திருவள்ளுவரைப் போற்றி இலக்குவனாரின் கனவை நனவாக்குவோம்!
திருவள்ளுவரைப் போற்றி
இலக்குவனாரின் கனவை நனவாக்குவோம்!
தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தொல்காப்பியம், சங்க இலக்கியம், குறள்நெறி ஆகியவற்றைப் பரப்புவதையும் தமிழ்க்காப்புப் பணிகளையும் தம் வாணாள் தொண்டாகக் கருதிப் பாடுபட்டவர்; தம் மாணவப்பருவத்தில் இருந்தே இப்பரப்புரைப் பணிகளிலும் காப்புப் பணிகளிலும் ஈடுபட்டவர்; தாம் பணியாற்றிய இடங்களில் எல்லாம் திருவள்ளுவருக்கு விழாக்கள் எடுத்தும் திருக்குறள் வகுப்பு நடத்தியும் குறள்நெறி பரப்பிய சான்றோர்; குறள்நெறி முதலான இதழ்கள் மூலமும் திருவள்ளுவர் புகழ் போற்றிய ஆன்றோர்.
“இன்றைய சூழ்நிலையில் மக்கள் அமைதிவாழ்வு பெறவும், பசி, பிணியற்று இன்புற்று வாழ்வும் அவர்களுக்கு வழிகாட்டுவதே இன்றியமையாத பணியாகும்” என்னும் பேராசிரியர் சி. இலக்குவனா், அனைவருக்கும் குறள்வழியைக் காட்டுவதே சிறந்த பணி என்கின்றார். திருக்குறளை ஏன் போன்ற வேண்டும் என்பதற்கு அவர் பின்வருமாறு ‘குறள்நெறி’ இதழில் விளக்குகிறார்:-
திருவள்ளுவர் தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும், திருக்குறளைத் தமிழில் இயற்றியிருந்தாலும் அவர் அந்நூலைச் செய்தது உலகத்திற்காகவே ஆகும் அதன் காரணமாக அது உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுகிறது.
வள்ளுவர் தமிழகத்தில் தோன்றி தமிழில் எழுதியிருந்தாலும், தமிழர்களாகிய நாம் இன்னும் அதனுடைய நுட்பங்களை உணர்ந்து அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை. தமிழர்கள் இன்னும் அதனை நல்ல முறையில் விளங்கிக் கொள்ளாததால் தான் தமிழ்ப்பற்று இல்லாதவர்களும் தமிழ்ப் பகைவர்களும், மக்கள் பகைவர்களும் அதனை இழித்தும் பழித்தும் கூறியும் அதனால் பெருமை பெற்றும் வருகிறார்கள். தமிழர்களாகிய நாம் அதன் நெறிகளைக் கடைப்பிடித்து வந்தால் நாடும், நாமும், நம்மைச் சேர்ந்தவர்களும் சேராதவர்களும் நன்மை அடையத் துணைபுரியும்.
குறள் நெறி என்பது வள்ளுவர் நெறி. குறள் என்ற சொல்லுக்கு இன்று சிலருக்கு – ஏன் உயர்ந்த சமயத் தலைவர்களுக்குக் கூட – உண்மையான பொருள் தெரியவில்லை. அவ்வாறு அறிந்து கொள்ளாமல் – குறளைக்கும் குறளுக்கும் பொருள் புரியாமல் – குறள் என்பது கோள் சொல்லக்கூடியது என்று கருதி மக்களிடத்தில் உரைத்தும் வருகிறார்கள்.
மன்பதையில் சாதிப்பாகுபாடும், அரசியல் கட்சிகள் பாகுபாடும் வலிமை பெற்று நிற்கின்றன. பாகுபாடுகள், வேற்றுமைகள் அனைத்தும் மறைந்து எல்லோரும் இன்புற்று வாழ வேண்டுமானால் மக்கள் அனைவரும் குறள்நெறியைத் தம்முடைய வாழ்க்கை நெறியாகக் கொள்ள வேண்டும்.
குறள்நெறிதான் நம் வாழ்க்கை நெறி என்பதை மக்கள் உணர வேண்டும் அல்லவா? அதை எடுத்துரைக்க வேண்டியது ஆன்றோர்கள் கடமை அல்லவா? அதற்கு ஓர் எளிய வழியாகத்தான் திருவள்ளுவர் நினைவைப் பலவகைகளிலும் போற்ற வேண்டும் என்கிறார் பேராசிரியர் இலக்குவனார். திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டு வருவதற்கு முன்னரே தொலைநோக்குப் பார்வையுடன் இது குறித்துச் சிந்தித்தார் அவர். திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டினைப் பல்வகைகளிலும் சிறப்பாகக்கொண்டாடுவதன் மூலம் திருவள்ளுவர் புகழ் பரப்பித் திருக்குறள் நெறியை உலக மக்கள் பின்பற்றச் செய்யலாம் என நம்பினார். அதற்காகவே, பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டினைச் சிறப்பாக நாம் கொண்டாட வேண்டும் என அதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே வேண்டுகோள் விடுத்தார். நாம் எவ்வாறு திருவள்ளுவர் நினைவைப் போற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவ் வேண்டுகோள்கள் வருமாறு:-
திருவள்ளுவர் நினைவாண்டு
கி.பி. 1969 சனவரித் திங்கள் பதினான்காம் நாள் (தை முதல் நாள்) திருவள்ளுவர் தோன்றி இரண்டாயிரம் ஆண்டு நிறைவுறுகிறது. ஆதலின் அந்தத் தை முதல் அடுத்த தை வரை (1969 முழுவதும்) திருவள்ளுவர் நினைவு ஆண்டாகவே கருதப்பட வேண்டும். உலகப் பொதுமறை அருளிய திருவள்ளுவர் நினைவாகப் பின்வரும் செயல்களை மேற்கொள்ளுதல் வேண்டும்.
