(ஆடி 4, 2045 / சூலை 20, 2014 இதழின் தொடர்ச்சி)

உஅ. முன்னே புறப்படு என்நெஞ்சே!

-சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

 kurunthokai02

  தலைவன் திருமணத்தை நடத்திக்கொள்ளாது வேற்றுநாட்டிற்குச் சென்றுவிட்டான். தலைவி முதலில் ஆற்றி இருந்தாளேனும், நாள் ஆக, நாள் ஆக உடல் இளைத்தது; கைகளில் அணிந்துள்ள வளையல்கள் கழன்று கழன்று விழுந்தன உறக்கம் என்பது இல்லாது கண்களினின்றும் கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. ஆற்ற முடியாத துன்பம்! இதைப் போக்கி கொள்வதற்கு வழிதேடுதல் வேண்டும். வழி என்ன? தலைவனை அடைவதே. தலைவன் இவளையடைந்து மணம் நிகழ்த்தல் வேண்டும். அல்லது தலைவி தலைவனிடத்திற்குச் சென்று மணக்குமாறு செய்தல் வேண்டும் ஒரு பெண் தன் காதல் மிகுதியால் காதலனை நாடிச்செல்லுதல் மிக அருமை. தன் காதலனை அடைய முடியாத நிலைகள் வீட்டில் ஏற்படுத்தப்படுமாயின், அஃதாவது வேறு ஆடவனுக்கு மணம் செய்து கொடுப்பதற்குப் பெற்றோர் முயல்வரேல், அப்பொழுது தலைவி தலைவன் இடத்தைத் தானே நாடிச்செல்வதால் குற்றமில்லை. ஏன்? உயிரினும் சிறந்தது நாணமேயாயினும், நாணத்திலும் சிறந்தது கற்பேயாகும். ஆயினும் இவ்விதம் தலைவி தானே செல்லும் நிலை மிக அரிதே! தலைவன் அத்தகைய நிலையில் விட்டுவைக்கமாட்டான். விட்டுவைப்பின் அவன் ஆற்றலுக்கு இழுக்காகும். வேற்று நாட்டுக்குச் சென்று தொடங்கிய வினை முற்றுப்பெறாது வரக்காலம். தாழ்ப்பின். என் செய்வது? தலைவி தன் துன்ப மிகுதியைத் தன் உயிரினும் சிறந்த தோழிக்குக் கூற விரும்பினான். வெளிப்படையாகக் கூற முடியவில்லை. நாணம் தடுத்தது; ஆயினும் தன் நெஞ்சை நோக்கிக்கூறுவது போலக் கூறினாள். தோழி அறிந்து ஆவன செய்வாள் என்று கருதினாள்.

“இருக்குமிடத்திற்குச் செல்லத்துணிந்து விட்டேன்; அது வேற்று நாடாயினும் அச்சமில்லை. அங்குச் சென்றால் தான், இளைத்து அழுது, உறக்கம் இன்றி உறையும் துன்பத்தினின்று தப்பலாம் என் நெஞ்சே புறப்படு முன்னே” என்று கூறினாள். தோழியினிடத்தில்கூடக் கூறுவதற்கு நாணமுறும் தமிழ்ப் பெண்ணின் நாகரிகக் கற்பு எவ்வளவு உயர்ந்தது.

குல்லை:- வெட்சி; போர்க்காலத்தில், பண்டைத் தமிழர் முறைப்படி ஆநிரையைக் கவரச் செல்வார் அணிந்து கொள்ளும் kullai-poo-1அடையாளப்பூ. ‘குல்லைக் கண்ணி வடுகர்’ என்பதனால் வடுகர் எப்போதும் போர்க்கோலத்திலேயே இருப்பர் என்று அறியலாம்.

குறுந்தொகை

கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும்

பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி,

ஈங்கு இவண் உறைதலும் உய்குவம்; ஆங்கே

எழு, இனி வாழி, என் நெஞ்சே! –  முனாது

குல்லைக்கண்ணி வடுகர் முனையது

வல்வேல் கட்டி நல்நாட்டு உம்பர்

மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்,

வழிபடல் சூழ்ந்திசின், அவருடைய நாட்டே!

            – மாமூலனார்

 

  இப்பாடல் குறுந்தொகையில் பதினொன்றாவது ஆகச் சேர்க்கப்பட்டுள்ளது. அகப்பொருளைப் பற்றிக் கூறும் பாடல்களுள், நாலடிக்குக் குறையாமல் எட்டடிக்கு மேற்படாமல் உள்ள பாடல்களில் நானூற்றைச் சேர்த்து, குறுந்தொகை நானூறு என்று பெயரிட்டு வழங்கினர் போலும். அடிகளால் மிகுந்த பாடல்களையுடைய அகநானூற்றை நெடுந்தொகை என்றது போல் அடிகளால் குறைந்த பாடல்களையுடைய இதைக் குறுந்தொகை என்றனர் போலும். பாரதம் பாடிய பெருந்தேவனார் இதற்குக் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார். இப்பாடல் நீங்கலாக நானூற்று ஒரு பாடல்கள் உள்ளன. ஒரு பாடலை யாரோ ஒருவர் பாடிச் சேர்த்துள்ளார். இவ்வாறே பழந்தமிழ் நூல்கள் பலவற்றுள் பழந்தமிழர் கொள்கைக்குப் பொருந்தாதபாடல்களைப் பாடிப் பிற்காலத்தோர் சேர்த்து விட்டார்கள். தொல்காப்பிய இலக்கண நூலில் கூட, மரபியலில் தமிழர்க்குப் பொருந்தாத நால்வகைச் சாதியை அறிவிக்கும் சூத்திரங்கள் பதினைந்தைச் சேர்த்துவிட்டனர். சேர்த்தால் தெரியாது போய்விடுமா? தண்ணீரில் எண்ணெயை விட்டால் மறைந்து போய்விடுமா? அதுபோல தொல்காப்பியர் பாடியன அல்ல என்பதை அவையே தாம் சேர்க்கப்பட்டுள்ள இடத்தால் அறிவிக்கின்றன.

  இந்த நானூறு பாடல்களையும் பாடியவர் இருநூற்றைந்து புலவர்கள் என்றும் இதைத் தொகுத்தவன் ‘பூரிகோ’ என்றும் பழம் சுவடிகளில் கூறப்பட்டுள்ளதாம். ஆனால் இப்பொழுது இருநூற்று ஆறு புலவர்கள் பெயர்கள் காணப்படுகின்றன.

  இந்நூல் ஒரு பழம் பாட்டில் ‘நல்ல குறுந்தொகை’ என்று சிறப்பிக்கப்படுகின்றது.

  இவற்றுள் முன்னூற்று எண்பது பாடல்களுக்குப் பேராசிரியரும் எஞ்சிய இருபது பாடல்களுக்கு நச்சினார்க்கினியரும் உரையெழுதியுள்ளார்கள் எனச் சிலபழம் பாடல்களால் அறியக் கிடக்கின்றது. ஆனால் அப்பழைய உரை நமக்குக் கிடைக்கவில்லை.

 முனைவர் உ.வே. சாமிநாத(ஐயர்) அவர்கள்உரையெழுதிவெளியிட்டுள்ளார்கள். இப்பாடலை அவர்கள் ஒரு வகையாக உரைநடைப்படுத்திப் பொருள் கூறியுள்ளார்கள் நான் வேறு வகையாக உரை நடைப்படுத்திப் பொருள் கூறியுள்ளேன்27 APRIL U VE HOUSE OPEN. உரையிலும் வேறுபாடு உண்டு.