இலக்குவனாரின் ஆங்கிலத் தொல்காப்பியத்திற்கு அண்ணாவின் அணிந்துரை
தொல்காப்பிய மொழிபெயர்ப்பு: தமிழ்ப்பெருமக்களுக்குப் பெருமை நல்கும் பெருஞ்செயல் பேராசிரியர் சி.இலக்குவனாரின் தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பிற்குப் பேரறிஞர் அண்ணா அணிந்துரை இன்றமிழ்ப் புலமைமிகு இலக்குவனாரின் இவ் வாராய்ச்சி நூலை நோக்கியவுடனே விழுமம் எனும் எழிற்றமிழ்ச் சொல்லே எவருடைய உள்ளத்திலும் இயல்பாக எழும். வினைநயங் கெழுமிய இவ்வாராய்ச்சி வியப்பூட்டுகின்ற ஓர் இலக்கியக் கருவூலம் எனினும் மிகையன்று. பன்னூற் புலமையுடைய பண்டாரகர் இலக்குவனார்க்கு இஃதோர் எளிய வெற்றியேயாம். இஃது அறப்பழமையும், அழியா அழகும் நனி உயர்வும் பொலியும் நற்றமிழ் இலக்கணப் பேழையாகிய ஒல்காப்…