கட்டிளங் கன்னியாய்க் காலம் கடந்து நின்றாய் சொட்டும் அமிர்தத் துவர்வாயாய் –  மட்டில்லா மாட்சி யுடையாயிம் மாநிலத்தின் கட்டிலில் நீ ஆட்சி செய்வ தென்றோ அமர்ந்து.  ‘மொழித்திற முட்டறுத்தல்’ என்னும் இத்தொடர், இயற்றமிழ்ச் செய்யுட்களில் முன் பின்னாகக் கிடக்கும் சொற்களைக் கொண்டு கூட்டி முறைப்படுத்தி இலக்கண விதிகாட்டி விளங்க வைத்தல் எனப் பொருள்படும். ஈண்டெழுதப்படும் கட்டுரை இப்பொருள் குறித்ததன்று. மொழித் தோற்றம் பற்றியும் மொழி வகை பற்றியும் மொழி நூலறிஞர் கொண்டுள்ள கருத்துகளில் சிலவற்றின் முட்டறுத்து எம் கருத்து விளக்குதலும், நாகரிக மக்களாற்…