

நிலம் தினத் துறந்த நிதியத்து அன்ன

ஒருநாள் ஒருபகல் பெறினும் வழி நாள்

தங்கலர்; வாழி! செங்கோல்

கருங்கால் மராத்து வாஅல் மெல் இணர்

கரிந்து வணர் பித்தை பொலியச் சூடிக்

கல்லா மழவர் வில் இடம் தழீஇ

வழிநர்ப் பார்க்கும் வெருவரு கவலை

மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்

பழிதீர்காதலர் சென்ற நாட்டே

உரைநடைப்படுத்தல்:

க தோழி வாழி……….(அடி கஉ)

உ செங்கோல் …….சென்ற நாட்டே (அடிகள் க-உ-கஅ)

வ இலக்குவளை ……..தங்கலர் (அடிகள் க- கஉ)

சொற்பொருள்

க தோழி வாழி – தோழியே வாழ்வாயாக

உ (அடிகள் க உ-கஅ)

செங்கோல் – சிவந்த கிளைகளையும் கருங்கால் கரிய அடிமரத்தினையும் உடைய, மராஅத்து – வெண் கடப்பமரத்தின் வாஅல்-வெண்மையான, மெல் இணர் – மெல்லிய பூங்கொத்தினை, சுரிந்து – சுருண்டு, வணர் – வளைந்த, பித்தை – தலைமயிர், பொலிய – அழகு பெற, சூடி – அணிந்து கொண்டு கல்லா – நூல்களைப் படியாத, மழவர் – வீரர்கள், வில் – வில்லை; இடம் இடது பக்கத்தில், தழீஇ – தழுவிக் கொண்டு, வருநர்ப் பார்க்கும் – வழியில் வருவாரைப் பார்த்துக் கொண்டிருக்கும் வெருவரு – அஞ்சத்தகும், கவலை – பிரிவுபட்ட வழிகள் மிக்க; மொழி பெயர் – மொழிவேறுபட்ட, தேஎத்தர் ஆயினும் – தேசத்திற்குச் சென்றுள்ளார் என்றாலும், பழிதீர் – குற்றம் இல்லாத, காதலர் – நம் அன்பர். சென்ற – போயுள்ள, நாட்டே அந்த நாட்டில்.

உ (அடிகள் க-உ)

இலங்கு – அழகு விளங்குகின்ற, வளை-வளைகள், நெகிழ – கழல, சாஅய்-மெலிந்து, அல்கலும் – நாள்தோறும், கலங்கு மனம் கலங்கும், அஞர் – துன்பத்தால், உழந்து – வருந்தி, நாம், இவண்-இங்கே, ஒழிய – தங்கி இருக்கவும், வலம்படு – வெற்றியை அறிவிக்கும், முரசின் – முரசினையுடைய, சேரலாதன் – இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், முந்நீர் – கடலில் ஒட்டி – பகைவர்களைப் புறங்காட்டி ஓடச்செய்து, கடம்பு அறுத்து – அப்பகைவர்களுடைய காவல் மரமாகிய கடம்ப மரத்தை வெட்டியும், இமயத்து – இமயமலையில், முன்னோர் – தனக்கு முன்னாண்ட சேர அரசர், மருள-ஒப்ப, வணங்கு – எழுதியும். வெற்றிச் செயல்கள் புரிந்து (நல் நகர் மாந்தை முற்றத்து) மாந்தை நல் நகர் முற்றத்து – மாந்தை என்ற ஊரில் உள்ள நல்ல வீட்டின முற்றத்தில், ஒன்னார் – பகைவர்கள் பணிதிறை – தங்கள் பணிவுடைமைக்கு அடையாளமாக கப்பத்தை, தந்த – செலுத்திய பாடுசால் – பெருமை மிக்க, நல்கலம் – நல்ல அணிகலன்களும், பொன் செய் பாவை-பொன்னால் செய்யப்பட்ட பதுமையினையும், வயிரமொடு – நல்ல வயிரங்களுடன் ஆம்பல்ஒன்று வாய் நிறைய – ஆம்பல் எனும் பேர் எண் வரும்வரையில் நிறையுமாறு, குவை இ – குவித்து, அன்று – அந்நாளில், அவன் -அச்சேர அரசன், நிலம் தின-நிலத்தில் கிடந்து, அழியுமாறு, – துறந்த – விட்டுப் போன, நிதியத்தன்ன – பொன்னை ஒப்ப, ஒரு நாள் – ஒரு நாளில் ஒரு பகல் – ஒரு பகல் பொழுதில், பெறினும் – பெற்றாலும் வழிநாள் அதற்குப் பிற்றை நாள்; தங்கலர் – தங்கமாட்டார்.

ஆராய்ச்சிக்குறிப்பு:-

இமயத்தில் வில் அடையாளத்தை நிறுவியதும், கடல் நடுவே வாழ்ந்த பகைவரை வென்று அவர்கள் காவல் மரமாம் கடம்ப மரத்தை வெட்டியதும் சென்ற பாடலிலும் குறிக்கப்பட்டுள்ளன.

மாந்தை:-

சேரனுக்குரிய கடற்கரைப் பட்டினங்களுள் ஒன்று. இதை மரந்தை என்றும் அழைப்பர். தனக்குக் கீழ் ஆட்சி செலுத்திய சிற்றரசர்களின் திறையை இவ்வூரிலிருந்து பெற்று, தன் அழியுமாறு விட்டுச் சென்றமை அவன் நாட்டின் பொருள் வளத்தைக் காட்டுகின்றது. பெற்ற திறைப் பொருள்களோ, நல்ல அணி கலன்களும், பொன்னால் செய்யப்பட்ட பதுமையும், சிறந்த வயிரமும், என்று குறிக்கப்படுவதால் அக்காலத்தில் திறை செலுத்தியமுறை அறியப்படுகிறது.

ஆம்பல்:-

aambal+enn

தமிழில் வழங்கிய பேர் எண் – கோடிக்கு மேற்பட்டது. தமிழர்கட்கு, நூற்றுக்குமேல் எண்ணத் தெரியாது. என்றும் ‘ஆயிரம் என்ற சொல் கூட ‘சகசிரம்’ என்ற ஆரிய மொழியின் திரிவு என்றும் தமிழர் நிலையைத் தக்கவாறு அறியும் வாய்ப்பில்லாத ஒரு மேலை நாட்டார் கூறிச் சென்றார். ‘ஆயிரம்’ என்பது தமிழே. அதற்கு மேல் நூறாயிரம், கோடி என்றும் எண்ணினர். ‘கோடி’ என்றால் கடைசி என்றும் பொருள் உண்டு. எண்ணு முறையில் அதுதான் இறுதியானது என்பது உணர்த்து முறையில் கோடி என்று பெயரிட்டுள்ளனர். அதற்குமேல் வரும் பேர் எண்களை ஆம்பல் தாமரை என்று குறியீட்டு எண்களால் குறித்தனர். இது மிகப் பழநூலான தொல்காப்பியத்தினாலும் அறியக் கிடக்கின்றது. தமிழர்கள் எண்களில் சிறந்து, எண்களை அடிப்படையாகக் கொண்டுள்ள கணிதம், வானநூல், முதலியவற்றினும் சிறந்து விளங்கினர். அதனாலேயே ‘எண் எண்ப ஏனை எழுத்து என்ப, இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு’ என்றனர். வள்ளுவர்பெருமாள், எண்ணைக் கண் எனக்கருதிய தமிழர்க்கு எண்ணத் தெரியாது. என்று கூறுவது எவ்வளவு பேதைமை.thiruvalluvar02

(தொடரும்)