திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்
2
அரணறை – safety room
‘அரண்’ எனத் திருக்குறளில் தனி அதிகாரமே(எண் 75) உள்ளது. இவ்வதிகாரத்திலுள்ள ஒவ்வொரு குறளிலும் ‘அரண்’ குறிக்கப் பெற்றுள்ளதுபோல், பிற அதிகாரங்களிலும் 4 இடங்களில் ‘அரண்’ குறிக்கப் பெற்றுள்ளது. சங்க இலக்கியங்களில் ‘அரண்’ 31 இடங்களில் குறிக்கப் பெற்றுள்ளது; ‘அரணம்’ என்பது 13 இடங்களில் குறிக்கப் பெற்றுள்ளது. படைத்துறையில் இடம் பெற்றுள்ள முதன்மையான கலைச்சொற்களில் ஒன்று அரண். அரண்சூழ்ந்த மனையையே அரண்மனை என்றனர். கரூவலங்களில் உள்ள காப்பு அறையை அரணறை – safety room என்றே சொல்லலாம்.
அதரி-valve
ஆக்கம் அதர் வினாய்ச் செல்லும்-அசைவு இலா
ஊக்கம் உடையானுழை. (திருக்குறள் 594)
வால்வு (valve) என்பதற்குக் கால்நடையியலிலும் மீனியலிலும் தடுக்கிதழ் என்றும், வேளாணியலில் தடுக்கிதழ், ஒருபாற்கடத்தி என இருவகையாகவும், பொறிநுட்பவியலில் தடுக்கிதழ், அடைப்பிதழ், ஓரதர், கவாடம் என நால்வகையாகவும், மருத்துவயியலில் ஒருவழி மடல், கதவம் தடுக்கிதழ், கவாடம் என நால்வகையாகவும், மனையியலில் ஓரதர், வேதியியலில் கவாடம், வால்வு என இருவகையாகவும் பயன்படுத்துகின்றனர்.
அதர் என்னும் சொல் சங்க இலக்கியங்களில் 43 இடங்களில் வருகின்றது. பெரும்பாலும் வாயில் என்னும் பொருளே கையாளப்படுகின்றது.
ஆனினம் கலித்த அதர்பல கடந்து (புறம் 138:1)
மாயாக் காதலொடு அதர்ப்படத் தெளித்தோர் (நற்றிணை : 218.5)
இதன் அடிப்படையில் பிற சொற்களைக் காட்டிலும் ஓரதர் என்பது வால்வு (valve) என்பதற்கு நெருங்கி வருகின்றது. எனினும் ஓரதர், ஈரதர் எனில், எண்ணிக்கையைக் குறிப்பதாக அமையும். எனவே அதரி என்றும் இருமுக அதரி என்றும் குறிப்பிடலாம்.
அதரி-valve
இருமுக அதரி-two port valve
இருமுனை அதரி-bicuspid valve
காப்பதரி-safety valve
குண்டதரி-ball valve
கோண அதரி-angle valve
போக்கதரி-exhaust valve
மாற்றதரி-by valve
மும்முக அதரி-three port valve
மும்முனை அதரி-tricuspid valve
வளிதொடுப்பதரி-air starting valve
வளியதரி-air valve
வளிவிடுஅதரி-air release valve
விழிப்பொலி அதரி-alarm valve
இவ்வாறு 400 வகையான அதரிகளையும் குறிப்பிடலாம்
அஞர்-mental distress
கொடும் புருவம் கோடா மறைப்பின், நடுங்கு அஞர்
செய்யலமன், இவள் கண்(திருக்குறள் 1086)
வாராக்கால், துஞ்சா; வரின், துஞ்சா; ஆயிடை
ஆர் அஞர் உற்றன கண்(திருக்குறள் 1179)
சங்க இலக்கியங்களில் ‘அஞர்’ 33 இடங்களில் குறிக்கப்பெறுகிறது. மனத்துயரம் என்பதற்கான ஒற்றைக் கலைச்சொல்லாக இது விளங்குகின்றது.
– இலக்குவனார் திருவள்ளுவன்
அசத்துகிறீர்கள் ஐயா!