பிறமொழி நூல்களில் திருக்குறள் கருத்துகளின் பரவல்: அணிந்துரை ½; இலக்குவனார் திருவள்ளுவன்
முனைவர் மெய்.சித்திரா, ஆங்காங்கு
பிறமொழி நூல்களில்
திருக்குறள் கருத்துகளின் பரவல்:
அணிந்துரை 1/2
முனைவர் மெய்.சித்திரா அறிவியலிலும் கணிப்பொறிப் பயன்பாட்டிலும் வரலாறு-தொல்லியலிலும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளதுடன் தகவல் முறைமைகளில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்; கல்வெட்டியலில் பட்டயம் பெற்றுள்ளார்; இதழியலில் சான்றிதழ் பெற்றுள்ளார்; தொடர்ந்து கல்விப் பட்டங்கள் பெற்று வருகிறார்.
தமிழ்-கொரிய, தமிழ்-சுமேரிய, தமிழ்-சீன பண்டைய தொடர்புகள், கோவில் குறியீடுகள், கோலங்கள் பற்றிய ஆய்வாளராகத் திகழ்கிறார். ஆங்காங்கு தமிழ் மலர் ஆசிரியராக 4 ஆண்டுகள்(2014-2018) தொண்டாற்றி யுள்ளார். 2020 முதல் ‘இலக்கியச் சுடர்’ மின்னிதழ் ஆசிரியர் குழுவில் செயலாற்றி வருகிறார். இவரது படைப்புகள் தினமலர், தினத்தந்தி, தினமணி, வீரகேசரி, கோகுலம், சுட்டி விகடன் முதலிய இதழ்களிலும் திண்ணை, தமிழ்ச் சிகரம், முத்துக்கமலம் முதலிய இணையத்தளங்களிலும் வருகின்றன.
வாழ்க்கை வரலாறுகள் (மொழிபெயர்ப்பு)(2), குறும்புதினங்கள்(1), சிறுகதை நூல்கள் (மொழிபெயர்ப்பு)(4), பயண நூல்(2), ஆய்வு நூல்கள்(2), ஆங்கில நூல்கள்(6), சப்பானிய மொழி நூல்கள்(2), தமிழ் மொழி கற்றல் நூல்(1), மொழிபெயர்ப்பில் துணை அகராதி நூல்(1), தொகுப்பு நூல்(1), மொழிபெயர்ப்பு நூல்(3), ஆய்வுக் கட்டுரைகள் தொகுப்பு (1), மின் நூல்கள்(16), எனப் பல்வகைத்தலைப்புகளில் பல நூல்களை எழுதியுள்ளார். சீனம், கொரியம், சப்பானியம் முதலிய அய மொழிகளுடன் தொடர்புடைய கட்டுரைகளையும் சீனத்திடம் தொடர்புபடுததி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்காளம், குசராத்தி, இந்தி முதலிய மொழிகளின் பட அகராதிகளையும் உருவாக்கியுள்ளார். நாடகங்களை எழுதியும் நடித்தும் வருகிறார்.
கண்டோனீயம் அல்லது கண்டோனிசு (Cantonese) என்பது சீன-திபெத்திய மொழிக் குடும்பத்தின் ஒரு தென்சீன மொழியாகும். இம்மொழியிலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளுக்கான பட அகராதிகளை வெளியிட்டுள்ளார். இவரது மொழியறிவு மொழி கற்பித்தலுக்கும் அவ்வம்மொழிகளுடன் தமிழ்ப்பண்பாடு, நாகரிகம், மொழி முதலியவற்றுடனான ஒப்புமைச் சிறப்புகளை விளக்கவும் பயன்பட்டு வருகிறது.
இத்தகைய பன்முக ஆற்றலுடன் விளங்கும் இவரின் ஆளுமைகளைக் கூறி முடிப்பின் நூலாய்விற்கு நேரமிருக்காது. எனவே, சுருக்கமாக, இத்தகைய பன்முகத் திறனாளரின் நூற்பணியும் கலைப்பணியும் பிற பணிகளும் சிறந்துதானே இருக்கும் எனலாம்.
முனைவர் மெய்.சித்திரா,
“தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்”
என்னும் பாரதியார் வாக்கிற்கிணங்கத் தமிழ் இலக்கியங்களைப் பிற மொழிகளில் மொழி பெயர்த்தும் பிற மொழி நூல்களுடன் ஒப்பாய்வு செய்தும் தமிழ்ப்பணி யாற்றி வருகிறார். ‘பிறமொழி நூல்களில் திருக்குறள் கருத்துகளின் பரவல்’ என இப்பொழுது் திருக்குறள் ஆய்வுகள், ஒப்பீடுகள் குறித்த கட்டுரைத் தொகுப்பை வெளியிடுகிறார். இந்நூலில் 15 கடடுரைகள் இடம் பெற்றுள்ளன.
