செவ்வியல் இலக்கியங்களில் கலைச்சொல் மேலாண்மை 2 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஆடி 17, 2046 / ஆக 02, 2015 தொடர்ச்சி)
வினைப்பெயர், செய்யும் செயலைப் பொருத்தி அமையும் பெயர்கள். தச்சன், பொன் கொல்லன், கொல்லன் போன்ற பெயர்கள். உலகம் முழுவதும் மரவேலை செய்பவன் தச்சன்தான். ஆங்கிலத்தில் carpenter என்றழைக்கின்றோம். இது உலகம் முழுவதும் விளங்கும் புரியும் வினைப்பெயரே.
பெயர்கள் பலவகைப்படும். இவற்றை ஒல்காப்புகழ் தொல்காப்பியர்,
நிலப்பெயர், குடிப்பெயர், குழுவின் பெயரே
வினைப்பெயர், உடைப்பெயர், பண்பு கொள் பெயரே,
பல்லோர் குறித்த முறைநிலைப் பெயரே
பல்லோர் குறித்த சினை நிலைப் பெயரே
பல்லோர் குறித்த திணை நிலைப் பெயரே,
கூடி வரும் வழக்கின் ஆடியல் பெயரே
இன்றியவர் என்னும் எண்ணியல் பெயரோடு
அன்றி அனைத்தும் அவற்றியல் பினவே. (தொல்காப்பியம்.650)
என வகைப்படுத்துகிறார்.
பெயர்ச்சொற்களுடன் ஏதேனும் விகுதியைச் சேர்த்து நாம் ஆக்கப் பெயர்களை உருவாக்குகிறோம். சான்றாக, முதல், தொழில் போன்றவற்றுடன் ஆளி என்னும் விகுதியைச் சேர்த்தால் முதலாளி, தொழிலாளி என மாறுகின்றன. மேலாண்மைத்துறையில் இத்தகைய சொற்கள் இடம் பெறுகின்றன. வினைப்பெயர்கள் எனப்பெறும் தொழில் புரிவோரைக் குறிக்கும் பெயர்கள் அல்லது பதவிப் பெயர்கள், ஆகியனவும் மேலாண்மையியலில் அடங்குவனே! இன்றைய பெயர்களுக்கு முன்னோடியாக அன்று சிறுசொல்லாகவும் பொருள்புரிந்ததாகவும் பயன்படுத்தியுள்ளார்கள். இவற்றுள் சான்றுக்குப் பின்வருவனவற்றைப் பார்ப்போம்.
அரிஞர்(2) (Grain reapers), அரிநர்(10)(Grain reapers), அறைநர்(2) (Sugarcane cutters), அறையுநர்(1) (Announcer) ஆடுநர்(6)/ஆடுமகள்(7) (Dancers), ஆயர்(25) (Head of Cattle herders), ஆய்மகள்(6) (Head of Cattleherder female), இடையர்(1)/இடையன்(9)(Cattleherder) இயவர்(9)(Musicians), இழிசினன்(3)(cot-worker/Drummer) [சிலர் இழிசினன் என்றால் இழிமகன் எனத் தவறாகப் பொருள் தருவர்.], உமணர்(25)(Salt merchant), உழவர்(36)/உழவன்(4) (Farmer), எயினர்(7)/எயினன்(1) (Hunters), கடைசியர்(1) (Female farmers), கம்மியர்(2)/கம்மியன்(6) (mechanic), கலம்செய்கோ(2) (Potter), காவலர்/காவலன்(35) (Guard), கிணைஞன்(1)/ கிணைவன்(1)/கிணைவ(1)/கிணைமகன்(1)/கிணைமகள்(3),கிணையர்(1) (Kinai drummer), குறும்பர்(1) (Warriors in a fort), கொல்லன்(13) (Metal-smith), கூளியர்(7) (Pioneers/Sappers), கோடியர்(18) (Artistes who act and dance), கோவலன்(1)/ கோவலர்(39) (Cattle herders), சாகாடு உகைப்போன்(1) (Wagon driver), தச்ச (1)/ தச்சன்(4) (Carpenter) துடிய(1), துடியன்(1), துடியர்(1) (Thudi drummers) தொழுவர்(7)(Agriculturist), பரதவர்(43+1+2+1) (Fishermen), பறையன்(1+1) (Parai