வள்ளுவர் சொல்லமுதம் 16: அ. க. நவநீத கிருட்டிணன்: ஊக்கமும் ஆக்கமும்
(வள்ளுவர் சொல்லமுதம் 15: அ. க. நவநீத கிருட்டிணன்: பொருளும் அருளும்-தொடர்ச்சி)
வள்ளுவர் சொல்லமுதம்
கக ஊக்கமும் ஆக்கமும்
வினை செய்தற்கண் கொள்ளும் உள்ளக் கிளர்ச்சியே ஊக்கம் எனப்படும். ஊக்கமே வாழ்வில் உயர்வைத் தருவது. ஆதலின் ‘ஊக்கமது கைவிடேல்‘ என்று ஓதுவார் தமிழ் மூதாட்டியார். ஊக்கம் உடை யவர் எல்லாம் உடையவர் என்றே சொல்லப் பெறுவர். ஊக்கம் இல்லாதவர் என்னுடையரேனும் இலர் என்பர் வள்ளுவர். – ஊக்கம் உடைமையே ஒருவனுக்கு நிலைபெற்ற செல்வம். பிற செல்வங்களை இழப்பினும் ஊக்கத்தின் உறுதுணையால் அவற்றைப் பெறலாம். ஊக்கம் இல்லாதார் பெற்ற செல்வத்தைக் காக்கும் திறனின்றி இழப்பர். ஊக்கம் உடையார் கைப்பொருளை இழந் தாலும் “ஐயோ! செல்வத்தை இழந்தோமே!@ என்று சிந்தை வருந்தார். வினை செய்யுங்கால் விளையும் இடை யூறுகள் பலவாயினும் அவை கண்டுமனம் வெதும்பார் சகடம் ஈர்க்கும் பகடுபோல ஊக்கமுடன் செயலாற்ற வல்லாரை வந்துற்ற துன்பமே துன்பப்படும் என்பர் தெய்வப் புலவர். – அயலூர்க்கு வழி அறியாதார் அறிந்தார்பால் வழி வினவிச்சென்று சேர்வார் அன்றோ! அது போல இடர் கண்டு தளராத ஊக்கமுடையான் இருக்கும் இடத்தைத் தேடி, ஆக்கம் தானே அதர் வினாய்ச் செல்லும். தாமரைத் தடாகத்தில் நிறைந்த தண்ணீர் ஆழத்தின் அளவினதாகத் தாமரை மலரது தாளின் நீளமும் அமையும். தடாகத்தில் நீர் பெருகு மாயின் தாமரை மலர்த்தாளும் அதற்கேற்ப நீளும். நீராழம் குறையுமாயின் அம் மலர்த் தாளும் சுருங்கும். அதுபோலவே மக்கள் மனத்தில் கொள்ளும் ஊக்கத் தின் அளவினதாகவே வாழ்வில் உயர்ச்சி அடைவர். “
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்.
உள்ளத் தனைய(து) உயர்வு
என்பது வள்ளுவர் சொல்லமுதம். போர்க்களம் புகுந்த களிறு மிகுதியான அம்பு களால் புண்பட்டாலும் ஊக்கத்தில் தளராது. உயிர் நீங்கும் வரைக்கும் போராடித் தன் பெருமையை நிலை நாட்டும். அதுபோல உறுதியான ஊக்கம் உடையவர்கள் தாம் கருதிய உயர்ச்சிக்குச் சிதைவு ஏற்படினும் சிந்தை தளராமல் தம் பெருமையை நிலை நிறுத்துவர். யானை மற்றைய விலங்கினும் பெரிய உடம்பை உடையது. அதுவன்றிக் கூர்மையான கொம்புகளையும். உடையது. ஆயினும் தன்னைக் காட்டிலும் மிகுதியான ஊக்கமுடைய புலி வந்து தன்னைத் தாக்குமாயின் அதற்கு அஞ்சி ஒடுங்கும். புலியின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் யானை பெற்றிருந்தும் ஊக்கம் இன்மையால் அவ் ஊக்கம் பெரிதுமுடைய புலிக்கு அஞ்சுவ தாயிற்று. அதுபோலவே பகைவரின் மிக்க மெய் வலியும் படைவலியும் உடையராயினும் அவர் ஊக்கம் இலராயின், அஃது உடையார்க்கு அஞ்சியழிவர் என்று உய்த்துணர வைத்தார் வள்ளுவர்.
ஆற்றலையும் ஆக்கத்தையும் பெருக்கும் ஊக்கத்தைப் பெறாதவர், யாம் வள்ளன்மை உடையோம் என்று தம்மைத் தாம் மதிக்கும் மாண்பினைப் பெறார். ஊக்கத்தால் முயற்சியும், முயற்சியால் பொருளும் பொருளால் கொடையும், கொடையால் செருக்கும் முறையே உளவாகும். ஊக்கம் இல்லாது ஒழியவே முயற்சியும் பொருளும் கொடையும் செருக்கும் முறையே இலவாயின. ஆதலின் ஒருவற்கு உறுதி யான அறிவென்பது ஊக்க மிகுதியே. அஃது இல்லாதார் மக்களாகார், மரங்களாவார் என்பர் திருவள்ளுவர். கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் மரங்களோவெனின் காய் கனிகளைத் தரும்; தேவர் உறையும் திருக்கோவில், இல்லம், தேர், மரக்கலம் ஆகியவற்றிற்கு உறுப்பாக அமையும். ஊக்கமற்ற மக்களாய மரங்களோ எதற்கும் பயன்படா. மக்கள் எண்ணும் எண்ணங்கள் என்றும் உயர்ந்தனவாகவே இருத்தல் வேண்டும். அவற்றை அடைவதையே குறிக்கோளாகக் கொண்டு உழைக்க வேண்டும். ஊழ்வினை காரணமாக எண்ணம் நிறைவேற வில்லையாயினும் அவ் எண்ணத்தை விடுதல் கூடாது.
