தலைப்பு,திருவள்ளுவரின் உயிரியல் பார்வைத்திறன், குறளேந்தி ந.சேகர் ;thalaippu_thiruvalluvarin_uyiriyalpaarvaithiran_kuralendhi_ne_sekar_myanma

திருவள்ளுவரின் உயிரியல் பார்வைத் திறன்

  தமிழ் மொழியில் தோன்றிய இலக்கியச் செல்வங்களுள் தலை சிறந்தது திருக்குறள். தமிழரே அல்லாமல் அயலவரும் உரிமை பாராட்டிப் பயன் எய்துதற்கு மிக்க துணையாவது இந்நூல். தான் தோன்றிய நாள் முதல் தலைமுறை தலைமுறையாக எத்தனையோ நாட்டவரும், மரபினரும், மொழியினரும், சமயத்தினரும் நுகர்ந்து பயன் பெறுமாறு செய்தும் அழியாச் செல்வமாகத் திகழ்வது திருக்குறள் ஒன்றே ஆகும்.

  இது சான்றாண்மை நிறைந்த அரும் பெரும் புலவர் பெருமானார் என உலகில் உள்ள எல்லா மொழிப் புலவர்களாலும் சிறப்பித்துப் பாராட்டப்பெறும் திருவள்ளுவர் என்பவரால் இயற்றப் பெற்றது.

  தமிழ் மக்கள் பண்பாடு பெற்றுயர்வதற்குரிய வழிவகைகளையெல்லாம் பரக்க உணர்த்தியுள்ளது திருக்குறள். ஏன், உலக மக்கள் அனைவருமே பண்பாடு பெற்றுப் பிறப்பின் பயனை அடைவதற்கு உரிய வழிவகைகளையெல்லாம் தெளிய உணர்த்தும் ஒரு பொது நூல் திருக்குறளாம் என்று நாம் துணிந்து கூறலாம்.

  திருவள்ளுவர் தாம் இயற்றிய திருக்குறளில் அரசியல், பொருளாதாரம், தாவரவியல், நீரியல், அறிவியல், மருத்துவம் போன்று பல துறைக் கருத்துக்களையும் உள்ளடக்கி எழுதியுள்ளார். அவற்றுள் ‘திருவள்ளுவரின் உயிரியல் பார்வைத் திற’னைப் பற்றிய சில குறள்களைக் காண்போம்.

  அன்பை வலியுறுத்த வந்த திருவள்ளுவர் ‘அன்புடைமை’ அதிகாரத்தில்,

என்பில் அதனை வெயில் போலக் காயுமே
அன்பில் அதனை அறம் (குறள். 77).

என்ற குறளில் எலும்பு இல்லாத உடலையுடைய புழு வெயிலில் காய்ந்து அழிந்து விடுவதுபோல அன்பில்லாத உயிர் அறத்தின் முன் தானாகவே காய்ந்துவிடும் என்று உவமை காட்டிக் கூறுகின்றார்.

  எறும்பு, புழு முதலியவை வெயிலின் காய்ச்சல் தாங்காதாம். எல்லா உயிர்களுக்கும் வெயில் இன்றியமையாதது. ஆனால் பூச்சிகள், புழுக்கள் வெயிலின் வெப்பத்தைத் தாங்கவில்லை. ஏனென்றால் அவை எலும்பு இல்லாதவை. எலும்பு இல்லாத காரணத்தால் வெயிலின் நன்மையைப் பெற முடியாது அழிகின்றன. அது போல அன்பு இல்லாத காரணத்தால் உயிரானது அறம் செய்து அதன் நன்மையை அடைய முடியவில்லை. அறம் செய்து நன்மையடைவதற்காகத்தான் உடலை மனிதன் பெற்றிருக்கிறான். எவன் நன்மை செய்து அன்பை வளர்த்துக் கொள்ள முடியவில்லையோ அவன் தன் நலன் கருதி மறம் செய்து அழிகிறான் என்பதாம். மேலும், எலும்பில்லாத புழு தன்னியல்பால் வெயிலில் சென்று, வெயில் தாங்காது உயிர் விடுதல் போல மனிதன் அன்பில்லாத காரணத்தால் தீமை செய்து நல்லோரால் பழிக்கப்பட்டு அழிகிறான் என்பதைப் புழு, பூச்சிகள் உவமை காட்டி நமக்கு அறிய வைக்கின்றார்கள்.

