மாமூலனார் பாடல்கள் – 6
– பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)
ரு. விழுச்சீர் வேங்கடம் பெறினும்-?
ஓர் இளைஞன் கருத்திற்கு ஒத்த காதலியை மணந்தான் மணஇன்பம் நுகர்ந்துகொண்டு இருக்கின்றான். ‘பிறர்க்கென வாழவேண்டும்’ என்ற பெரியோர் உரை நினைவிற்கு வருகின்றது. “மற்றவர்க்கு உதவிசெய்தல் வேண்டும். உதவி செய்வதற்குப் பொருள் மிக வேண்டும் அப்பொருள்தானும் நம்மால் தேடப்பட்டபொருளாக இருத்தல் வேண்டும்.” என்று நினைக்கின்றான்.
‘தலைவி’
‘அன்ப’
“எவ்வளவோ உண்மைகள் இருக்கின்றன. தாங்கள் எதைக் கருதுகின்றீர்களோ?”
“எவ்விதத்திலும் மறுக்கமுடியாத எவரும் ஒப்புக்கொள்ளக் கூடிய உண்மை ஒன்று உளது. அதைத் தான் குறிப்பிடுகின்றேன்.
“அறியேன் தலைவ!”
“உலகத்தில் பிறந்திருப்பது பொய்யல்ல”
“ஆம் உண்மையே”
“அதுபோல் இறக்கப்போவதும். . .”
“உண்மையே”
“நாம், உண்டு, உறங்கி, தலைநரைத்து, வயது முதிர்ந்து இறக்கப்போகின்றோம் அல்லது ஏதேனும் நோய் வந்து பற்ற அதனால் இறக்கப் போகின்றோம். எப்படியோ என்றோ இறக்கப்போவது உறுதி.”
“இவ்வுண்மைகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் எல்லாம் இப்போது எதற்கு?”
“எதற்கா? இறக்கும் நாம் பிறர்க்கெனப் பாடுபட்டு இறப்பது நல்லதா? வீணாக இறத்தல் நல்லதா?”
“பிறர்க்கென உழைத்து இறப்பதுதான் சிறந்தது.”
‘’அவ்விதம் பிறர் நலத்திற்காக உழைக்கின்றவர்களே கொடுத்து வைத்தவர்கள்; தவம் செய்தவர்கள்.”
“அதனால்?”
“நான் சென்று பொருள் தேடி வருகின்றேன். பொருள் இல்லையென்றால் ஒன்றுமில்லை. பசிக்கின்றவனுக்கு உணவு அளித்தால்தானே பசி நீங்கும். ஆடையற்றவனுக்கு ஆடை அளித்தால்தானே குளிர்க்குப் பயன்படும்; மானத்தைக் காப்பாற்றலாம். வாயினால் இரக்கவுரைகள் கூறிவிட்டால் போதுமா? பொருள் இருந்தால்தானே பிறர்க்கு உதவ முடியும்? மலைபோலப் பொருள் குவிந்து இருந்தாலும், கொடுக்கக் கொடுக்கக் குறைந்து விடுமல்லவா?”
“ஆம்”
“ஆதலின் நான் சென்று பொருள் தேடி வருகின்றேன் அமைதியாக ஆற்றியிரு – விரைவில் திரும்பி வருகின்றேன்.”
“போகாமலிருக்கின்ற செய்தியிருந்தால் சொல். விரைவில் திரும்பி வருகின்றேன் என்ற சொல்லை நீ திரும்பி வருங்காலத்து உயிரோடு இருப்பவர்க்கு உரை” என்று சொல்ல, நினைத்தாள். ஆயினும் கூறவில்லை. பிரிவிற்கு உடன்பட்டாள். நாள் பல சென்றன. ஒவ்வொரு நாளும் சுவரில் கோடுகிழித்துக் கொண்டே வந்தாள். அக் கோடுகள் பெருகிக்கொண்டே வந்தன. அவை, நாள் பல சென்றுவிட்டதை உணர்த்தின; தலைவன் திரும்பிவரவில்லையே என்று ஏங்கினாள்; வருந்தினாள். பலப்பல எண்ணினாள். பின்னர்
“தோழி! அவர் மறந்து விட்டாரோ?” என்றாள்.
“அம்ம! அவரா? உங்களையா? ஒருநாளும் மறவார். உங்களைப் பிரிந்து அங்கு ஒரு நொடியும் இரார். மேற்கொண்டுள்ள செயல் முற்றுப்பெற்றதும் உடனே திரும்பிவிடுவார்.
வேங்கடமலையையே அவர்க்குக் கொடுத்து அங்கேயே இருக்கவேண்டுமென்றாலும் உன்னை மறந்து இரார்”
“வேங்கடமலையா?”
