தலைப்பு-கல்வி அனைவர்க்கும் பொது, வள்ளுவர், சி.இலக்குவனார் ; thalaippu_kalvipodhu_S.Ilakkuvanar

வள்ளுவர் கல்வி அனைவர்க்கும் பொது  என்றார்!

  மக்களில் கல்விப்பேறு அடைதற்குரியவர் சிலரே என்றனர். சில நாடுகளில் படிப்பவர் வேறு, உழைப்பவர் வேறு என்று வகைப்படுத்தினர். உயர்ந்தோரே படித்தல் வேண்டும், உழைப்பவர் படித்தல் வேண்டா என்றும விதியாக்கினர். ஆனால், வள்ளுவர் கூறியது என்ன? கல்வி அனைவர்க்கும் பொது; கண்கள் அனைவர்க்கும் இயல்பாக உரியன; அதுபோலக் கல்வியும் எல்லார்க்கும் உரியதாகும். கண்களோடு பிறத்தல்போலக் கல்வியோடு வளர்தல் வேண்டும். கண்ணில்லாது வாழ முடியாததுபோல் கல்வியில்லாதும் வாழ முடியாது. கல்வி பெறாதிருத்தல் பெருங்குற்றம். பெறமுடியாது தடுத்தல் அதனினும் பெருங்குற்றமாகும்.

  கல்வியைப் பறிப்பது கண்ணைப் பறிப்பது போலாகும் என்று கல்வி, கல்லாமை என்னும் இயல்களில் தெளிவுறக் கூறியுள்ளார்.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு

என்று கூறுவதில் ஒரு புரட்சியையும் செய்துள்ளார். கல்வி என்றால் வெறும் காப்பியங்களை மட்டுமோ இலக்கண நூல்களை மட்டுமோ கற்றல் அன்று. அறிவியலை(எண்)யும் கலை(எழுத்து)களையும் ஒருவர் கற்றால்தான் முழுமைக் கல்வியாகும் என்கிறார். பிறர் மாக்களாகி விடுவர் என முன்னறிவிப்பு கொடுத்துள்ளார். இன்று கல்லூரிகளில் வள்ளுவர் கருத்துக்கேற்பக் கலையும்(Arts)அறிவியலும்(Science) சேர்த்துக் கற்பிக்கத் திட்டம் வைத்திருப்பினும் செம்மையான முறையில் செயல்படவில்லை.

–  பேராசிரியர் சி.இலக்குவனார்,

திருவள்ளுவர் – தமிழகத்தின் முதல் புரட்சியாளர்

  குறளமுதம் : பக்கம் 519 – 520