இசை, தமிழோடு இயைந்து கிடப்பதை இசைவாணர் மறந்தனர் – அண்ணா
இசை, தமிழோடு இணைபிரியாமல் இயைந்து கிடப்பதை இசைவாணர் மறந்தனர் இப்பொழுதுதான் தமிழ்க் கலையுணர்ச்சி, தமிழரிடம் புகுந்திருக்கிறது. பல வழிகளில் தமிழ்க் கலைகளை வளர்க்க முயன்று வருகின்றனர். இம்முயற்சியில் இசைக் கலை வளர்ச்சியும் ஒன்று. இசைக் கலை தமிழுக்குப் புதிதன்று. தமிழோடு பிறந்தது; தமிழோடு வளர்ந்து, இன்றும் தமிழோடு இணைபிரியாமல் இயைந்து கிடக்கின்றது. இவ்வுண்மையை இசைவாணர் மறந்தனர். ஆதலால் இடைக்காலத்தில் மழுங்கி விட்டது. பேரறிஞர் அண்ணா: தமிழரின் மறுமலர்ச்சி: பக்கம்.18-19
தாய் மொழியிலேயே எல்லாம்! – பேரறிஞர் அண்ணா
தாய் மொழியிலேயே எல்லாம்! தமிழ்நாட்டார் மட்டுமே வேற்றுமொழியில் பாடுவதைக் கேட்கின்றனர். தமிழ் நாட்டைப் போல் வேறு எந்த நாட்டிலும் அந்த நாட்டின் மொழியல்லாத வேறு மொழியில் சங்கீதம் பாடுவதைக் கேட்க முடியாது. ஒவ்வொரு நாட்டினரும் தங்கள் தங்கள் தாய் மொழியிலேயே எல்லாக் கலைகளையும் வளர்ச்சி பெற்று வருகின்றனர்; இல்லாத கலைகளையும் புதிதாக ஆக்கி வருகின்றனர். தமிழரைப் போலத் தாய்மொழிக் கலை உணர்ச்சியற்றவர்களை எந்த நாட்டிலும் காணமுடியாது. பேரறிஞர் அண்ணா : தமிழரின் மறுமலர்ச்சி: பக்கம்.18