– பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

இ. படைமாட்சி

 படைமாட்சி – படையினது பெருமை. ஒரு நாட்டாட்சி நன்கு நடைபெறவும், நாட்டில் வாழ்வோர் அச்சமின்றித் தத்தம் கடனை ஆற்றவும் படை மிகமிக இன்றியமையாததாகும். அருள்நெறியில் ஆட்சி புரிவதாகக் கூறும் நாட்டுக்கும் படை இன்றியமையாதது. மக்களுக்குய தீக்குணங்களாம் பொறாமை, செருக்கு, பெருவிருப்பம், பிறரை ஆட்படுத்தும் எண்ணம் முதலியன ஒழியும்வரை படை வேண்டற்பாலதே. ஆதலினன்றோ இன்னா செய்தார்க்கும் இனியன செய்ய வேண்டும் என்று விதித்திடும் ‘குறள் நெறி’ அரசுக்கு வேண்டிய இன்றியமையாதனவற்றுள் படையை  முதற்கண் வைத்துள்ளது. “படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆறும் உடையான், அரசருள் ஏறு” என்னும் குறளை நோக்குக.

 படைகள், பண்டு யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை என நான்கு பெரும் பிவினுள் அடங்கின. கப்பற்படை இருந்ததாயினும் மிகுதியாகப் பயன்படுத்தும் நிலை ஏற்படவில்லை. ஆதலின், படைப்பிரிவினுள் கப்பற் படையையும் சேர்த்திலர். கப்பல் கட்டும் முறையிலும், ஓட்டும் திறனிலும் பண்டைத் தமிழர் சிறந்திருந்தனர். ‘நாவாய்’ என்ற தமிழ்ச் சொல்லிலிருந்தே ‘Navy’ என்ற சொல் வந்ததாகக் கூறுவோருளர். அங்ஙனமிருந்தும் கப்பல்படையில் ஆங்கிலேயர் சிறந்திருந்ததுபோலத் தமிழர் சிறப்புறும் சூழ்நலை உண்டாகாத காரணம், கடல் வழியாகப் பகைவர்கள் தமிழ்நாட்டின்மீது படையெடுத்து  வந்திலாமையே என்றுதான் கூறுதல் வேண்டும்.

  இப்பொழுது படைவகைகளை, தரைப்படை, கடற்படை, வானப்படை என முப்பெரும் பிரிவுகளில் அடக்கலாம். ஒவ்வொன்றும் பல பிரிவுகளையுடையது.  படைகள் எத்துணைப் பிரிவுடையதாய் இருப்பினும் அவற்றையியக்கும் வீரர்களைப் பொறுத்ததே படையின் சிறப்பு. அவ் வீரர்களைப் பற்றியே திருக்குறள் இரண்டு இயல்களுள் கூறுகின்றது.

1.

உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்

வெறுக்கையு ளெல்லாந் தலை. (குறள் 761)

[உறுப்பு அமைந்து ஊறுஅஞ்சா வெல்படை வேந்தன்

வெறுக்கையுள் எல்லாம் தலை.]

உறுப்பு அமைந்து – படைக்குரிய பகுதிகள் பொருந்தி, ஊறு-போரில் உண்டாகும் துன்பங்கட்கு, அஞ்சா-பயப்படாத, வெல்படை- பகைவர்களை வெல்லும் படை, வேந்தன் – அரசனின், வெறுக்கையுள் – செல்வங்கள் எல்லாவற்றுள்ளும், தலை-தன்மையானது.

அரசுக்குரிய செல்வங்களுள் படையே முதன்மையானது. அப் படையும் காலத்திற்கேற்பப் பல்வகைப் பகுதிகளும் பொருந்தி இருத்தல் வேண்டும். போர் முகத்தில் உண்டாகும், உறுப்பிழத்தல், உயிர்போதல் துன்பங்கட்கு அஞ்சாது இருத்தல்வேண்டும். ‘வெல் அல்லது வீழ்’ என்ற குறிக்கோளையுடையதாய் இருத்தல் வேண்டும். அப் படையே வெல்லும் திறன் பெற்றிருக்கும்.

2.

அழிவின் றறைபோகா தாகி வழிவந்த

வன்க ணதுவே படை. (குறள் 764)

[அழிவுஇன்று அறைபோகாது ஆகி வழிவந்த

வன் கணதுவே படை.]