drummer), பறைக் கிணைமகன்(1) (Kinai drummer), பாகன்(9) (Elephant driver), பாடினி(14) (Female musician), பாடுநர்(20) (Musician), பான்மகள்(5)/ பான்மகன்(7)/பாண(ன்)(43)/பாணர்(48)/பாணன்(35) (Bard), புலவ(5)/புலவர்(32)/ புலவன்(2)/ புலவிர்(1)/புலவீர்(4)/புலவோர்(2)/புலவாணர்(1) (Poets), புலத்தி(1)/ புலைத்தி(8) (Washerwoman) புலைய(1)/ புலையர்(1)/ புலையன்(6) (Drummer/ Funerary rite performer), புனவர்(3)/புனவன்(4) (Mountain farmers), பொருந(ன்)(19)/பொருநர்(13)/பொருநன்(22)(War bard),மருத்துவர்(1)/மருத்துவன்(1) (Physician), மல்ல(ன்)(1), மல்லர்(2),மல்லன்(1) (Soldier), மழவர்(22) (Warriors), மள்ள(ன்)(6), மள்ளர்(30), மள்ளன்(4) (Warrior), மறவர்(87)/மறவோர்(1)/ மறவன்(11)(Wasteland warriors), யாமம் கொள்பவர்(3), யாமங்காவலர்(1)(Night patrol), யானை காப்பனர்(1) (Elephant keepers) வேட்டு(வன்)(1)/வேட்டுவர்(7)/வேட்டுவன்(13) (Hunter), வயவர்(23)/வயவன்(1) (Warrior), வயிரியர்(12)/வயிரிய(ன்)(1)/வயிரியமாக்கள்(2) (Artists),வலவ(ன்)(14)/ வலவன்(11)/வலவா(1), வலவோய்(1) (Charioteer/Pilot), வலைஞர்(4) (Fishermen), வாலுவன்(2) (Cook), விலைஞர்(4)/வினைநலப்பெண்டிர்(1)/விலைவன்(1) (One who does a thing for money), வினைஞர்(17)/ வினைநர்(1)/வினைய(ன்)(1)/ வினையர்(1)/வினைவர்(3)/வினைவன்(1) (Executives, Labourers), விறலி(17)/விறலியர்(25) (Female artistes).
இன்றைக்கு நாம் சங்க இலக்கியப் பெயர்கள் அடிப்படையில் பல பெயர்களைக் குறிப்பிடுகின்றோம். அவை சுருக்கமாகவே உள்ளன. அவ்வாறில்லாமல் விரிவாகக் குறிக்கும் பெயர்களும் உள்ளன. அவற்றையும் சுருக்கமாகவே கூறலாம். கருவியிசைக்கலைஞர் எனச் சொல்லாமல் இயவர் எனலாம்; படைத்துறையில் ‘படைகட்கு முன்சென்று வழி செப்பனிடுபவர் படை’ என்று சொல்லாமல் கூளிப்படை எனலாம். (காசுக்கு மாரடிக்கும் கூலிப்படை வேறு.); உப்பு விற்பனையாளர் என்று சொல்லாமல் உமணர் எனலாம்; வானஊர்தி ஓட்டுநர் என்று சொல்லாமல் வலவன் எனலாம்; இரவுநேரச் சுற்றுக்காவலர் என்று சொல்லாமல் யாமங்காவலர் எனலாம்; யானையைப் பராமரிக்கும் ஊழியர் என்று சொல்லாமல் யானை காப்பனர் எனலாம்; பொறியாளரைச்சுருக்கிப் பொறிஞர் எனலாம்; செயல் அலுவலர் (Executive Officers) என்று சொல்லாமல் வினைஞர் எனலாம்; முதன்மை வினைஞர்-Chief Executive எனலாம்; . மேலாண் வினைஞர் – Management Executive; விற்பனை வினைஞர் – Sales Executive; விருந்தோம்பல் வினைஞர் – Hospitality Executive எனலாம்.
கண்காட்சி வினைஞர் – Exhibition Executive இவ்வாறு பலவற்றைச் சங்கக்காலக் கலைச்சொற்களை முன்னோடியாகக் கொண்டு நாம் சுருக்கமாகக் கையாளலாம்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply