26. நீ செயலற்றது எதனால்?

-சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

(ஆனி 22, 2045 / சூலை 06, 2014 இதழின் தொடர்ச்சி)

பேராசிரியர் இலக்குவனார்

26 பாடல்

அகநானூறு 359 பாலை

பனிவார் உண்கணும் பசந்ததோளும்

நனிபிறர் அறியச்சாஅய நாளும்.

கரந்தனம் உறையும் நம்பண்பு அறியார்

நீடினர் மன்னோ காதலர் என நீ

எவன் கையற்றனை இகுளை! அவரே

வான வரம்பன் வெளியத்து அன்னநம்

மாண்நலம் தம்மொடு கொண்டனர் முனாஅது

அருஞ்சுரக்கவலை அசைஇய கோடியர்

பெருங்கல் மீமிசை இயம் எழுந்து ஆங்கு

வீழ்பிடி கெடுத்த நெடுந்தாள் யானை

சூர்புகல் அடுக்கத்து மழைமாறு முழங்கும்

பொய்யா நல்இசை மாவண் புல்லி

கவைக்கதிர் வரகின் யாணர்ப்பைந்தாள்

முதைச்சுவல் மூழ்கிய கான்சுடு குரூ உப்புகை

அருவித்துவலையொடு மயங்கும்

பெருவரை அத்தம் இயங்கியோரே.

 paalai01

உரைநடைப்படுத்தல்

க. பனிவார்…….கையற்றனை இகுளை (அடிகள் க – ரு)

உ. அருஞ்சுரக்கவலை…..இயங்கியோர் (அடிகள் அ-கசா)

ங. அவரே கொண்டனர்……முனாஅது (அடிகள் ரு-எ)

க. (அடிகள் க-ரு)

  பனிவார் – பனித்துளிபோல் கண்ணீர் வடியும், உண்கணும் – காதலர் உயிரை உண்ணும் (வருத்தும்) கண்களும், பசந்த – பசலை என்னும் தேமல்பொருந்திய, தோளும் – தோள்களும், நனிமிகவும், பிறர் – அயலார்கள், அறிய – அறியுமாறு, சா அய – வாட்ட முற, நாளும் – ஒவ்வொரு நாளும், கசந்தனம் – அவ்வாட்டத்தை மறைத்தனமாய், உறையும் – தங்கி இருக்கும், நம் பண்பு – நமது சிறந்த இயல்பை, அறியார் – அறியாதவராய், நீடினர் – காலம் தாழ்த்தனர், (மன், ஒ அசைச்சொற்கள், இவை இரக்கத்தைக் காட்டுவன) காதலர் – அன்பர், என – என்று நினைத்து, எவன் கையற்றனை – ஏன் செயலற்றாய், இகுளை தோழியே!

உ. (அடிகள் அ- கசா)

  அருஞ்சுரம் அரிய பாலைவனத்தில் உள்ள, கவலை – பலவாகப் பிரிந்துள்ள வழிகளில், அசைஇய – தங்கிய, கோடியர் – கூத்தர்கள் தங்கியுள்ள, பெரும்கல் – பெரிய மலைப்பாறையின், மீமிசை – மேல் இடத்தில், இயம் – இசைக்கருவிகள், எழுந்தாங்கு – ஒலித்தாற்போல, வீழ்பிடி – காதலால் விரும்பும் பெண்யானையை, கெடுத்த இழந்த நெடும்தாள் – நீண்ட கால்களையுடைய, யானை – ஆண் யானையானது, சூர்புகல் – அச்சம் மிகுந்த, அடுக்கத்து – மலைச்சாரலில், மழைமாறு – மழையைப்போல், முழங்கும் – முழக்கமிடும், பொய்யா – என்றும் பொய்க்காத,

  நல்லிசை – நல்ல புகழ்நிறைந்த, மா – சிறந்த, வண் கொடைத்தன்மை மிக்க, புல்லி – புல்லி என்பானுக்குரிய, கவைக்கதிர் – பலவாகக் கிளைத்துள்ள கதிர்களையுடைய, வரகின் – வரகினது, யாணர் – புதியதான, பைந்தாள் – பசிய தட்டைகள் நிறைந்த, முதை – பழைய, சுவல் – மேட்டு நிலத்தை, மூழ்கிய மறைத்த, கான்சுடு – காட்டை எரிக்கும், குரு உப்புகை – மிகுந்த புகை, அருவி – அருவியின்கண் எழும், துவலையொடு – நீர்த்துளிகளோடு, மயங்கும் – கலக்கும், பெருவரை – பெரிய மலையின்கண் உள்ள, அத்தம் – வழியில், இயங்கியோர் – சென்றோராகிய,

ங (அடிகள் ரு – எ)

  அவரே – காதலராகிய அவரே, வானவரம்பன் – வான வரம்பன் என்னும் அரசனுக்குரிய, வெளியத்து அன்ன – வெளியம் என்னும் நகரத்தை ஒத்த, நம் – நமது, மாண் – பெருமை மிகுந்த, நலம் – அழகை, தம்மொடு – தம்முடன், கொண்டனர் – கொண்டுசென்றனர்.

“அவர் பிரிந்ததால் அழகு கெட்டிருக்கும் நீ அவர் திரும்பியதும் அவ்வழகினைப் பெறுவாய். நீ வாடுவதை அவர் அறியார் என்று வருந்தாதே” என்பதே இதன் கருத்தாம்.

ஆராய்ச்சிக் குறிப்பு:-

வானவரம்பன்: இப்பெயர் சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரல் ஆதனைக் குறிப்பதாக, புறநானூறு இரண்டாம் பாடலால் அறிகின்றோம். இவனைப் பற்றிய ஆராய்ச்சி பன்னிரண்டாம் வெளியீட்டில் 94, 95, 96 பக்கங்களில் காண்க. ‘இமயவரம்பன்’ என்பதுபோல வான வரம்பன்’ என்பதும் சிறப்புப் பெயர். வானத்தை எல்லையாக உடையவன் என்பதனால் உலகம் முழுவதும் இவன் ஆட்சிக்குட்பட்டது என்ற கருத்துப் போலும்.

வெளியம்: இவ்வூர் உதியன் சேரல் காலத்தில் மிகச் சிறப்புற்று விளங்கி இருத்தல் வேண்டும். அதனாலேயே வெளியத்தன்ன அழகு என்று குறிப்பிடுகின்றார்.

புல்லி: இவன் திருப்பதியை ஆண்ட செய்தி இதற்கு முன்பு சில பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நான்காம் வெளியீடு முப்பத்தோராம் பக்கம் காண்க.

மலைக்காட்சி: யானை முழக்கமிடுவது கூத்தர்களின் இசைக்கருவிகளின் முழக்கம் போன்றிருப்பது என்பதும், காட்டைச் சுட்டெரிப்பதால் உண்டாகும் புகை, அருவித்துளிகளுடன் கலக்கும் என்று கூறுவதும் அறிந்து இன்புறற்பாலது.

falls01