என் தமிழா? கட்டாயம் இந்திதனைக் கற்க அரசினர்கள் சட்டமியற்றுவதில் சம்மதமோ என்தமிழா! கன்னல் தமிழ்க்கல்வி கட்டாய மாக்காமல் இன்னல்தரும் இந்தியினை எண்ணுவதோ என்தமிழா! தாய்க்குச் சலுகையின்றித் தாழ்கின்றாள் இந்திஎனும் பேய்க்கு நறுநெய்பால் பெய்கஎன்றார் என்தமிழா? உறவிட்ட பார்ப்பனர்கள் இந்திஎன ஊளையிட்டும் பிறவிக் குணங்காட்டும் பெற்றியுணர் என்தமிழா! ‘தமிழ் அழியுமானால் தமிழர் அழிவர்’ — இதை நமைவிழுங்க வந்தவர்கள் நன்கறிவர் என்தமிழா! தம்மவர்கள் நன்மைக்கே தக்கதென்றால் இந்திதனை நம்மவர்கள் அன்னவர்கால் நக்குகின்றார் என்தமிழா! உடல்காக்கச் சோறில்லை என்னுங்கால் நம்பகைவர் கடல்காட்டி வீழ்என்று கத்துகின்றார் என்தமிழா! தென்றற்…