“ஆம். வீரன் கள்வர் கோமான் ஆளுவது. அவன் எப்போதும் வீரர்களால் சூழப்பட்டிப்பான். அவ் வீரர்கள் வில்லும் அம்பும் கைக் கொண்டிருப்பார்கள். பகைவர் மார்பில் அவற்றைச் செலுத்துவதில் தவறார். பெரிய யானைக் கொம்புகளை மிகுதியும் உடையவர்கள், அவர்கள் நாட்டில் கிடைக்கும் தேனை விற்று நெல் பெறுவார்கள். நாள்தோறும் வருகின்றவர்க்கு யானைக்கொம்பும் நெல்லும் கொடுத்து மகிழ்வான். அவன் பெரிய வீரன், மழவர்களை வென்றவன்.”
“அப்படியா”
“வேங்கடத்தைக் கொடுத்தாலும் பொதினியை ஒத்த சிறப்புடைய உன்னை மறப்பாரா?”
“மறவார். வருவார்”
“ஆதலின் வருந்தாதே எனது ஆருயிர்த் தோழியே”
தலைவனைப் பிரிந்த தலைவியும் தோழியும் இவ்விதம் உரையாடிக் கொண்டிருந்தனர். இனி மாமூலனார் பாடலின் சுவையை நுகருங்கள்.
பாடல் – ரு
அகநானூறு: 61 : பாலை
நோற்றோர் மன்ற தாமே – கூற்றம்
கோளுற விளியார் – பிறர் கொள விளிந்தோர் எனத்
தாள் வலம் படுப்பச் சேண்புலம் படர்ந்தோர்
நாளிழை நெடுஞ்சுவர் நோக்கி நோயுழந்து
ஆழல்; வாழி தோழி;
தாழாஅது
உரும் எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங்கால்
வரிமாண் நோண் ஞாண் வன்சிலைக் கொளீஇ
அருநிறத்து அழுத்திய அம்பினர் பலருடன்
அண்ணல் யானை வெண்கோடு கொண்டு
நறவுநொடை நெல்லின் நாள் மகிழ் அயரும்
கழல் புனை திருந்துஅடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்
பழகுவர் ஆதலோ அரிதே – முனாஅது
முழவுறழ் திணிதோள் நெடுவேள் ஆவி
பொன்னுடை நெடுநகர்ப் பொதினி அன்னநின்
ஒண்கேழ் வனமுலைப் பொலிந்த
நுண்பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே
பதவுரை
நோற்றோர் மன்ற – உண்மையாகத் தவம் செய்தவர் ஆவார் (மன்ற – உண்மையை யுணர்த்தும் அசைச்சொல்; தாமே, கட்டுரைச் சுவைபட நிற்கின்றது) கூற்றம் – யமன், கோள்உற-(வயது முதிர்ந்தோ, நோயால் வருந்தியோ) கொள்ள (இறக்க) விளியார் – (பிறர்க்குப் பயன்படாது) சாவாதவராய், பிறர் கொள – பிறர் தம்மைக்கொண்டு பயன் அடைய, விளிந்தோர் – இறந்தோர்கள், என – என்று கூறி, தாள் – முயலும் எண்ணம், வலம் படுப்ப – வெற்றிகொள்ள, சேண்புலம் – நெடுந்தொலை, படர்ந்தோர் – சென்றோர், நாள் இழை – நாளைக் குறிப்பதற்குக் கிழிக்கப்படும், கோடுகள் மிக்க, நெடுஞ்சுவர் – நீண்ட சுவரை, நோக்கி – பார்த்து, நோயுழந்து – பிரிவுத் துன்பத்தால் வருந்தி, ஆழல் – துன்பக்கடலுள் ஆழாதே; வாழி – வாழ்வாயாக, தோழி – தோழியே!
தாழாஅது – காலம் தாழ்க்காமல் (உடனே), உரும்என – இடிஎன, சிலைக்கும் – ஒலிக்கும், ஊக்கமொடு – ஊக்கத்துடன், பைழ்கால் – பசியகாலினையும், வரி – வரியையும், மாண் – பெருமையையும், நோன் – வலிய, ஞாண் – கயிற்றினையும் உடைய, வன்சிலை – வலிமைமிக்க வில்லை, கொளீஇ – கொண்டு, அருநிறத்து – பகைவருடைய அரிய மார்பின்கண், அழுத்திய – செலுத்திய, அம்பினர் பலருடன் – அம்புகள் கொண்டுள்ள வீரர் பலருடன், அண்ணல் – பெருமைமிக்க, யானை – யானைகளின், வெண்கோடு – வெண்மையான கொம்புகளை, கொண்டு – பெற்று நறவு – தேனை, நொடை – விற்றதால் வரும், நெல்லின் – நெல்லினால், நாள்மகிழ் அயரும் – நாள் ஓலக்கச் சிறப்புச் செய்து மகிழும், கழல் – கழலினை, புனை – தரித்த, திருந்து அடி – அழகிய அடிகளை உடைய, கள்வர்கோமான் – வீரரின் தலைவனாகிய மழபுலம் – மழவர் நாட்டை, வணக்கிய – தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்த, மாவண் – மிகுந்த கொடைச்சிறப்பையுடைய, புல்லி- புல்லி என்பானுக்குரிய, விழவுடை -திருவிழாக்கள் மிக்க, விழுச்சீர் – உயர்ந்த புகழ் பொருந்திய, வேங்கடம் – வேங்கட மலையின் ஆட்சியை, பெறினும் – பெற்றாலும், பழகுவராதலோ – அவ்விடத்து தங்கி இருந்தலோ, அரிதே – இல்லையே!