திருக்குறள் மாநாடுகள், கருத்தரங்கங்கள், தொடர்பான பொழிவுகள், உலகத்தமிழ், தமிழணங்கு முதலான இதழ்களிலும் இடம் பெற்ற கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
திருக்குறளில் காணப்படும் இருமைக் கூறுகள் (Duality in Thirukkural) என்பது முதல் கட்டுரை. இக்கட்டுரை யாழ்ப்பாணத்தில் பிப்பிரவரி, 2021 இல் நடைபெற்ற இரண்டாம் திருக்குறள் மாநாட்டுக் கருத்தரங்கத்தில் வாசிக்கப்பெற்றது.
“வள்ளுவர் குறளில் பல இடங்களில் இருமைக் கூறுகளைப் பயன்படுத்தியுள்ளார்.” எனக் குறிப்பிட்டு அது குறித்து ஆராய்ந்து கட்டுரையைத் தந்துள்ளார்.
இருமை/Duality குறித்து ஆங்கில அகராதி விளக்குவதை எடுத்துரைக்கிறார். தாவோ மதத்தின் புனித நூலான தாவோ தே சிங்கின் இரண்டாவது அத்தியாயத்தில் இருமை சிறப்பாய் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளதையும் விளக்கியுள்ளார்.
திருக்குறளில் இருமை, இரு, இரண்டு என்ற சொற்கள் ஆகிய இருமைக் கூறுகளை விளக்கியுள்ளார். திருக்குறளில் இடம் பெற்றுள்ள ஒத்த இருமைக் கூறுகள், மாறுபட்ட இருமைக் கூறுகள், வேறுபட்ட இருமைக் கூறுகள் என வகைப்படுத்தியும விளக்கியுள்ளார். பரவலாக எடுத்தாளப்படாத திருக்குறளில் காணப்பெறும் இருமைக்கூறுகளை நன்கு விளக்கியுள்ளார்.
திருக்குறளில் கருத்தறிவுறுத்தும் திறன்(Presentation Skills in Thirukkural) என்பது இரண்டாம் கட்டுரை. இது, செட்டம்பர், 2022 இ்ல் குறள் வழி ஆளுமைக் குழு நிகழ்வில் வழங்கப்பட்ட உரையாகும்.
“கருத்தறிவுறுத்துல் கூறுகளை நாம் திருக்குறளின் வழி, இடம், காலம், அவை, பொருள், நடை, குறிப்பறிதல், மொழி, முறைப்படுத்தல் ஆகிய அதிகாரங்களின் வாயிலாய்த்” தெளிவுபடுத்துகிறார். இவற்றின் வழிக் கருத்தறிவுறுத்தல் திறனைச் சிறப்பாய் வளர்த்துக் கொள்ளலாம் என்று வலியுறுத்துகிறார்.
கருத்தறிவுறுத்தலுக்கு நேரடியாகத் தொடர்புடைய அவையறிதல், அவைஅஞ்சாமை முதலிய அதிகாரக் கருத்துகளை மட்டுமல்லாமல், வலியறிதல், இடனறிதல், காலமறிதல் முதலான அதிகாரத் திருக்குறட் கருத்துகளையும் கருத்தறிவுறுத்தலுக்குப் பயன்படுத்திச் சிறப்பாக விளக்கியுள்ளார். திருக்குறட் பாக்கள் குறிப்பிட்ட அதிகாரத்துடன் நோக்காமல் பல வகையிலும் நோக்க வேண்டும் என்பதற்கு இவரின் விளக்கங்கள் எடுத்துக்காட்டுகளாய் அமைகின்றன.
மூன்றாம் கட்டுரை திருக்குறள் கூறும் சமத்துவத்திற்கான நெறிகள் (Thirukkural on Equality Norms) என்பதாகும். இது வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FETNA) 2024 மலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
“அந்நாடு இந்நாடு என்றன்றி எந்நாட்டிற்கும் அக்கால இக்காலங்களுக்கு மட்டுமேயன்றி எக்காலத்திற்கும் அச்சமயம் இச்சமயம் என்றன்றி எச்சமயத்திற்கும் அக்குலம் இக்குலம் என்றன்றி எக்குலத்தினருக்கும் அத்துறை இத்துறை என்றன்றி எத்துறைக்கும் அச்சூழல் இச்சூழல் என்றன்றி எச்சூழலுக்கும் ஏற்ற” சமத்துவ நிலையைத் திருவள்ளுவர் வழங்குவதாக இதில் தெரிவித்துள்ளார்.