அடுத்து, ‘அடக்கமுடைமை’ அதிகாரத்தில்,

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப்பு உடைத்து (குறள். 126).

என்ற குறளில் ஆமையை எடுத்துக் காட்டுகின்றார்கள்.

 ஆமையானது எப்படித் தன் ஓட்டுக்குள், தனக்குத் தீங்கு வரும் என்பதை அறிந்த உடன் நான்கு கால்களையும் தலையையும் உள்ளடக்கிக் கொள்கிறதோ, அதுபோலத், தனக்கு இழிவு வரும் என்று அறிந்தவுடன் ஒருவன் ஐம்புல அவாவையும் அடக்கியாளப் பயிலுவானாயின் அவ்வடக்கம் அவனுக்கு ஏழு பிறவியிலும் பாதுகாவலாய் வந்து துணை செய்யும் என்று ஆமையின் இயல்பை எடுத்துக் காட்டுகின்றார்.

  ஒருவனுக்கு அடக்கமின்மை, அதாவது தருக்கு / அடங்காமை வெகுளியால் உண்டாகிறது. வெகுளி, அவா (ஆசை) நிறைவேறாதபோது உண்டாகும் ஒரு குணம். எவன் ஆசையை வெல்கிறானோ அவனுக்குச் சினம் இல்லை. சினமில்லாதவன்தானே அடக்கமுடையவனாய் வாழ்வான்? ஆகையால் ஐம்புல அடக்கமாகிய அவா இன்மையையே அடக்கமாகத் திருவள்ளுவர் சிறப்பித்து, அடக்கம் என்பது வஞ்சகமாகப் பூனை போல் அடங்கி இருப்பது அன்று என்பதை விளக்கினார். மேலும், எழுமையும் ஏமாப்பு உடைத்து என்றமையால், அடக்கமானது புகழை மாத்திரம் கொடுப்பதன்று; உயிர்க்குப் பல பிறவிகளிலும் பாதுகாவலாய்த் துணை செய்வது என்பதையும் வற்புறுத்தி மன அடக்கம் வலியுறுத்த ஆமையை உவமைக்கு எடுத்துக் காட்டுகிறார்கள்.

‘காலம் அறிதல்’ அதிகாரத்தில்,

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது (குறள் 481).

என்ற குறளில் செயலை மேற்கொள்வதற்குக் காலமறிய வேண்டும் என்பதற்குக் கோட்டானையும் காக்கையையும் நம் முன்னே கொண்டு வருகின்றார் தெய்வப் புலவர் திருவள்ளுவர்.

 கோட்டானைக் காக்கை பகல் காலத்தில் வென்றுவிடும் ஆகையால் பகைவர்களை வெல்ல எண்ணும் அரசர்கள் தமக்கு உகந்த காலத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டுமாம்.

 கோட்டானுக்குப் பகலில் கண் தெரியாது. அதனால் காகம் கோட்டானைப் பகலில் வென்றுவிடும். காகத்திற்கு இரவில் கண் தெரியாது. கோட்டான் காகத்தை இரவில் வென்று விடும். காகமும் கோட்டானும் ஒரே இனத்தைச் சேர்ந்த ஒரே வலிமையுள்ள பறவைகளாக இருப்பினும் காலத்தின் மாறுபாட்டால் ஒன்றை ஒன்று வெல்கின்றன. அது போல், பகையை வெல்ல நினைக்கும் அரசரும் தக்க காலத்திற்காகக் காத்திருக்க வேண்டும். சம வலிமையுள்ள பகைவரை வெல்ல வேண்டுமாயினும், வலி மிகுந்தவரை வெல்ல வேண்டுமாயினும் தனக்கு ஏற்ற காலத்தைப் பார்த்துச் செயல்பட வேண்டும் என்பதற்குக் கோட்டானின் இயல்பையும் காக்கையின் இயல்பையும் நன்கறிந்த திருவள்ளுவர் பறவைகளை உவமைக்கு எடுத்துக் காட்டியிருப்பது சிந்தித்துச் சிந்தித்து மகிழ வேண்டியதாகும்.

மேலும், அந்த அதிகாரத்தின் கீழ்வரும்

ஊக்கமுடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து (குறள். 486).

என்ற குறளில் சண்டைக் கிடா விலங்கை உவமைக்கு எடுத்துக் காட்டுகிறார் திருவள்ளுவர்.

