திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 2
(திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 1 தொடர்ச்சி)
திருவள்ளுவர் 2.
தெய்வப் பாவலராக வள்ளுவரைச் சங்கப் பழம்புலவர்கள் கூறுவதால். அவர் தமக்கு வள்ளுவர் நீண்டகாலத்துக்கு முற்பட்டவராகவும். அவரறநூலின் இறவாச்சிறப்பு அங்கீகரிக்கப்படுதற்குப் போதிய அவகாசம் அக்குறளுக்கும் அதனடிகளைப் பாராட்டி எடுத்தாளும் சங்கப்பனுவல்களுக்கும் இடையே ஏற்பட்டிருக்கவும் வேண்டும். இது சம்பந்தமாய்த் திருக்குறளடிகளைச் சிந்திக்கச் செய்யும் சில சங்கச் செய்யுட்டொடர்களை ஈண்டுக் குறிப்போம் :-
- இடுக்கண்கால் கொன்றிட விழு மடுத்தூன்றும்
நல்லா ளிலாத குடி. (1030)
தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன
ஓங்குகுல நையவத னுட்பிறந்த வீரர்
தாங்கல்கட னாகுந்தலை சாய்க்கவரு தீச்சொல்
நீங்கல்மட வார்கட னென்றெழுந்து போந்தான்.
(சிந்தா – காந்தருவ-6)
2.வேட்ட பொழுதி னவையவை போலுமே
தோட்டார் கதுப்பினா டோள். (1105)
வேட்டார்க்கு வேட்டனவே போன்றினி வேய்மென்றோட்
பூட்டார் சிலை நுதலாட் புல்லா தொழியேனே.
(சிந்தா-குண-192)
3. கடலன்ன காம முழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில். (1137)
எண்ணில் காம மெரிப்பினு மேற்செலாப்
பெண்ணின் மிக்கது பெண்ணல தில்லையே.
(சிந்தா – குண – 148)
4. கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க்
காற்றாதா ரின்னா செயல். (894)
யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர். (895)
வேந்தொடு மாறுகோடல் விளிகுற்றார் தொழிலதாகும்.
(சிந்தா – குண – 239)
5. ஆக்கங் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கா ரறிவுடை யார். (463)
வாணிக மொன்றுந் தேற்றாய் முதலொடுங் கேடு வந்தால்
ஊணிகந் தூட்டப் பட்ட வூதிய வொழுக்கி னெஞ்சத்
தேணிகந் திலேசு நோக்கி இருமுதல் கெடாமை கொள்வார்
சேணிகந் துய்யப் போநின் செறிதொடி யொழிய வென்றார்.
(சிந்தா – காந்தரு – 278)
6. இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்று
நல்லார்க்கு நல்ல செயல். (905)
இல்லாளை யஞ்சி விருந்தின்முகங் கொன்றநெஞ்சிற்
புல்லாளனாக.
(சிந்தா – மண்மகளிலம்பகம், செய் – 217)
7. உலகந் தழீஇய தொட்ப மலர்தலும்
கூம்பலு மில்ல தறிவு. (425)
கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது
வேட்டதே வேட்டதா நட்பாட்சி-தோட்ட
கயப்பூப்போன் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை
நயப்பாரு நட்பாரு மில்.
(நாலடி – நட்பாராய்தல் – 5)
8. ஒருநா ளெழுநாள்போற் செல்லும் சேட் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு. (1269)
பெறினென்னாம் பெற்றக்கா லென்னா முறினென்னாம்
உள்ள முடைந்துக்கக் கால். (1270)
ஊடற்கட் சென்றேன்மற் றோழி யதுமறந்து
கூடற்கட் சென்றதென் னெஞ்சு. (1284)
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
புலப்பேன்யான் என்பேன்மன் அந்நிலையே அவற்காணிற்
கலப்பேன் என்னுமிக் கையறு நெஞ்சே.
ஊடுவேன் என்பேன்மன் அந்நிலையே அவற்காணிற்
கூடுவேன் என்னுமிக் கொள்கையி னெஞ்சே.
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
துனிப்பேன்யான் என்பேன்மன் அந்நிலையே அவற்காணில்
தனித்தே தாழும் இத்தனி நெஞ்சே.
எனவாங்கு
பிறைபுரை யேர்நுதால் தாமெண்ணி யவையெல்லாம்
துறைபோத லொல்லுமோ தூவாகா தாங்கே
அறைபோகு நெஞ்சுடை யார்க்கு.
(கலி – 67)
9. துஞ்சுங்காற் றோண்மேல ராகி விழிக்குங்கால்
நெஞ்சத்த ராவர் விரைந்து. (1218)
ஒ ஒ கடலே,
தெற்றெனக் கண்ணுள்ளே தோன்ற இமையெடுத்துப்
பற்றுவென் என்றியான் விழிக்குங்கால் மற்றுமென்
நெஞ்சத்துள் ளோடி யொளித்தாங்கே துஞ்சாநோய்
செய்யு மறனி லவன்.
(கலி-144)
10. காமமும் நாணு முயிர்காவாத் தூங்குமென்
நோனா உடம்பி னகத்து. (1163)
11. காம முழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி. (1131)
நலிதருங் காமமுங் கெளவையு மென்றிவ்
வலிதின் உயிர்காவாத் தூங்கியாங் கென்னை
நலியும் விழுமம் இரண்டு.
(கலி-142)
காமக் கடும்பகையிற் றோன்றினேற் கேம
மெழினுத வீத்தவிம் மா.
(கலி-139)
12. அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய்
தந்நோய்போற் போற்றாக் கடை. (315)
சான்றவர் வாழியோ சான்றவிர் என்னும்
பிறர்நோயும் தந்நோய்போற் போற்றி அறனறிதல்
சான்றவர்க் கெல்லாம் கடனா லிவ்விருந்த
சான்றீர் உமக்கொன் றறிவுறுப்பென்.
(கலி-139)
13. குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் றொழில். (549)
குடிபுறங் காத்தோம்புஞ் செங்கோலான் வியன்றானை
விடுவழி விடுவழிச் சென்றாங்கு அவர்
தொடுவழித் தொடுவழி நீங்கின்றாற் பசப்பே.
(கலி – 130)
(தொடரும்)
நாவலர் சோமசுந்தர பாரதியார்
Leave a Reply