 அழிவு இன்று – போரில் அழிதல் இல்லாமல், அறைபோகாது ஆகி – பொன், பெண், பதவி காரணமாகப் பகைவர்க்கு வயப்பட்டுக் காட்டிக்கொடுக்கும் தன்மை இல்லாததாகி, வழிவந்த தொன்றுதொட்டு வந்த, வன்கணதுவே – அஞ்சாமையை உடையதுவே, படை – படையாகும்.

போர் முனைக்கு வரும் படைகள், ஊக்கம், ஆற்றல், அஞ்சாமை  முதலியவற்றை இழக்காமல் இருத்தல் வேண்டும். படையில் உள்ளோரைத் தம் வயப்படுத்தப் பகைவர்கள் முயல்வர். தம் நாட்டின்மீது கொண்டுள்ள பற்றாலும், விரர்க்குள்ள ஒழுக்க முறையாலும், பகைவர் முயற்சியை அழித்து வெல்லும் வீரம் பெற்றிருத்தல் வேண்டும். தொன்றுதொட்டு வருகின்ற போர்க்குணம் உடையராய் இருத்தல் வேண்டும்.

 தமிழகத்தில் காளையர்(ஆடவர்) கடன் போரில் பகைவரை வெல்லுதல் ஆகும். ஆதலின், ஒவ்வொரு ஆண்மகனும் ஒவ்வொரு போர்வீரனே. குடும்ப முழுவதுமே வீரம் பொருந்தியிருக்கும்.

 வீரப்பெண் ஒருத்தி கூறுகின்றாள்: என் தந்தை போர்க்களத்தில் போரிட்டு மடிந்து இன்று நடுகல்லில் வழிபடப்படுகின்றான். என் கணவன் போர்க்களத்தில் பகைவரை வெல்லும்போதே வீழ்ந்தான். என் தமையன்மாரும் அப்படியே மடிந்தனர். என் மகனும் அம்புகள் எய்தான்’ பகைவர்கள் எய்த அம்புகள் அவன் உடலெல்லாம் தைத்து முள்ளம்பன்றிபோல் ஆனான். ஆயினும், போர்புரிவதில் சோர்வடையவில்லை. அம்புகளை விட்டுக்கொண்டே ஆவியை விட்டான்.

 இக் கூற்றால் ஒரு குடும்பத்தின் போர்மரபு அறிகின்றோம். இங்ஙனம் வழிவழியாகப் போர்வன்மை மிக்கோர் படைக்குச் சிறப்புடையோர் ஆவார்.

3.

 கூற்றுடன்று மேல்வரினுங் கூடி யெதிர்நிற்கு

மாற்ற லதுவே படை. (குறள் 765)

[கூற்றுஉடன்று மேல்வனும் கூடி எதிர்நிற்கும்

ஆற்ற லதுவே படை.]

 கூற்று – இறப்புக் கடவுள்தானும், உடன்று-வெகுண்டு (கோபித்து), மேல்வரினும் – தன்மேல் வந்தாலும், கூடி – நெஞ்சு ஒத்துச் சோ;ந்து, எதிர்நிற்கும் – எதிர்த்துப் போர் செய்து நிற்கும், ஆற்றலதுவே-வன்மையை உடையதுவே, படை- படையாகும்.

 இறப்பைக் கடவுளாக உருவகப்படுத்துவது புலவர் மரபு. சாவே வந்தாலும், நாட்டின்மேல் உள்ள அன்பால் எதிர்த்துப் பொருது மடிவர் என்பதாம். படையில் உள்ளோர் அனைவரும் மனமொத்து ஒரே ஆள்போலப் போர் புரியவேண்டும். இல்லையேல் முயற்சி பயனற்றுப் போகும். கூற்றுவன் வந்தால்  போற்றினும் போகான்; பொருளொடும் போகான் ஆதலின், கூற்றே வந்தாலும் என்று கூறுகின்றார்.

 4.

மறமான மாண்ட வழிச்செலவு தேற்ற

மெனநான்கே யேமம் படைக்கு.   (குறள் 766)

[மறம், மானம், மாண்ட வழிச்செலவு, தேற்றம்

எனநான்கே ஏமம் படைக்கு.]

 படைக்கு – படைக்கு, மறம்- வீரம், மானம் – தம் நிலையில் தாழாமையும், தாழ்வு வந்தவிடத்து உயிர் வாழாமையும், மாண்ட – மாட்சியமைக்கப்பட்ட, வழிச்செலவு- வழியின்கண் செல்லுதல், தேற்றம் – தௌpவு, என – என்று சொல்லப்படுகின்ற, நான்கே ஏமம் – நான்குதாம் பாதுகாவல் (அரண்).