  மன எழுச்சியுடையவர் பகை மேல் செல்லாது காத்திருப்பது சண்டைக்கிடா வேகமாகத் தாக்குவதற்குப் பின்வாங்கிப் பாய்வது போலாகுமாம்.

  காத்திருக்கும் நேரமெல்லாம் எதிரியை முறியடிப்பதற்கான எண்ணங்களில் சிந்தனையைச் செலுத்த வேண்டும். முழு வலிமையோடு தாக்குவதற்குக் காலம் வரும் வரை வெற்றி மேல் மனம் இருத்திக் காத்திருக்க வேண்டும். முழு வலிமையையும் ஒரே காலத்தில் ஒரே இடத்தில் செலுத்தி வெற்றி பெற வேண்டும் என்பது உவமானம். வலிமையுடையவன் அடங்கி இருப்பது சண்டைக்கிடா முட்டப் பின்னடைவது போலாம்.

அதே அதிகாரத்தில், பிறிதொரு குறளில்,

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து (குறள். 490).

என்ற குறளில் பறவையினத்தைச் சேர்ந்த கொக்கை எடுத்துக் காட்டுகின்றார் திருவள்ளுவர்.

  ஒரு செயலைச் செய்யாதிருக்கும்போது மீனைப் பிடிக்க எண்ணும் கொக்கு இருப்பது போல் காலம் வரும் வரை அடங்கி இருக்க வேண்டுமாம். நேரம் வாய்த்தவுடன் கொக்கு மீனைக் கௌவிப் பிடிப்பதுபோலச் செயலை முயன்று செய்து முடிக்க வேண்டுமாம். கொக்கு எவ்வாறு அசையாது காத்திருந்து மீன் வரும் அந்த நேரத்தில் சரேலெனப் பாய்ந்து பிடிக்கிறதோ, அது போல, ஒரு வினையைச் செய்யத் தொடங்கும் காலம் வரும்வரை காத்திருந்து, வாய்ப்பு வருகிற அந்தச் சமயத்திலேயே நழுவ விடாமல், முயற்சி குன்றாது வினையைச் செய்து முடிக்க வேண்டும். கொக்கு, வினை செய்வானுக்குத் தொழில் உவமை ஆகையால் கொக்கு மீன் வரும் சமயத்தையும் இடத்தையும் நழுவ விடாது இறுகப் பிடிப்பதுபோல வினை செய்வானும் வெற்றி வரும் சமயத்தையும் இடத்தையும் நழுவ விடாது உள்ளத்தில் அதே கருத்தாக அமைதியாகக் காத்திருக்க வேண்டும் என்பதாம்.

அடுத்து, ‘இடனறிதல்’ அதிகாரத்தில்,

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற (குறள். 495).

என்ற குறளில் நீர்வாழ் உயிரினமான முதலையின் இயல்பை எடுத்துக் காட்டுகிறார் திருவள்ளுவர்.

  ஆழமான நீர் நிலையில் முதலையானது பிற விலங்குகளை வெல்லும். ஆனால், நீர்நிலையை நீங்கித் தரைக்கு வந்தால் பிற விலங்குகள் முதலையைக் கொன்றுவிடும்.

  தரையிலே வாழும் விலங்குகள் தண்ணீரில் நிலைத்து நின்று முதலையோடு சண்டை போட முடியாது. அதனால் முதலை அந்த விலங்குகளை வென்று விடுகிறது. தரையிலே முதலை இயங்க முடியாது. அதனால் பிற விலங்குகள் முதலையை வென்று விடும். இடம்தான் முதலையின் வெற்றிக்கும் தோல்விக்கும் காரணமாக இருக்கிறது. அது போல் எதிரியை வெல்வதற்கும் இடம்தான் காரணம் என்பதையும் பகைவன் தோல்விக்குரிய இடம் நோக்கிச் செயல்பட வேண்டும் என்பதை நீர்வாழ் விலங்கான முதலையைக் கொண்டு வந்து காட்டுகின்றார்கள்.

‘சுற்றம்தழால்’ என்ற அதிகாரத்தில்,

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

அன்னநீ ரார்க்கே உள (குறள். 527).

