திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்
(திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 2 தொடர்ச்சி)
பூ, காய், கனி கலைச்சொற்கள்
மணமலி பூவீ மலர்போ து அலராம்
துணர் மஞ்சரிகொத்துத் தொத்தோடு இணராம்
நலம்சேர் குலைதாறு வல்வரியாகும்
பலம்காய் கனியாம் பழம் என்கிறது உரிச்சொல் நிகண்டு (பா. 94).
அஃதாவது மலரானது பூ, வீ, போது. அலர் என்றும் பூங்கொத்தானது துணர், மஞ்சரி, தொத்து, இணர் என்றும் குலையானது தாறு, வல்லரி என்றும் பழமானது பலம், காய், கனி என்றும் பெயர் பெறும்.
திருவள்ளுவர்,
காலை அரும்பி, பகல் எல்லாம் போது ஆகி,
மாலை மலரும் இந் நோய் (திருக்குறள் 1227)
என ஒரு குறளிலேயே அரும்பு, போது, மலர் என்னும் பூவின் வெவ்வேறு நிலைக்குரிய கலைச்சொற்கள் மூன்றினைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திருவள்ளுவர்
இனிய உளவாக இன்னாத கூறல்-
கனி இருப்ப, காய் கவர்ந்தற்று (திருக்குறள் 100)
என்னும் ஒரு குறளிலேயே காய், கனி என்னும் இரு நிலைக்குரிய கலைச்சொற்களைக் கையாண்டுள்ளார்.
இணர் – Bouquet
இணர் எரி தோய்வன்ன இன்னா செயினும்,
புணரின் வெகுளாமை நன்று (திருக்குறள் 308)
இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர்-கற்றது
உணர விரித்து உரையாதார் (திருக்குறள் 650)
என்னும் இரு திருக்குறள்களிலும் இணர் என்பதைக் கையாண்டுள்ளார். இன்றைக்கு நாம் பூங்கொத்து (Bouquet) எனக் கூறுவதை இணர் என்றே சொல்லலாம்.
அறிவு – knowledge ; ஒட்பம் – wisdom
சிலர் தமிழில் knowledge, wisdom என்னும் இரண்டிற்கும் அறிவு என்றே குறிப்பதாகத் தவறாக எழுதியும் பேசியும் வருகின்றனர். நமக்குத் தெரியவில்லை என்பதால் தமிழில் சொற்கள் இல்லையென்று எண்ணக்கூடாது. திருக்குறளில் இரண்டிற்கும் வேறுபட்ட சொற்கள் உள்ளமையைக் காணலாம். அறிவு – knowledge என்பது அறிவுடைமை என்னும் அதிகாரத்தின் மூலமும் பிற குறள்கள் மூலமும் 45 இடங்களில் கையாளப்பட்டுள்ளது. அறிவு தொடர்பான அறிவினான் முதலான சொற்களும் உள்ளன. சங்க இலக்கியங்களில் அறிவு என்பது 43 இடங்களில் கையாளப்பட்டுள்ளது. ஆனால் ஒட்பம் என்பதைத் திருவள்ளுவர் மட்டும் கையாண்டுள்ளார்.
கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும்,
கொள்ளார், அறிவு உடையார் (திருக்குறள் 404)
உலகம் தழீஇயது ஒட்பம்; மலர்தலும்
கூம்பலும் இல்லது-அறிவு (திருக்குறள 425)
என்னும் திருக்குறள்கள் மூலம் ஒட்பம் – wisdom எனக் கையாண்டுள்ளார்.
இலக்கம் – target
இலக்கம், உடம்பு இடும்பைக்கு‘ என்று, கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம், மேல் (திருக்குறள் 627)
என்னும் பொழுது திருவள்ளுவர் இலக்காகும் குறிப்பொருளை இலக்கம் என்கிறார். எனவே, aim என்பதற்கும் target என்பதற்கும் இலக்கு என்றே பயன்படுத்துவோர் இனிமேல் இலக்கம் – target எனலாம்.
