(அகல் விளக்கு – மு.வரதராசனார். 30. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 13 மாசி மாதம் தொடங்கியது. பொதுவாக எல்லாருமே படிப்பில் முனைந்து நின்றார்கள். பகலும் இரவும் எல்லாரும் புத்தகமும் கையுமாக இருந்தார்கள். சிறப்பாக, இரண்டாம் இடைநிலை(இண்டர்) வகுப்பில் இருந்தவர்களும் பல்கலைக்கழகத் தேர்வுக்குச் செல்லும் மற்ற மாணவர்களும் ஓயாமல் படித்தார்கள். அவர்களின் அறையில் இரவில் நெடுநேரம் விளக்குகளின் ஒளி காணப்பட்டது. சந்திரனும் படித்தான். தேர்வு நெருக்கத்தில் ஊக்கம் ஊட்டிச் சந்திரனுடைய தந்தை எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் சந்திரனைக் கண்டு நன்றாகப் படிக்குமாறு சொல்லவேண்டும்…