தமிழ்மொழிக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர், தொல்காப்பியத்தின் இரண்டாவது அதிகாரமாகிய சொல்லதிகாரத்தில் சொல்லினது இலக்கணத்தைக் கிளவியாக்கம் தொடங்கி எச்சவியல் ஈறாக ஒன்பது இயல்களில் விரித்துக் கூறுகிறார். இறுதி இயலாகிய எச்சவியலின் முதல் நூற்பாவில் தமிழ்மொழியில் செய்யுள் இயற்றப் பயன்படும் சொல்லைப் பற்றிக் கூறுகிறார்.. சொற்களின் தன்மைக்கேற்ப அவற்றைப் பெயர், வினை, இடை, உரி என நான்காக வகுத்த தொல்காப்பியர் சொற்கள் வழங்கும் இடத்தின் அடிப்படையில் நான்கு வகையாக அவற்றைப் பாகுபடுத்துகிறார். அவை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் எனக் கூறுகிறார். இயற்சொல் திரிசொல் திசைச்சொல்…