பொருள்வைப் புழி – treasure house
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி (திருக்குறள் 226) என்னும்
திருக்குறள் மூலம் பொருள் சேமிப்பகத்தைத் திருவள்ளுவர் பொருள் வைப்புழி என்கிறார்.
இவ்வாறு மேலும் பல சொற்களை ஆராய இயலும். எடுத்துக்காட்டிற்காகச் சில கலைச் சொற்களைப் பார்த்தோம். ஆய்வு மாணாக்கர்கள் விரிவாக ஆராய்ந்து திருக்குறளில் பயன்படுத்துள்ள பல்துறைக் கலைச்சொற்களை எடுத்துரைக்க வேண்டும்.
பார்வை நூல்கள் / கட்டுரைகள் / இணையத்தளங்கள்:
திருக்குறள் சொல்லடைவு
சங்க இலக்கியச் சொல்லடைவு
தமிழ் இணையக்கல்விக்கழக இணையத் தளம்
திருக்குறள் எளிய பொழிப்புரை – பேராசிரியர் சி.இலக்குவனார்
அன்றே சொன்ன அறிவியல் – சங்கக் காலம்
கலைச்சொல் தெளிவோம் – அகரமுதல மின்னிதழ்
திரு-படைப்புகள் வலைப்பூ
– இலக்குவனார் திருவள்ளுவன்
(பி.கு. : நாம் மேலும் ஆராய்ந்தால், வேறு கலைச்சொற்களையும் கண்டறிய இயலும். திருக்குறள் கருத்தரங்கம் நடத்திய ஓர் அமைப்பாளருக்கு அனுப்பிய
கட்டுரைச் சுருக்கமே இது.
கலைச்சொல் திறன் அறியும் உணர்வினார் அங்கில்லைபோலும். இக்கட்டுரை தேர்நதெடுக்கப்படவில்லை. எனவே, விரித்து எழுதும் வாய்ப்பு கிட்டவில்லை. ஆனால், திருக்குறள்அன்பர்களும் கலைச் சொல் ஆர்வலர்களும் ஆராய்ந்து விரிவான கட்டுரை அளிக்கலாம்.)
காலத்துக்கேற்ற மிகவும் பயனுள்ள ஒரு தொடர்! இதை நீங்கள் பெரும் தொடராக எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் ஐயா! ஒரு பெரிய கட்டுரையின் பிரிவுகள் என இப்பொழுதுதான் தெரிந்தது. இந்த அரிய சொற்களுக்காக நன்றி!
‘wisdom’ என்பதற்கு இன்று நாம் பேரறிவு எனும் சொல்லைப் பயன்படுத்துகிறோம், ‘ஒட்பம்’ எனும் பழஞ்சொல் இருப்பதை அறியாமையால்! இராம.கி ஐயா போன்றோர் கூறியது போல, எப்பொழுதுமே நாமாக ஒரு மொழிபெயர்ப்பை, புதுச்சொல்லை உருவாக்கும் முன் ஏற்கெனவே அதற்கான சொல் இருக்கிறதா என ஒருமுறை சோதித்து அறிவது நல்லது. இப்படிப்பட்ட சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம் பழந்தமிழ்ச் சொற்களை மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டு வந்தது போலவும் ஆகும், அத்தனை ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய சொல்லாடல்களுக்குத் தனிச் சொற்களைத் தமிழர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர் எனும் பெருமையை உலகறியச் செய்ததாகவும் இருக்கும். தமிழில் கலைச்சொற்கள் உருவாக்குகிறேன், தமிழ் வளர்க்கிறேன் எனும் பெயரில் ஏற்கெனவே இருக்கிற சொற்களுக்கே புதிது புதிதாக மாற்றுச் சொற்களைத் தன்பாட்டுக்கு உருவாக்கிப் பரப்பிக் கொண்டிருக்கும் ஆர்வக் கோளாறுகள் கவனிக்க!
இப்படிப்பட்ட ஒரு கட்டுரை தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது பெரும் வியப்புக்குரியது!