செம்மொழி என்னும் போதினிலே …! – முனைவர் ஒளவை நடராசன்
(சூன் 6 – தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்) “ஆங்கிலம் பேசும் அமெரிக்க நாட்டுப் பேராசிரியராகிய நான் ஆர்வேடு பல்கலைக்கழகத்தில் வடமொழியில் பட்டம் பெற்றேன். இலத்தீன், கிரேக்க செம்மொழிகளை அறிந்து கற்றேன். கிழக்காசிய மொழிகள் துறையில் பணியாற்றியதால் இந்திய மொழிகள், பிற ஆசிய மொழிகளின் இலக்கியச் சிறப்புகளையும் அறிந்தேன். பன்மொழிப் புலமையின் பின்னணியில் செம்மொழி தகைமையைச் சீர்தூக்கும் தகுதி எனக்கு உண்டு. செவ்வியல் இலக்கியங்களைக் கொண்ட மொழிகளில், தமிழ் சிறப்பான இடம் பெற்றுள்ளது என்பதை எந்தத் தயக்கமுமின்றி உறுதியாக என்னால் எடுத்துச் சொல்ல முடியும்….