(பங்குனி 23, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 06, 2014 இதழின் தொடர்ச்சி)

B__NATARAsAN01

தெரிந்து வினையாடல்

  தன் மாட்டு அன்பும் அறிவும் தனக்கென அவாவின்மையும், செய்ய வேண்டும் வினையில் துணிவுமுடையாரைத் தெரிந்து செயலில் ஈடுபடுத்த வேண்டும். அந்த வினைக்குந் தகுந்தவனை எவன் என்று கண்டு அவன் மாட்டு வினையின் ஒப்படைத்துவிட வேண்டும்.

சுற்றம் தழுவல்

 தனக்கு அதிகாரம் வந்துவிட்டதென்று இறுமாப்படைந்து, பழமையை மறத்தலாகாது. பழைய நண்பர்களைச் சுற்றமாகத் தழுவுதல் வேண்டும். பொதுநோக்கால் பயனில்லை. வரிசையால் அவரவர்க்கேற்ற முறையில் ஆதரவு தருதல் வேண்டும். பிரிந்தவரைக் காரணம் கண்டு மீண்டும் தழுவிக் கொள்ளல் வேண்டும்.

பொச்சாவாமை

  சோர்தல் ஆகாது. உவகை மகிழ்ச்சியில் மூழ்கி விடலாகாது. யார் மாட்டும் இகழ்ச்சி ஆகாது. நீங்காது விழிப்போடு இருத்தல் வேண்டும்.

செங்கோன்மை : கொடுங்கோன்மை:

  நடுவுநிலை நின்று எதையும் தேர்ந்து ஆட்சி நடத்துதல் வேண்டும். நல்லோரைப் பேணியும், தீயோரை ஒறுத்தும் ஆட்சி செய்யத் தயங்கலாது. கொடுங்கோலன் தன் வாழ்வையும் குடிகள் வாழ்வையும் அழித்து விடுகின்றான். கடுஞ் சொல்லனாதல், காண்டற்கு அரியனாதல், கட்டற்ற கடுமையான தண்டனைகளை விதித்தல் – இவை அஞ்சத்தகுந்த கொடுங்கோலன் இயல்புகள், நீதியோடு கருணையும் கலந்து வழங்குதல் வேண்டும். கடிதோச்சி மெல்ல எறிய வேண்டும்.

ஒற்றாடல் ; மடியின்மை:

  ஒற்றால் எவற்றையும் அறிந்து கொள்ளல் வேண்டும். அறிந்தவற்றால் உண்மை கண்டு, தளராது ஊராருடையவனாக இருத்தல் வேண்டும். உள்ளத்திலே ஊக்கமுடையனாதல் போல, கருத்திலே மடியில்லாதவனாயும் செயலிலே ஆள்வினை உடையவனாகியும் அமைதல் வேண்டும். எவ்வகைத் துன்பம் நேரினும் மலையாதிருத்தல் வேண்டும். இடும்பைக்கே இடும்பை செய்தல் வேண்டும்.

அரசங்கங்கள்:

  இங்ஙனமாக அரசியல் தலைவன் கொள்ள வேண்டிய நற்பண்புகளையும் தள்ள வேண்டிய தீப்பண்புகளையும் விதைத்துவிட்டு மேலே அரசியல் உறுப்புக்களான அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு ஆகியவற்றின் திறன்களை விரித்துச் செல்கின்றார். பின்னே குடிகளுக்கு இன்றியமையா அருஞ்சிறப்புக்களை ஒழிபியலில் கூறிப் பொருட்பாலை முடிக்கின்றார்.

  இதுகாறும் கூறியவற்றால் வள்ளுவர் அரசியல் பற்றிக் கண்ட திரண்ட சில உண்மைகள் தெளிவாகும்.

பொருளியலும் அரசியலும்:

1. மக்கள் இன்பம் பொருள் வளத்தில் நல்லாட்சியில் மலர்வது. அரசியல் அதற்கு ஒரு துணைக் கருவியேயாகும்.

  இதனால்தான் அரசியல் பற்றி விரித்துக் கூறினாரேனும் அப்பகுதிக்கும் பொருட்பால் என்றே பெயரிட்டார். இதுகண்ட சிலர், வள்ளுவர் சாணக்கியரைப் பின்பற்றினாரென்பர். சாணக்கியரும் அரசியலைப் பெரும்பாலாக எடுத்தோதும் தமது நூலுக்கு அர்த்த சாத்திரம் அல்லது பொருள் நூலென்றே பெயரிட்டுப் போயினர். ஆனால் சாணக்கியருக்கு முன்னே வந்த பிரகசுபதி, சுக்கிரன் போன்றோரும் அவ்வாறே செய்துள்ளனர். அவர்கட்கும் ஆதியான மகாபாரதத்திலே அந்த முறையிலேயே பெயர் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இது அன்று இந்திய நாட்டுக்குரிய ஒரு பொது மரபாக இருந்திருக்கின்றது. பொருள் வளமே இன்பத்திற்கு நேர் காரணம். அரசியல் துணைக் காரணமே.

(தொடரும்)

குறள்நெறி: சித்திரை 19, தி.பி.1995 / 01.05.1964