thalaippu-thirukkuralilkalaichorkal1

  இன்றைய கலைச்சொற்கள் பெரும்பான்மையன சங்க இலக்கியச் சொற்கள் அல்லது சங்க இலக்கியச் சொற்களின் மறுவடிவங்களாகத்தான் உள்ளன. அந்த வகையில் சங்க இலக்கியக் காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்பட வேண்டிய திருக்குறளில் உள்ள கலைச்சொற்கள் பலவும் இன்றும் நடைமுறையில் உள்ளன. திருக்குறளில் உள்ள சொற்கள் பிற சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற சொற்களாக அமைவன; பிற சங்க இலக்கியங்களில் இடம் பெறாவிட்டாலும் அக்காலமாக இருக்கக்கூடிய சொற்கள் (இவற்றிற்கு ஆதாரம் கிடையாது.); புதிய சொற்கள் என மூவகைப்படும். இங்கு நாம் திருக்குறளில் இடம் பெற்றுள்ள கலைச்சொற்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

வாரி – source of income

  வருவாய் தொடர்பான சொற்கள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளன. இன்று நாம் வருவாய், வருமானம், ஈட்டம், எனப் பலச் சொற்களை revenue, income, proceeds   முதலான சொற்களுக்கு வரையறையின்றிப் பயன்படுத்தி வருகிறோம்.

  திருவள்ளுவர் வாரி (குறள் 14, 512), ஈட்டல் (குறள் 385), ஈட்டம்(குறள் 1003), ஆகாறு (குறள் 478), போகாறு (குறள் 478), ஆகிய சொற்களை வரவு செலவு தொடர்பாகப் பயன்படுத்தி உள்ளார்.

வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை

ஆராய்வான் செய்க வினை (குறள் 512)

  வாரி என்றால் ‘பொருள் வரும்வாயில்கள்’ என்கிறார் பரிமேலழகர். ‘பொருள் வருவதற்கு இடமானவை’ என்கிறார் மணக்குடவர். ‘பொருள் வருவாய்’ என்கிறார் தேவநேயப் பாவாணர். ‘பொருள்வரும் வழிகள்’ என்கிறார் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்.

ஈட்டம் – collection of wealth / fund

இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த

வகுத்தலும் வல்ல தரசு (குறள் 385)

  ஈட்டலும் – ‘அங்ஙனம் வந்தவற்றை ஒருவழித் தொகுத்தலும், காத்தலும்’ என்கிறார் பரிமேலழகர்; ‘அவ்வருவாய்களின் வழி வந்த பொருள்களை ஓரிடத்துத் தொகுத்தலும்” என்கிறார் ஞா.தேவநேயப் பாவாணர்; ‘நாட்டில் கிடைக்கப் பெறாதனவற்றைக் கிடைக்குமிடங்களிலிருந்து சேர்த்தல்’ என்கிறார் சி.இலக்குவனார்

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்

தோற்றம் நிலக்குப் பொறை (குறள் 1003)

  பரிமேலழகர், மணக்குடவர், தேவநேயப்பாவாணர் முதலானோர் ஈட்டம் என்பதற்குப் பொருள் ஈட்டலையே குறிக்கின்றனர். பொருளை ஈட்டாமல் எங்ஙனம் பிறருக்கு வழங்க இயலும்? ஈட்டிய பொருளைத்தாமே குவித்து வைத்துக் கொண்டு பிறருக்கு ஈயாமல் இருப்பதைத்தானே தமிழ் நெறிகள் தவறென்கின்றன. ‘ஈட்டம் இவறி’ என்பதற்குப்பேராசிரியர் சி.இலக்குவனார், ‘சேர்த்து வைத்தல் ஒன்றையே கருதி’ எனக் குறிக்கிறார். எனவே, ஈட்டுதல் என்பது இயற்றலல்ல; திரட்டலே!