முனாஅது – முன்பு, முழவுற்று – மத்தளத்தை ஒத்த, திணிதோள் – வலிய தோளினையுடைய, நெடுவேள் ஆவி – சிறந்த குறுநில மன்னனாகிய ஆவி என்பானின், பொன்னுடை – பொன் மிகுந்த, நெடுநகர் – உயர்ந்த வீடுகள் மிக்க, பொதினி அன்ன -பொதினியை (பழனியை) ஒத்த, நின் – உனது, ஒண்கேழ் – ஒளி மிகுந்த, வனமுலை – அழகிய முலையால் பொலிந்த விளங்கிய, நுண் – நுட்பமான வேலைப்பாடு அமைந்துள்ள, பூண் – நகைகள் அணிந்துள்ள, அகம் – மார்பை, பொருந்துதல் – தழுவுதல், மறந்தே – மறந்துவிட்டு.
இயைபு: தோழி ஆழல் வாழி! வேங்கடம் பெறினும், ஆகம் பொருந்துதல் மறந்தே பழகுவராதல் அரிதே.
வேங்கடம்: தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டின் வடக்கு எல்லையாக இருந்த மலை மாமூலனார் காலத்தும் இதுதான் வடக்கு எல்லையாக இருந்தது. இது இப்போது திருப்பதி என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. தெலுங்கர் நாடாகக் கருதப்படுகின்றது. ஆயினும் தமிழர் தங்கட்குரியது என்பதை நிலைநாட்டித் தமது வடவெல்லை மலையாக மீண்டும் கொள்ளுதல் வேண்டும். அரசியல் அமைப்பு மன்றத்தினர் மொழி வகையாக நாடுகளை வகுக்கும்போது தமிழர் அயர்ந்துவிடாது ஆவன செய்வார்களாக.
கள்வர்: களமர் என்ற சொல் கள்வர் என நிற்கின்றது களமர் – போர்க்களத்திற்கு உரிய வீரர். இப்போது கள்வர் என்ற சொல் திருடனைக் குறிக்கும்.
வரலாறு: ‘புல்லி’ என்ற சிற்றரசன் வேங்கடத்தை ஆண்டதும், மழவர்களை வென்றதும் அறிகின்றோம். “மழவர்” என்பார் தமிழ்நாட்டின் சிறந்த வீரர் ஆவார்.
“எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கை
வழுவில் வன்கை மழவர்’’
என்று ஔவையாரால் சிறப்பிக்கப்படுகின்றனர். இவர்களைத் ‘தென்னாட்டுக் கூர்க்கர்’ எனலாம். ஔவையார் வாழ்ந்து வந்தகாலத்து இவர்கட்குத் தலைவனாயிருந்தவன் அதியமான் நெடுமான் அஞ்சி. புல்லி தம்மை நாடி வந்தவர்க்கு நெல்லும் யானைக் கொம்பும் கொடுத்து மகிழ்வதைப் பொழுது போக்காகக் கொண்டிருந்தான்.
உவமை: ‘பொதினி அன்ன நின்’ என்பதில் தலைவிக்கு உவமையாக பொதினி கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பெண்களுக்கு உவமையாக சிறந்த ஊர்களைக் காட்டும் வழக்கம் சங்க காலத்துப் புலவர்களிடம் காணப்படுகின்றது.
குறிக்கோள்: தமக்கென வாழாது பிறர்க்கென வாழுதல் வேண்டுமென்பதே பண்டைத் தமிழரின் குறிக்கோள். “உழைத்தலும் பொருளீட்டுதலும் பிறர் நலத்திற்கே” என்பது முதல் மூன்றடிகளில் குறிப்பிடப்படுகின்றது. இத்தகைய குறிக்கோள் இன்றைய மக்கள் மனத்தில் இடம் பெறின் உலகில் போர் ஏது? பொருந்தா வழக்கு ஏது?
வழக்கம்: சுவர்களில் கோடுகள் கிழித்துக் கழிந்த நாள்களைக் கணக்கிடும் வழக்கம் இவர்காலத்து இருந்தது. இப்பொழுது ஒரு நாளைக்கு ஒன்றாக கிழித்தெறியும் இதழ்கள் அடங்கிய நாட்குறிப்பு அட்டை பெற்றுள்ளோம்.
(தொடரும்)
Leave a Reply