சமத்துவத்திற்கான தேவை, சமத்துவம் தோன்ற வழி, சமத்துவத்தை உருவாக்கும் வழி, சமத்துவம் நிலைக்கும் இடம் எனச் சமத்துவம் குறித்த வரையறை தேவை முதலியவற்றைத் திருக்குறள் கொண்டு ஆசிரியர் விளக்குகிறார்.
நான்காவது கட்டுரை தாவோ தே சிங்கு நூலின் பின்புலம் குறித்தது.
தாவோ தே சிங்கு கருத்துகள் நேரடியாய், சீன மொழியிலிருந்து தமிழுக்கு இந்நூலாசிரியரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அந்த மொழிபெயர்ப்புடன் திருக்குறள் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாகப் பிற மொழிகளில் உள்ள நூல்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு அடிப்படையில் அல்லது ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டவற்றின் அடிப்படையிலேயே ஆய்வுகள் நடைபெறுகின்றன. அதுபோல், தாவோ தே சிங்கு நூலைப் பொறுத்தவரை சி. மணி (2002) என்பவரின் ‘தாவோ தே சிங்கு இலாவோட்சு’ என்னும் நூலும் மலர்ச்சி பிரபாகரன் என்பவரின் (2019) ‘இருளுக்குள் ஒளிந்திருக்கும் இருள்’ என்னும் நூலும் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவை. ஆனால், நூலாசிரியரான முனைவர் மெய். சித்திராவே சீனத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார். எனவே இதனடிப்படையிலேயே ஒப்பாய்வு செய்துள்ளார். எனவே, இவருக்கு எளிதில் கைவந்துள்ளது எனலாம்.
புறநானூற்று ஒப்பாய்வு குறித்த சே.தனபால், திருமூலரின் திருமந்திரத்துடனான ஒப்பாய்வு குறித்த முனைவர் சிரீதேவி ஆகியோரின் ஒப்பாய்வுகள்(ஆங்கிலக் கட்டுரை) பற்றியும் இவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் திருக்குறளுடன் தொடர்பு படுத்தும் ஒப்பாய்வுகள் அருகிக் கிடப்பதால அப்பணியை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஏதோ தான் மட்டும்தான் சீன நூல்குறித்து ஒப்பாய்வு செய்வதுபோல் காட்டாமல் முந்தைய நூல்கள், கட்டுரைகள் ஆகியவற்றையும் குறிப்பிடுவது நூலாசிரியரின் நடுநிலைப் பண்பிற்குச் சான்றாகும்.
இருவேறு நாடுகளின் சூழலுக்கு ஏற்ப, ஒத்த கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டு தரப்பட்டுள்ளதாகவும் ஒன்றுக்கொன்று முழுமையாய் ஒத்து இருப்பது சாத்தியமல்ல என்பதால் பெருமளவு ஒத்துள்ள கருத்துகளின் அதன் அடிப்படையில் ஒப்பாய்வுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இரு நூல்களிலும் ஒத்த கருத்துகள் பல இருப்பினும் சிலவற்றை மட்டுமே இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் இவரது திருக்குறள்-தாவோ தே சிங்கு ஒப்பாய்வைத் தமிழுக்கான புதுவரவாக வரவேற்கலாம்.
ஐந்தாவது கட்டுரை இருமைக் கூறுகள் – ஒப்பீட்டாய்வு பற்றியது.
திருக்குறளில் காணப்படும் இருமைக் கூறுகள் குறித்து முதல் கட்டுரையிலேயே ஆய்வுரை வழங்கியுள்ளார். இருப்பினும் இதில் சீன நூலகளுடன் ஒப்பிட்டு ஆய்வுரை அளித்துள்ளார். “இருமைக் கூறுகள் வாயிலாய், சீனத்திற்கும் தமிழகத்திற்கும் உள்ள பண்டைய தொடர்பு புத்த மத அறிமுகத்திற்கும் சோழர்கள் காலத்திற்கும் முன்பே வலுவாய் இருந்திருக்க வேண்டும் என்பதை இக்கட்டுரை வலியுறுத்துகிறது.”
ஆறாவது கட்டுரை கருத்து ஒப்புமைகள் (Concept Similarities) குறித்தது. அமெரிக்கா(சிகாக்கோ)வில் நடைபெற உள்ள உலகத் திருக்குறள் மாநாட்டில் வாசிப்பதற்காகத் தெரிவு செய்யப்பட்டது.
இலக்குவனார் திருவள்ளுவன்
thiru2050@gmail.com
வெளியீடு
மின்கவி, கோபிச்செட்டிப்பாளையம்,ஈரோடு 638452,பேசி 9826227537, பக்கங்கள் 166, விலை உரூ.150/-
Leave a Reply