தலைப்பு-திருவள்ளுவர் முதல் புரட்சியாளர், சி.இலக்குவனார் :thalaippu_thiruvalluvar_muthalpuratchiyaalar_s.Ilakkuvanar02

திருவள்ளுவர்  முதல் புரட்சியாளர்

 

  கி.மு.ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பியர் பிறமொழித் தாக்குதலால் தமிழ் அழிந்து போவதைத் தடுத்து நிறுத்தினார். திருவள்ளுவர், அயல் மக்கள் செல்வாக்கால் தமிழ்ப் பண்பாடு அழிந்து போவதைத் தடுத்து நிறுத்தினார். தமிழ் மக்களின் பழைய பண்பாட்டில் காணப்பட்ட நல்வாழ்வுக்குப் பொருந்தாவற்றையும் களைந்தெறிய அறிவுரை கூறியுள்ளார்.

  புரட்சி என்பது மக்கள் வாழ்வில் காணப்படும் பொருந்தாத மூடநம்பிக்கைக் கொள்கைகளை எதிர்த்துப் போர் முழக்கம் செய்து மாற்றி அமைக்க முயலுவதே ஆகும். பழமையைப் புரட்டிவிட்டு அகற்றிவிட்டு புதுமையைப் புகுத்துவதுதான் புரட்சி. புரட்சி என்றால் பூசரும் போரும், கொள்கையும் கொலையும் தோன்றுமென்று கருதலாம். மேல்நாடுகளில் அவ்வாறுதான் புரட்சிகள் நடந்துள்ளன. ஆனால் திருவள்ளுவர் செய்துள்ளது எண்ணப் புரட்சியாகும்.

  மகளிரின் உயர்வுக்காகப் போராட்டம் தொடங்கிய முதல் புரட்சியாளரும் வள்ளுவரே. பெண்களின் சமநிலைக்காக, அவர் கூறியுள்ள கருத்துகள் இன்றும் என்றும் பொன்போலப் போற்றத்தக்கன.

  இவ்வாறு பல புரட்சிகளைத் திருவள்ளுவர் ஆற்றியுள்ளார். ஊன் உண்ணுதலை எதிர்த்தார். கள் உண்ணுதலைக் கடிந்தார். களவாடுதலை இகழ்ந்தார். இவர் செய்துள்ள புரட்சிகளை விரிப்பின் பெருகும். இவரைத் தமிழகத்தின் … ஏன் உலகத்தின் முதற்புரட்சியாளர் என்று வாயார வாழ்த்தி நெஞ்சார நினைந்து அவர் வழிமுறைகளில் வாழ்ந்து அவருக்கு நன்றி செலுத்துவோமாக.

 

செந்தமிழ்ச்செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்