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து
என்பது வள்ளுவர் சொல்லமுதம்.
ஒருவன் வாழ்வினைக் கெடுப்பன நான்கு தீய பண்புகள். சோம்பல், விரைந்து செய்வதனை நீட்டித்துச் செய்யும் இயல்பு, மறதி, தாக்கம் என்பன அத் தீய பண்புகள். இந்நான்கும் ஊக்கத்தை அறவே ஒழிக்கும் திறமுடையன. “கெடுநீரார் காமக் கலன்” என்றே இவற்றைக் குறிப்பார் வள்ளுவர். கேடுறுவார் நாடி அணியும் அணிகலன்கள் இத் தீக்குணங்கள். அவர்கள் பிறவிக்கடலுள். ஆழ்ந்து வருந்த விரும்பி யேறும் மரக்கலங்கள் என்றும் உரைக்கலாம்.
மடியே மற்றைய மூன்றற்கும் பிறப்பிடமாய் அமைவது. ஊக்கம் உடையார்க்கும் ஒரு சில சமயங்களில் தாமத குணத்தால் சோம்பல் தோன்றும். அது தோன்றிவிட்டால், அவர் தோன்றிய குடி என்னும் குன்றாத விளக்கும் அணைந்துபோகும். “மடி என்னும் மாசு ஊர மாய்ந்து கெடும்” என்பார் வள்ளுவர். மடி உடையார் அழிதற்கு முன்னரே, அவர் பிறந்த குடி விரைந்து அழியும். சோம்பல் உடை யார்க்கு, நிலம் முழுதாளும் மன்னரது நீள் செல்வம், தானே வந்து சேர்ந்தாலும் அதன் பயனை அவர்கள் அடையார். அவர்கள் பிறரால் இகழ்ந்து பேசப் பெறுவர். தம் பகைவர்க்கு அடங்கியொழுகும் இழி நிலையை அடைவர். இங்ஙனம் மடியின் தீமையை விளக்கியருளினார் வள்ளுவர்.
இடையே எழும் மடியை ஒழித்து, உள்ளத்தே ஊக்கம் பெருகியவன் உடல் உழைப்பும் உடையவனால் வேண்டும். அதனையே வள்ளுவர் ஆள்வினை யுடைமை என்று அறிவுறுத்துவார். இடைவிடாத மெய்ம்முயற்சியே ஆள்வினை எனப்படும். தொழில் ஆளும் தன்மையுடையது அம்முயற்சியாதலின் அதனை ஆள்வினை என்று குறித்தார்.
ஊக்கமும் ஆள்வினையும் ஒருங்குடையான் எத்தகைய அரிய செயலையும் எளிதில் முடிப்பான். அதனை முடித்தற்கு ஏற்ற பெருமையை முயற்சி தருவதாகும். ” முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்பர். “முயற்சி திருவினை ஆக்கும்” என்பது முதற்பாவலரின் மொழி. முயற்சி என்னும் உயர்ந்த குணமுடையாரே பிறர்க்கு உதவும் பெருமையினை அடைவர்,
“தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்” என்பார் நல்லாதனார். தாளாண்மை என்னும் தனி முயற்சி யில்லாத ஒருவன், எல்லார்க்கும் உதவும் வள்ளலாக விளங்க வேண்டும் என்று விரும்புவது மடமையாகும். படை கண்டால் அஞ்சும் பேடி, போர்க்களத்தில் வாளேந்தி நின்று யாது பயன்? அவனை எதிர்த்துப் போராடுவாரும் இலராவர். வாளும் அவனது கையில் வாளா இருக்கும். அப் பேடி, வாளைப் பணி கொள்ளும் கருத் துடையனானும், அது தன் அச்சத்தால் முடியாத வாறு போல, முயற்சி இல்லாதவன் பலர்க்கும் உதவும் கருத்துடையனாயினும் அது தன் வறுமையால் முடியாது அன்றோ.
விடாமுயற்சி உடையவன் வினை முடித்தலையே விரும்புவான். அவன் தனக்கு இன்பத்தை விரும்பான். அவனது முயற்சிக்குத் திருமகளும் துணையாக நின்று வினைமுடிப்பாள். அவன் தன் உறவினராகிய பாரத்தின் உறுதுயரை நீக்கி அதனைத் தாங்கும் தூண் ஆவான். அவனது செயலைத் துணையாக முன்னின்று முடிக்க இன்னருள் ஈசனே எளிவந்து நிற்பான் என்பர் வள்ளுவர். “தெய்வம் மடிதற்றுத்தான் முந்துறும்” என்பது அவரது வாக்கு. ஒருவன் முயன்ற வினைக்குத் தெய்வம் துணை நின்றவழி அளவின் மிக்க பயனைத் தரும். முயற்சி ஒன்றே துணையாக வினை செய்வாற்கு, உடம்பு வருந்திய வருத்தத்தின் அளவு, கூலி வந்துசேரும்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
என்பது வள்ளுவச்சொல்லமுதம்..
(நிறைவு)
வள்ளுவர் சொல்லமுதம்
வித்துவான் அ. க. நவநீத கிருட்டிணன்
Leave a Reply