தெளிந்தவர் வாக்கு
தெளிந்தவர் வாக்கு கொடுக்கப்பட்ட புகார்களை வரிசையாய் எண்களிட்டு வாகாய் அடுக்கிவைக்கும் காட்சிக் கூடமொன்று கண்டுகளிக்க உள்ளதெனக் கண்டவர்கள் சொன்னார்கள்! கயமைத்தனத்தைக் குத்தகையெடுத்துக் கழிபேருவகை எய்தியோர் களிநடம் புரிய அரங்குகள் அமைத்துத்தரும் ஆணையம் உண்டென்று அறிந்தவர்கள் சொன்னார்கள்! சீர்திருத்தம் எனச்சொல்லி ஓர்திருத்தமும் செய்யாத நாடறிந்த நல்லோரவை நம்நாட்டில் உண்டென்று நன்கறிந்தோர் சொன்னார்கள்! தப்படியும் சேப்படியும் ஒப்பில்லாமல் செய்தவர்கள் எப்படியும் வெற்றிபெற்றுக் கறைவாழ்வு வாழ்ந்திடவே கலங்கரை விளக்கமாய்க் கலங்காது பணியாற்றும் மெத்தபடித்த மேதையோரவை இத்தமிழ் நாட்டிலும் உண்டெனும் உண்மையைத் தெளிந்தவர்கள் சொன்னார்கள் தேர்தல் ஆணையமென்று! தமிழ் சிவா