1. இந்த ஆண்டில் பிறக்கும் ஆண்குழந்தைகட்குத் திருவள்ளுவர் என்றும் பெண் குழந்தைகட்குத் தமிழ் மறைச் செல்வி என்றும் பெயர் இடுதல் வேண்டும்.
2. திருவள்ளுவர் நினைவாக ஆங்காங்கு நினைவுச் சொற்பொழிவுகளும் கலை நிகழ்ச்சிகளும் நிகழ்த்த வேண்டும்.
3. ஒவ்வொரு நாளும் அவரவர் கடமைகளைத் தொடங்குவதற்கு முன்பு திருக்குறளில் ஒவ்வோர் அதிகாரத்தைப் படித்துவிட்டே தொடங்கல் வேண்டும்.
4. நாம் எழுதும் கடிதங்களில் ஏதேனும் ஒரு திருக்குறளை எழுதிவிட்டே கடிதங்களைத் தொடங்க வேண்டும்.
5. நாம் பிறரைச் சந்தித்து வணக்கம் தெரிவிக்கும் போது ‘வள்ளுவர் வணக்கம்’ என்று கூற வேண்டும்.
6. ‘திருக்குறளில் கூறியுள்ளவாறே வாழ்வோம்‘ என்று நாள்தோறும் உறுதிமொழி எடுத்துக் கொண்டு வள்ளுவர் நெறியில் வாழ்தல் வேண்டும்.
7. எந்த நிகழ்ச்சியைத் தொடங்கினாலும் கல்வி நிலையங்களிலும் பொதுவிடங்களிலும் வள்ளுவருக்கு வணக்கம் கூறி வள்ளுவர் நெறியில் வாழ்வோம் என்று உறுதி கூறித் தொடங்குதல் வேண்டும்.
8. திருவள்ளுவர் பெயரால் அறப்பணிக்குழு ஒன்றை அமைத்து வையகமெங்கும் தமிழர் நெறியைப் பரப்ப தமிழக அரசு ஆவன செய்தல் வேண்டும்.
9. திருக்குறளில் புலமை பெற்றுள்ள அறிஞர்கட்குப் பட்டங்களும் பரிசுகளும் வழங்குதல் வேண்டும்.
10. தமிழ்க்கலை, பண்பாடு, வரலாறு ஆகியவற்றை ஆய்வதற்கும் பரப்புவதற்கும் திருவள்ளுவர் பெயரால் பல்கலைக் கழகம் ஒன்று தோற்றுவிக்கப்பட வேண்டும்.
11. வள்ளுவர் நெறியை வையகமெங்கும் பரப்பத்தக்க, தமிழக அறிஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டும். வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் திருவள்ளுவர் பெயரால் தமிழ் ஆராய்ச்சித் துறைகள் அமைக்க வேண்டும்.
12. இந்த ஆண்டில் எடுக்கப் பெறும் திரைப்படங்கள் தொடக்கத்தில் திருவள்ளுவர் படத்தையும், சில குறட்பாக்களையும் காண்பித்தல் வேண்டும். கதை நிகழ்ச்சிகளில் ஆங்காங்கு திருக்குறள் கருத்துக்களை மிகுதியாகப் பரப்புதல் வேண்டும்.
இவ்வாறு திருவள்ளுவர் விழாவைக் கொண்டாடி மக்கள் வாழ்வைச் செம்மைப்படுத்த பசி, பிணி, பகை நீங்கி எல்லோரும் இன்புற்றிருக்கும் நிலையைத் தோற்றுவிப்போமாக!
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பேராசிரியர் இலக்குவனார் விடுத்த வேண்டுகோள்கள் கனவாகவே உள்ளன. இருப்பினும் காலம் இன்னும் இருக்கிறது. இனியேனும் இவற்றை நாம் நிறைவேற்றலாம்! ‘வாழ்க வளமுடன்’ என அந்த அமைப்பினர் கூறுவதுபோல், நாம் ‘வள்ளுவர் வணக்கம்’ எனக் கூறலாமே! மடல்கள், அழைப்பிதழ்கள் ஆகியவற்றில் திருக்குறளை எழுதிவிட்டுத் தொடங்கலாமே! நம் பிள்ளைகளுக்குத் திருவள்ளுவர் என்றும் தமிழ்மறைச் செல்வி என்றும் பெயர் சூட்டலாமே! குறள்நெறிச் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தலாமே! திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் திருவள்ளுவர், திருக்குறளுக்கு இடம் தரலாமே! குறள்நெறி ஆய்வையே முதன்மை நோக்கமாகக் கொண்டு திருவள்ளுவர் திருக்குறள் ஆராய்வுப் பல்கலைக்கழகம் நிறுவலாமே! உலகெங்குமுள்ள பல்கலைக்கழகங்களில் திருக்குறள் துறைகள் ஏற்படுத்தலாமே!
மேற்குறித்தவாறான ஒவ்வொன்றையும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் தத்தம் பகுதிகளில் செய்படுத்தத் தொடங்கினால் குறள்நெறிக் காவலர் பேராசிரியர் இலக்குவனார் கண்ட கனவு நனவாகும்! தெய்வப்புலவர் திருவள்ளுவரை உலக மக்கள் நன்கறிவர்! மேற்குறித்த 12 வேண்டுகோள்களையும் திருக்குறள் செம்மல் இலக்குவனார் தந்த கட்டளைகளாக எண்ணி நாம் பின்பற்றுவோம்! குறள் கூறும் மாந்தராக வாழ்வோம்!
இலக்குவனார் வழியில் குறள்நெறி போற்றுவோம்!
குறள்நெறி போற்றிக் குவலயம் காப்போம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply