இனியொருநாள் வந்திடாதா? தமிழர் எல்லாம் எழுச்சியுற்றே செந்தமிழில் பேசி டாரா? கனியிருக்கக் காய்தின்னும் போக்கை மாற்றிக் கனிமொழியாம் நற்றமிழில் கற்றி டாரா? தனித்தமிழால் கல்விகற்றே உயர்ந்தி டாரா? சங்கக்காலம் மீண்டெழுந்தே வந்தி டாதா? இனித்திடும்நல் இலக்கியங்கள் தோன்றி டாதா? இனியேனும் தமிழினமே விழிப்பு கொள்வாய்! தமிழ்மொழியை மறக்கடிக்கும் மழலைப் பள்ளி தமிழர்க்குத் தேவைதானா? தமிழில் கற்றால் வாய்ப்பின்றி வாழவழி யற்றுப் போமோ? மறத்தமிழன் யாமென்று சொல்லல் பொய்யோ? வாய்கிழிய தமிழ்மொழியை வாழ்த்தி விட்டு மாற்றானின் மொழிவழியில் கற்பித் தல்ஏன்? தாய்தன்னைப் பேணுதல்நம் கடமை யன்றோ?…