ஆரியப் பித்தலாட்டத்திற்குச் சரியான மருந்து திருக்குறள்தான்! – தந்தை பெரியார்
திருக்குறள் குறளை மெச்சுகிறார்களே ஓழிய காரியத்தில் அதை மலந்துடைக்கும் துண்டுக் காகிதமாகவே மக்கள் கருதுகிறார்கள். அதோடு அதற்கு நேர்மாறாக விரோதமான கீதையைப் போற்றுகிறார்கள்.
அறிவால் உய்த்துணர்ந்து ஒப்புக் கொள்ளக் கூடியனவும் இயற்கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்திருக்கக் கூடியனவும் ஆன கருத்துகளையே கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள்.
ஆரியக்கலை, பண்பு, ஒழுக்கம், நெறி முதலியவை யாவும் பெரிதும் தமிழர்களுடைய கலை, பண்பு, நெறி, ஒழுக்கம் முதலியவற்றிற்குத் தலைகீழ் மாறுபட்டதென்பதும், அம்மாறுபாடுகளைக் காட்டவே சிறப்பாகக் குறள் உண்டாக்கப்பட்டது என்பதும் எனது உறுதியான கருத்தாகும்.
நீங்கள் என்ன சமயத்தார் என்று கேட்டால் “வள்ளுவர் சமயம்” என்று சொல்லுங்கள். உங்கள் நெறி என்னவென்றால் “குறள்நெறி” என்று கூறுங்கள். அப்படிச் சொன்னால் எந்தப் பிற்போக்குவாதியும் எப்படிப்பட்ட சூழ்ச்சிக்காரரும் எதிர்நிற்க மாட்டான். யாரும் குறளை மறுக்க முடியாததே இதற்குக் காரணம்.
ஆரியப் பித்தலாட்டத்திற்குச் சரியான மருந்து – மறுப்பு திருக்குறள்தான்! திருவள்ளுவமாலையில் பல புலவர்களே இதைக் கூறியுள்ளார். ஆரியப்புரட்டை வெளியாக்கி மடமையைப் போக்கும் நூலே திருக்குறள். ஆதலால் குறள்வழி நின்று பகுத்தறிவு பெற்றுப் புது மனிதனாகுங்கள்.
ஒரு மனிதன் உண்மையான குறள் பக்தனாக இருப்பானானால், அவன் குறளுக்கு எதிரான எல்லாக் கொள்கைகளுக்கும் எதிரானவனாக இருக்க வேண்டும். எந்தக் கருத்துகளை எதிர்க்க, ஒழிக்க குறள் ஏற்பட்டதோ – குறளைப் பயன்படுத்துகிறானோ அந்தக் கருத்துகளை எதிர்க்கும் கொள்கைகளை ஒழிக்க முயற்சிப்பவனாய் இருக்க வேண்டும்.
தமிழ் நூல்களையெல்லாம் பதினெட்டாம் பெருக்கில் ஆற்றில் போடச் செய்தும், நெருப்பில் பொசுக்கிப் பாழாக்கியும் விட்டனர், தமிழ்ப் பகைவர்கள். எஞ்சியிருப்பது குறள் ஒன்றேயாகும். நமது திருவள்ளுவர் வகுத்த இக்குறள் வழிச்சென்றால் நம் நாட்டுக்கு மட்டுமின்றி வடநாட்டுக்கும், உலகத்துக்கும்கூட நாம் நன்னெறி காட்டியவர்கள் என்ற பெருமையை மீண்டும் அடையலாம்.
– தந்தை பெரியார்
Leave a Reply