என்கிறார் வள்ளுவர். அவர், முன் குறள்களில் சில உயிரினங்களின் இயல்புகளை, நிலைகளை, செயல்படும் தன்மைகளை நமக்கு உவமைக்காக எடுத்துக் காட்டியுள்ளார்; இக்குறளில், காகத்தின் செயலை, நல்ல பண்பை அப்படியே பின்பற்றச் செய்கின்றார்; கடைப்பிடிக்கக் கூறுகின்றார். அதாவது, காக்கைகள் தமக்கு இரை கிடைத்தவுடன் அதனை மறைக்காமல், கரைந்து கத்தித் தமது இனத்தை அழைத்து அவற்றோடு உண்ணுமாம். அது போல மனிதனும் தனக்குக் கிடைத்த பொருட்களை மறைக்காமல் மற்றவர்க்கும் பகிர்ந்து கொடுத்து இன்பப்பட வேண்டும்.

  விலங்குகளில் நாய்களின் செயல்களைப் பெரும்பாலும் நாம் கண்டிருக்கலாம். நாய்கள் தனக்குக் கிடைத்த இரையைத் தான் மட்டும் விரைந்து விரைந்து வஞ்சகமாக உண்ணும். தான் பெற்ற நாயாக இருந்தாலும் கிட்டே வர விடாமல் குரைத்து, கத்தி, கடித்து விரட்டி விட்டுத் தான் மட்டும் எல்லாவற்றையும் தின்றுவிடும். மாடு, எருமை போன்ற விலங்குகளும் இரை கிடைத்தவுடன் தன் இனத்தை அழைக்காமல் தான் மட்டும் வயிறார உண்ணும். ஆனால், காக்கைப்பறவைக்கு அப்படிப்பட்ட வஞ்சகப் பழக்கம் இல்லை. ஏதாவது உணவைக் கண்டால் ‘கா’ ‘கா’ என்று கூவிக் கத்தித் தன் இனத்தோடு பகிர்ந்து உண்டு இன்பமடைகின்றது.

  இப்படிக் காக்கையின் நல்லியல்பை மனிதர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று திருவள்ளுவர் விரும்புகின்றார். இஃது அறச் செயலோடு அல்லாமல் பொருளைப் பெருக்கவும் வழியாகும். மக்கள் பலர் நன்றியுடையாராக இருப்பதால் இவனுக்குப் பெருமையோடு பொருளும் வளர வழியுண்டு. இதற்குக் காகத்தின் இயல்பான நற்செயலைக் கண்டறிந்து நமக்கு எடுத்துக் காட்டுகின்றார் திருவள்ளுவப் பெருமான்.

  திருக்குறளில் திருவள்ளுவரின் உயிரியல் பார்வைபற்றிய சில குறள்களைக் கண்டறிந்தோம். இன்னும் ஏராளமான குறள்களில் உயிரியல் கருத்துகள் புதைந்து கிடக்கின்றன. யானையைப் பற்றிப் பேசுகிறார், சிங்கத்தைப்பற்றிக் கூறுகின்றார், புலியின் தன்மைகளைப் பேசுகின்றார், இன்னும் பல விலங்குகளின் தன்மைகளைப் பற்றியும் நமக்கு அரிய செய்திகளாகத் தந்திருக்கிறார்கள் வள்ளுவப் பெருந்தகை.

 பறவைகள், ஊர்வன,நீந்துவன, விலங்குகள் முதலானவற்றின் இயல்புகள், தன்மைகள், செயல்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைத் தெய்வப் புலவர் திருவள்ளுவர் தமது அறிவுக் கூர்மையாலும் சிந்தனைத் திறனாலும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்திருப்பதைச் சிந்திக்கும்போது திருவள்ளுவரின் நுண்மாண் நுழைபுலத்தை வியந்து வியந்து பாராட்ட வேண்டியுள்ளது.

  திருக்குறளில் திருவள்ளுவரின் உயிரியல் செய்திகளைத் திருக்குறள் அறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள், உயிரியல்அறிஞர்கள், நூல் முழுதும் ஆராய்ந்து உயிரியல் செய்திகளை நூல் வடிவில் தருவார்களேயானால் நூல் சிறக்கும், வாசகர்களின் அறிவுக்கு நல்விருந்தாக இருக்கும், திருவள்ளுவருக்கும் பெருமை சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

– குறளேந்தி ந.சேகர்
செயலாளர்
கலைமகள் தமிழ்க் கல்வி நிறுவனம்
தட்டோன், மியான்மா.