(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாங] – தொடர்ச்சி)

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙாஙா] –

 3. தமிழ்நலப் போராளி – தொடர்ச்சி

 பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும் பேராசிரியர் இலக்குவனாரும் தமிழ் காக்கும் எண்ணங்களில் ஒன்றுபட்டவர்கள். பாவேந்தரின் தமிழியக்க எண்ணங்களுக்கு வடிவம் தந்தவர் பேராசிரியர்; பாவேந்தர் வகுத்த தமிழ்ப்போராளி இலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர் பேராசிரியர் எனத் தமிழ் உணர்வாளர்கள் உரைப்பர். அதே நேரம் மூத்த தலைமுறையினர் பேராசிரியரின் வாழ்வுப்பாதையைக் குறியீடாகக் கொண்டு தமிழ்உணர்வுப் பாடல்களைப் படைத்தவர் பாவேந்தர் என்பர். இரண்டிலும் உண்மைகள் உள எனவும் ஆன்றோர் எண்ணத்தால் ஒருவரே எனவும் கொள்ளலாம். இதற்குச் சான்றாகப் பேராசிரியரின் தமிழ் வருகைப் பதிவு குறித்த பாவேந்தரின் பதிவு குறித்துக் காண்போம். நெல்லையில் பேராசிரியரிடம் அப்பொழுது பயின்ற எளிமை ஏந்தல் தோழர் நல்லக்கண்ணு அவர்கள், பேராசிரியர் வருகைப்பதிவின் பொழுது ‘உள்ளேன் ஐயா’ என்று சொல்ல அறிவுறுத்தியது ஓர் இயக்கமாகத் தமிழ்நாடெங்கணும் பரவியது என்கிறார். இதற்குச் சில ஆசிரியர்களிடம் இருந்து எதிர்ப்புகளும் வந்தன. ‘உள்ளேன் ஐயா’ என்று சொல்வதை மறுக்கும் ஆசிரியர்களை மாணவர்கள் எதிர்த்ததுண்டா என்று கேட்டுப் பாவேந்தர் பாரதிதாசன்,

ஆரிய ஆசான் பேரைச் சொல்லி

 அழைக்க அதற்குத் தமிழ்மா ணாக்கன்

 ‘உள்ளேன் ஐயா’ என்றே உரைத்தான்

  ‘அப்படிச் சொல்லல் தப்படா’ என்ற இழிஞனை

எதிர்த்த துண்டா மாணவன்?”

 எனப் பாடிப் பேராசிரியரின் தொண்டினை ஆவணமாக்கி உள்ளார்.

 இக்காலத் தலைமுறையினர் சிலருக்கு ஐயம் வரலாம். பேராசிரியர் சி.இலக்குவனார் கல்வியாளராகத் தம் கடமையை ஆற்றினார்; மாணவர்களை நன்னிலை அடைய உருவாக்கினார்; சில புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திச் செயல்படுத்தி இருக்கிறார்; இவற்றில் என்ன பெரிய சிறப்பு உள்ளது என்றுகூட அறியாமையால் எண்ணலாம். பேராசிரியர் சி.இலக்குவனார் தம் பணிகளை எளிதில் ஆற்றும் வாய்ப்பான சூழல் இல்லாதபோதும் தன்னலம் நாடாமல் தமிழ்நலம் நாடி ஓயாது அருந்தொண்டுகள் ஆற்றினார் என்பதும்  ஒவ்வொன்றையும் போராடியே செய்து முடித்தார் என்பதும்தான் அவரது போராண்மைக்குச் சான்றாகும். பள்ளியில் தமிழாசிரியராகச் சேர்ந்தது முதலே மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் பொழுது பாடத்தோடு தொடர்புடைய வேர்ச்சொல் விளக்கங்களை அளித்துத் தமிழின் தூய்மையை விளக்குதல்; பாடங்கள் அடிப்படையில் சீர்திருத்தக் கருத்துகளை உள்ளத்தில் பதிய வைத்தல்; தமிழ்க்காப்பு உணர்வினை விதைத்தல் என அரும்பணியாற்றினார். எனவே, தமிழ்ப்பகைவர்கள் இவருக்கு எதிராகத் தொடக்கம் முதலே செயல்பட்டு வந்துள்ளனர். பணி விலக்கலையும் காவல்துறை நடவடிக்கையையும் வலியுறுத்தி முதலில் குறிப்பிட்டவாறான தொல்லைகள் மூலம், மன உளைச்சலிலாவது தள்ளி அவரின் தமிழ்ப்பணிக்கு முற்றுப்புள்ளி இட வைக்க முயன்றனர். போராளிகளுக்கு எதிர்ப்புகள்தாமே ஊட்டமாக அமையும். எது கண்டும் அஞ்சாமல் பேராசிரியர் தம்  பணியை முன்னிலும் விரைவு படுத்தினார்; தமிழ் உரிமை உணர்வை மாணவர்களிடம் மட்டுமல்லாமல் பொது மக்களிடமும் உண்டாக்கிய போராளியாகத் திகழ்ந்தார்.

 தமிழில் பேசுவதாலும் பிறரைத் தமிழில் பேச ஆற்றுப்படுத்துவதாலும் தம் வருவாயைத் தமிழ்ப்பணிக்கென செலவிடுவதாலும் தமிழாசிரியர் கூட்டமே அவரைப் பிழைக்கத் தெரியாத அப்பாவி என்று கூறி வந்தது. இது குறித்துப் பேராசிரியரே பின்வருமாறு எழுதி உள்ளார்:

  “தமிழரை ஒழிந்த ஏனையோர் எல்லாரும் தம் மொழியாளரைக் காணுங்கால் தம் மொழியிலேயே உரையாடுகின்றனர்.  தமிழர் மட்டும்தான் தம் மொழியை மறந்து ஆங்கிலத்தில் உரையாடுகின்றனர் என்று கூறும் பழிச்சோல் நீங்கிலது. தமிழால் வாழுகின்ற-தமிழைக் காக்க வேண்டிய தமிழாசிரியர்களை  இன்னும் இந்நோய் விட்டபாடில்லை.  ஆங்கிலேயர் ஆட்சியகன்றும் ஆங்கில மொழிச் செல்வாக்கு தமிழாசிரியர்களையும் ஆட்டிப் படைப்பது விந்தையினும் விந்தை. ஆகவே, தமிழ்ப் பேராசிரியனாகிய யான் தமிழுரிமை நாடித் தொண்டாற்ற முற்படுகின்றபோது, அவர் ஓர் அப்பாவி!  பிழைக்கத் தெரியாதவர் என்று பிறர் கூறும் எள்ளல் உரைக்கு இலக்காக நேரிடுகின்றது.

  தமிழாசிரியர் நிலை குறித்துப் பேராசிரியர் தெரிவித்த கருத்தின் மூலம், எத்தகைய சூழலில் அவர் தமிழாசிரியர்களையும் எதிர்த்தே அவர்களின் நலனுக்காகவும் தமிழக நலனுக்காகவும் போராடி வந்துள்ளார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்