ஆகு ஆறு – way of income

போகுஆறு – way of expenditure

 ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை

போகா றகலாக் கடை (குறள் 478)

  ஆகு ஆறு – ‘பொருள் வருகின்ற நெறியளவு’ என்கிறார் பரிமேலழகர்; ‘பொருள் வரும்வழி’ என்கிறார் மணக்குடவர்; ‘பொருள் வருவாயின் அளவு’ என்கிறார் ஞா.தேவநேயப் பாவாணர்; ‘பொருள்உண்டாகும்   வழி’ என்கிறார் சி. இலக்குவனார். போகுஆறு என்பதற்குப் பொருளினைச் செலவு செய்கின்ற விதம் அல்லது போகின்ற நெறிஅளவு என்றே அனைவரும் குறிக்கின்றனர்.

எழிலிnimbostratus

நெடுங் கடலும் தன் நீர்மை குன்றும், தடிந்து எழிலி

தான் நல்காது ஆகிவிடின். (திருக்குறள் 17)

  முகந்தபின் மேலெழுவது எழிலி என்கிறார் பாவாணர்.

  உயரங்களின் அடிப்படையில் பத்து அடுக்குகளாக முகில் கூட்டத்தை வகுத்துள்ளனர். அவற்றுள் தாழ்நிலையில் உள்ள முகில் வகை எழிலி. எழிலி என்னும் சொல்லை 33 இடங்களில் சங்கப் புலவர்கள் கையாண்டுள்ளனர். ஓரிடத்தில் (புறநானூறு 173.5-7) மழை என்னும் பொருளிலும், மற்றோர் இடத்தில் (அகநானூறு 43:1-8) கார்ப்பருவம் என்னும் பொருளிலும் இடம் பெற்றுள்ள இச்சொல், பிற இடங்களில் முகில் என்னும் பொருளில்தான் வந்துள்ளது

  ‘‘கீழ்க் கடலிலே சென்றிறங்கி நீரை முகந்தெழுந்து மேல்பாலேகி யாங்கும் இருளடையும்படி இருண்டு அணுத்திணிந்த இவ்வுலகம் அவ் விருளினின்று புலப்படுமாறு கருமகாரர் செம்பினாலே செய்த பானையைக் கடைந்தாற்போல மின்னி எங்கும் தனது பெய்யுந் தொழிலை மேற்கொண்ட இனிய இடி முழங்குதலாகிய குரலையுடைய மேகம் அங்ஙனம் பெய்யுந் தொழில் முடிந்தவுடன் எழுந்து தென்பாலேகி யொழிந்தாற்போல’’ என விளக்கம் தருகிறார் பின்னத்தூர் நாராயணசாமி (ஐயர்) அவர்கள். (நற்றிணை 153)

   ‘‘ஒலி முழங்குகின்ற குளிர்ச்சியையுடைய கடலைக்குடித்து வலமாகவெழுந்து மலைகளை இருப்பிடமாகக்கொண்டு பெய்யுங் காலத்தே உலகத்தை வளைந்தெழுந்த கடிய செலவினை யுடைய மேகம்’’ என முல்லைப்பாட்டு உரையில் முன்னதாகவே நச்சினார்க்கினியரும் விளக்கியுள்ளார்.

  எனவே, கடல் மட்டத்தில் உருவாகக்கூடிய முகிலே எழிலி என்பதாகும். கடல் மட்டத்தில் உருவாகி எழுந்து மேலே செல்லும் முகிலிற்கு நிம்போசிராட்டசு-nimbostratus என 20ஆம் நூற்றாண்டில்தான் வகைப்படுத்திப் பெயரிட்டுள்ளனர் மேல்நாட்டார். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பழந்தமிழர் கண்டறிந்த எழில் என்பதற்கு nimbostratus என்ற வரைவிலக்கணமே சரியாகும்.

(தொடரும்)

-இலக்குவனார் திருவள்ளுவன்