யாண்டு பலவின்றியும் நரையுள வாகுதல் யாங்கா கியர் என வினவுதி ராயின்? ஆண்டநம் மக்கள் அடிமைக ளாயினர்; பூண்டநம் பண்பு போலிய தாகின்று நற்றமிழ் மறந்தனர்; நானில மதனில் பிறமொழிப் பற்றில் பெரியோ ராயினர்; தமிழகத் தெருவில் தமிழ்தான் இல்லை; ஊரும் பேரும் உயர்மொழி வழக்கும் அயல்மொழி தன்னில் அமைந்திடக் கண்டோம்; தமிழைக் கற்றோர் தாழ்நிலை உறுவதால் தமிழைப் பயிலத் தமிழரே வந்திலர்; ஆட்சி மொழியும் அன்னை மொழிஎனச் சொல்லள வாக்கினர்; தூத்தமிழ் வெறுக்கும் அயல்மொழிக் காதலர் ஆட்சி கொண்டுளர்; உயர்கல் விக்குறு ஊடக…