(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)

2. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வரும் சேர்வது நாடு.

(திருக்குறள் 731)

 

தள்ளா-குறையாத, விளையுளும்-விளைவிக்கப்படும் பொருள்களும், தக்காரும்-விளைவுக்குக் காரணமான அறிஞரும், தாழ்வுஇலா-குறைவுஇலாத, செல்வரும்-செல்வமுடையவரும், சேர்வது-சேர்ந்திருப்பது, நாடு-நாடு ஆகும்.

‘விளையுள்’ என்பது மக்களால் விளைவிக்கப்படும் எல்லாப் பொருள்களையும் குறிக்கும். உணவுப் பொருள்கள் மட்டுமல்ல, மக்கள் வாழ்வுக்கு வேண்டிய அனைத்துப் பொருள்களையும் ஆக்கிக்கொள்ளும் ஆற்றலும் வாய்ப்பும் வசதியும் நாடு பெற்றிருக்க வேண்டும். ‘தக்கார்’ என்பது நாட்டின் நலனைப் பெருக்கத்தக்கார் என்பதாகும். கற்றறிஞர், புதியன கண்டுபிடிப்போர், புதியன ஆக்குவோர் (Scholar, Discoverers, Inventors) இவரையே பொறுத்துள்ளது நாட்டின் விளையுள் பெருகுதல். நூல்களைக் கற்றுப் புதியன கண்டு புதியன புனைவோரும் நல்லொழுக்கமிக்க நடுநிலையோரும் ‘தக்கார்’ எனப்படுவர். ‘தாழ்விலாச் செல்வர்’ என்பது குறைவிலாச் செல்வமுடையவர் என்னும் பொருளைத் தரும். ‘செல்வர்’ சேர்வது நாடு என்பதனால் ‘வறியரும்’ அங்கிருப்பர் என்று பொருள்படலாம். ‘செல்வர்’ என்று சிலரைப் பிரிப்பின் எஞ்சியோர் செல்வரல்லாதவர் என்றுதானே கருதுதல் வேண்டும் என்று நினைத்து எப்பொழுதும் செல்வர்களும் வறிஞர்களும் நிலைத்திருக்க வேண்டுமென்று வள்ளுவர் கூறுவது பொருத்தமுடைத்தன்று என்று புகல்வோருமுளர். ‘செல்வர்’ என்றால் தமக்கு வேண்டிய உணவு, உடை, இருப்பிடம் முதலிய வாழ்க்கை வசதிகளைப் பெற்றிருப்போரேயன்றி, அளவு கடந்த பொருளைத் திரட்டி யார்க்கும் பயன்படாது முடக்கிவைத்து மகிழ்வோரல்லர். “நுகரப் பெறுவன யாவும் உடையோரே செல்வர் ஆவார்; நுகரப் பெறுவன இல்லாதார் வறிஞர் ஆவார்” என்பதே தமிழ்நூலார் கருத்தாகும். ஆதலின், அங்குத் “தாழ்விலாச் செல்வர் சேர்வது” என்பது ‘எல்லா மக்களும் யாவும் பெற்றிருப்போராய் இருத்தல் வேண்டும் என்பதற்கேயாம்’ என்று அறிதல் வேண்டும்.

(தொடரும்)