– பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

சங்க இலக்கியம்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ப் புலவர்கள்  சங்கமாகக் கூடித் தமிழைப்போற்றினர்; ஆராய்ந்தனர்; பாடல்கள் பாடினர்; அப்பாடல்களில் பலவகையானும் மறைந்தன போக, எஞ்சியிருப்பன எட்டுத் தொகையும் பத்துப் பாட்டுமே. எட்டுத்தொகை எட்டுத் தொகைநூல்களைக் கொண்டது. இவை படிப்போர் உளத்தை மகிழ்வித்து, மக்கட்பண்பை வளர்ப்பன; உலக அமைதியை நிலைநாட்டுவதற்கு மிகவும் துணை செய்வன.

இவற்றைப் பொருள் வகையானும், திணை வகையானும். பாவகையானும்  அடி வகையானும் பகுத்துத் தொகுத்தனர் நம் முன்னோர். ஆகவே அவை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகம், புறம் என்ற பெயர்களையுடைய நூல்களாக எட்டுத் தொகை நூல்களும் விளங்குகின்றன; திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப் பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்று விளங்குகின்றன பத்துப் பாடல்களும்.

இவற்றை இயற்றிய புலவர்களில் பெயர் தெரிந்தவர் நானூற்று எழுபத்து மூவர். பெயர் தெரியாதவர்களும் சிலர் உளர். இப்புலவர் பெருமக்களால் இயற்றப்பட்ட பாக்களைத் தமிழராய்ப் பிறந்தார் – தமிழ் பயில்வார் அனைவரும் படித்து இன்புறுவதற்காக, எளிய உரைநடையில் விளக்கவுரை எழுதி வாரந்தோறும் வெளியிட எண்ணியுள்ளோம். முதலில் மாமூலனார் பாடல்கள் வெளிவருகின்றன.

மாமூலனார் சீரிய செந்தமிழ்ப் புலவர். அவர் வாழ்க்கைக் குறிப்பு பின்னர் வெளியிடப்பெறும். அவர் பாடல்கள் கற்றோமனத்தை வற்றா உவகைக் கடலுள் ஆழ்த்துவன. படித்து இன்புறுவீர்களாக.

சங்கத் தமிழ் பரவின் இங்குற்ற எவரும் உயர்வர். சங்கத் தமிழ் வாழ்க! தமிழர் இழந்த பெருமையை அடைவார்களாக..

  1. ‘தோழி! அவர் மறந்தனரோ””

அன்று பொதினிமலையில், சிறியனாகிய, சாணைக்கல் செய்வோன், பிசினோடு சேர்த்துச் செய்யும் சாணைக்கால் போல் பிரியாது இருப்போம் என்றனரே! இன்று அதை மறந்தனரா? சிறந்த மூங்கிலை யொத்த தோள்களும் இளைத்துவிட்டனவே.

பொன் நகை முதலான செல்வங்களை ஈட்டி வரச் சென்றாரே! அவர் கடந்து சென்ற காடு எத்தகைய கொடியது! ஞாயிற்றின் வெப்பம் தாங்கமுடியாது நிலமும் வெடித்துவிடும். பசுமையே காணமுடியாது. மரங்கள் வற்றி நிழலற்று நிற்கும். பாறைகள் கொதிக்கும். சுனைகளில் நீர் அற்று அவ்விடங்களில் நெல்விழுந்தால் பொரிந்து விடும். அங்கு யார் செல்வார்? துணையற்ற வழியல்லவா? அங்கு நார் அற்ற முருங்கை மரங்கள் தாம் உண்டு. அவற்றின் உதிர்ந்த பூக்கள் பெருங்காற்றால் சுழற்றி வீசப்படும். அக்காட்சி, அலைபரந்து துளி வீசும் கடற்கரை போலக் காணப்படும். இத்தகைய காட்டையல்லவா கடந்து சென்றுள்ளார். என்று வருவார்? அன்று கூறிய சொல் என்ன ஆயிற்று?

அப்பொதினி, பெருமையையுடைய வேள் ஆவி என்பானுக்குரியது. அவன் – அவ் ஆவி – முருகனைப் போன்ற நல்ல போர் வெற்றியினையுடையவன்; மழவரை வென்று ஒட்டியவன்.

அப்பொதினியில் யானைகள் மிகுதியும் உண்டு. அவ்யானைகளின் கொம்புகள் அறுத்துத் திருத்தப்பட்டிருக்கும்.

தோழி! அவ்விடத்திலிருந்து அன்போடு கூறிய சொல் என்ன தெரியுமா? “பயினோடு சேர்த்திய கற்போல் பிரியலம்” (பிரியலம் – பிரியமாட்டோம்) என்ற உறுதியை மறந்தனரோ?

உவமை: பினினோடு சேர்த்த கற்பொடி கல்லாகிச் சாதனைக் கல்லாகப் பயன்படுகின்றது. பிசினோ, கல்லோ ஒன்றை விட்டு ஒன்றைப் பிரிய முடியாது; பிரியின் உடையவேண்டும். உடையின் சாணைக்கல்லாகப் பயன்படாது. அதுபோலத் தலைவனும் தலைவியும் இணைந்து வாழ்ந்தால்தான் இல்லறம் நல்லறமாக நடைபெறும். ஒருவர் பிரிந்தாலும், இல்லறம் உடைந்த சாணைக்கல்லே;  எவர்க்கும் பயன்படாது. என்ன அழகிய உவமை. பிற்காலத்து இறைவன் உலகுடன் ஒன்றாகியும், வேறாகியும், உடனாகியும் இருக்கும் நிலைமைக்கு இச்சாணைக் கல்லையே உவமையாகக் காட்டியுள்ளனர்.

வரலாறு: ஆவி என்ற வேள் பொதினியை ஆண்டதும் அங்குப் படை எடுத்து வந்த மழவரை வென்றதும் குறிப்பிடப்படுகின்றது.

நற்போர்: போர் கொடியதுதான்; நல்ல நெறியில் அறத்தை நிலைநாட்ட, வெற்றிதரும் வகையில் செய்யப்பட்டமையின் நற்போர் என்றார்.

(பாடலும் பதவுரையும் தொடரும்)