திருவள்ளுவர் சீர்திருத்தப் பெரியார் – சி.இலக்குவனார்
திருவள்ளுவர் சீர்திருத்தப் பெரியார்
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்றார் பாரதியார். வள்ளுவர் தோன்றியதால் நம் தமிழ்நாட்டின் பெருமை உயர்ந்தது. உலகப் பெரும்புலவராம் திருவள்ளுவர் தோன்றிய நாடு என உலகோர் நம் தமிழ்நாட்டைப் போற்றுகின்றனர்.
வள்ளுவர் சங்கக் காலத்தில் வாழ்ந்த புலவர்களுள் தலைசிறந்தவர். இவர் ஏனைய புலவர்கள் சென்ற வழியில் செல்வதோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவர்களின்று மாறுபட்டும் சென்றுள்ளார். ஏனைய புலவர்கள் உலக வாழ்க்கையை உள்ளதை உள்ளவாறு சொல்லோவியப்படுத்தினர். வள்ளுவர் அவ்வாழ்க்கையைத் திருத்தியமைக்க முயன்றுள்ளார். மற்றைப் புலவர்கள் கள்ளுண்டலையும், புலால் அருந்துதலையும் பரத்தமை கொள்ளுதலையும் கடிந்துரைத்திலர். வள்ளுவர் அவற்றைக் கடிந்து ஒதுக்குகின்றார். மற்றைய புலவர்கள் கண்டதைக் கூறும்அறிந்த உண்மையைக் கூறும் அளவில் இருந்து விட்டனர். வள்ளுவர் பெருமானோ அவ்விதம் அமையாது, உலகையே சீர்திருத்தி அமைக்கவும் முயன்றுள்ளார். ஆகவே வள்ளுவரைத் தமிழ்நாட்டுப் புத்தர் என்றும், இயேசு என்றும், மகம்மது என்றும் கூறலாம். ஆகவே வள்ளுவர் ஒரு பெரும்புலவர்; சீர்திருத்தப் பெரியார்; சமயத் தலைவர்; அரசியல் அறிஞர். வள்ளுவர் கூறிய வழியில் இன்று தமிழ்நாடு செல்லுமானால், தமிழ்நாடே உலகத்திற்கு வழிகாட்டக் கூடியதாக இருக்கும்.
வள்ளுவர் சமயம்நெறியினை நாம் கடைப்பிடிப்போமாக! வள்ளுவர் குறளை ஒவ்வொரு தமிழரும் படிப்பாராக!
செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்:
சங்க இலக்கியம்: பக்கம் 63-64
Leave a Reply