தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள் மிகப் பழங்காலத் தொட்டுத் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. அவற்றை இயற்றிய ஆசிரியர்களை நூலாசிரியர்கள் என்பார்கள். நூல்களை விளக்கும் ஆசிரியர்கள் இருவகைப்படுவார்கள். மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லி நூல்களை விளக்கும் ஆசிரியர்களைப் பயிற்று (போதக) ஆசிரியர் என்பர். நூல்களின் உரைகளை இயற்றிப் பலருக்கும் பயன்படும்படி வழங்கியவர்கள் உரையாசிரியர்கள். நூல்களை மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லும் ஆசிரியர்களுக்கு உரைகள் துணையாக நிற்கின்றன. நூலாசிரியர்களுக்கு எத்துணை மதிப்பு உண்டோ அத்துணை மதிப்பு உரையாசிரியர்களுக்கும் உண்டு. -கி.வா.சகநாதன், உரையாசிரியர்கள் நூலின் சிறப்புரை