“என் சுயசரிதை“1. என் இளம் பருவ சரித்திரம் “பம்மல் விசயரங்க முதலியார் இரண்டாவது விவாகத்தின் நான்காவது குமாரன் திருஞான சம்பந்தம் 1873-ஆம் வருடம் பிப்பிரவரி மாதம் 1-ஆந்தேதிக்குச் சரியான ஆங்கீரச வருடம் தை மாதம் 21ஆந்தேதி சனிக்கிழமை உத்திராட நட்சத்திரத்தில் சனனம் சென்னப்பட்டணத்தில்” என்று நான் தகப்பனார் விசயரங்க முதலியார் எழுதி வைத்துவிட்டுப்போன குடும்ப புத்தகத்தில் அவர் கையெழுத்திலிருக்கிறது. நான் இப்போது இதை எழுதத் தொடங்கும்போது வசிக்கும் ஆச்சாரப்பன் வீதி 70-ஆம் எண் வீட்டில் முதற்கட்டில் வடகிழக்கு மூலையில் உள்ள அறையில் நான் பிறந்ததாக…