உ.வே.சா.வின் என் சரித்திரம் 58 : புலமையும் வறுமையும்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 57 : அன்பு மயம் – தொடர்ச்சி) என் சரித்திரம் சூரியமூலையிலிருந்து என் பெற்றோர்களிடமும் மாதாமகரிடமும் அம்மான் முதலியவர்களிடமும் விடைபெற்று நான் மாயூரம் வந்து சேர்ந்தேன். வந்தபோது நான் பிரிந்திருந்த பத்து நாட்களில் ஒரு பெரிய இலாபத்தை நான் இழந்துவிட்டதாக அறிந்தேன். நான் ஊருக்குப் போயிருந்த காலத்தில் பிள்ளையவர்கள் சிலருக்குப் பெரியபுராணத்தை ஆரம்பித்துப் பாடஞ் சொல்லி வந்தார். பெரிய புராணப்பாடம் தஞ்சை சில்லாவில் சில முக்கியமான தேவத்தானங்களின் விசாரணை திருவாவடுதுறை ஆதீனத்துக்கு உண்டு. மாயூரத்தில் சிரீ மாயூரநாதர் கோயிலும் சிரீ…