 படையானது மடிவுறாமல் வெற்றி பெற்றுப் புகழெய்த வேண்டுமானால் வீரம், மான உணர்ச்சி, சிறந்த நெறியில் செல்லுதல், எடுத்துக்கொண்ட வினையின்கண் தெளிவு முதலியன வேண்டும். ஒன்றிருந்து ஒன்றில்லையானாலும் பயனில்லை.

‘மாண்ட வழிச் செலவு’ என்பது படையொழுங்கின்படி அணிவகுத்துப் பெருமிதம் தோன்றக் கண்டார் அஞ்சச் செல்லுதல், வீரர் பண்பாட்டுக்கேற்ப ஒழுகுதல் ஆம். தோல்வியுற்றுச் செல்வோர், சரணடைந்தார், வீரரல்லாதார் முதலியோடம் தம் வீரத்தைக் காட்ட முயலுதல் கூடாது. பெண்கள் முதலியோரிடம் பகைமை பாராட்டுதல் கூடாது.

‘தேற்றம்’- போர் முறையில் எதைச் செய்தால் பகைவரை எளிதில் வெல்லலாம் என்று துணிந்து ஒன்றை மேற்கொள்ளல் வேண்டும். மேற்கொண்ட பின்னர். உள்ளத்தில் ஊசலாட்டம் இருத்தல் கூடாது.  ஆகவே, பலமுறை ஆராய்ந்து நன்கு தெளிந்து கொள்ளல் வேண்டும்.

இவை நான்கும் படைக்குப் பாதுகாவல் என்பது, அழிவு வராமலும் இழிவு அடையாமலும் படையை வெல்லும் நிலையில் இவை வைக்கும் என்பதாம்.

5.

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த

போர்தாங்குந் தன்மை யறிந்து.   (குறள் 767)

[தார்தாங்கிச் செல்வது தானை; தலைவந்த

போர்தாங்கும் தன்மை யறிந்து.]

தலைவந்த – முற்பட்டுவந்த, போர்தாங்கும் – படையின் போரைத் தடுத்து நிறுத்தும், தன்மையறிந்து -முறையறிந்து, தார்தாங்கி – (முன்னால் வரும்) தூசிப்படையைத் தடுத்து, செல்வது – பகைநாட்டின்மேல் போவது, தானை – படையாகும்.

தார் = தூசிப்படை. எல்லாப் படைகளுக்கும் முன்சென்று வழியை ஒழுங்கு செய்துகொண்டு செல்லும் படை. அப் படையும் வெல்லற்கரிதாகவே இருக்கும். அப்படையைத் தடுத்து நிறுத்தி வென்ற பின்னர்தான் அணிவகுப்பின் பிற படைகளுடன் போர் செய்தல் கூடும். ஆதலின், படையின் அணிவகுப்புகள், போரிடும் முறைகள், முதலியனபற்றிப் படைத் தலைவர் மட்டுமேயன்றிப் படைவீரர் அனைவரும் அறிந்திருத்தல் வேண்டும்.

 6.

அடற்றகையு மாற்றலு மில்லெனினுந் தானை

படைத்தகையாற் பாடு பெறும். .   (குறள் 768)

[அடல்தகையும் ஆற்றலும் இல்எனினும் தானை

படைத்தகையால் பாடு பெறும்.]

தானை – படையானது, அடல் தகையும்-பகைப்படையைக் கொல்லும் அஞ்சாமையும், ஆற்றலும் – அதற்கேற்ப வன்மையும், இல் எனினும் – பெற்றிலையாயினும், படைத் தகையால் – படை ஒழுங்கு முறையால், பாடு பெறும் – பெருமையடையும்.

 படைக்கு ஒழுங்குமுறை வேண்டுமென்று இக் குறள் வற்புறுத்துகின்றது. வலிமையில்லாத படைகூடத் தனது ஒழுங்கு முறையால், பகைவரை வெல்லுதல் முடியும். எல்லா வலிமையும் பெற்றும், படையின்கண் ஒழுங்கு முறை இல்லையாயின், பயன் இல்லை. ஒழுங்கு முறையில்லாப் பெரிய படையை, ஒழுங்கு முறையுடைய சிறிய  படை வென்றுவிடும்.

7.

சிறுமையுஞ் செல்லாத் துனியும் வறுமையு

மில்லாயின் வெல்லும் படை.  (குறள் 769)

[சிறுமையும், செல்லாத் துனியும், வறுமையும்

இல்லாயின், வெல்லும் படை. ]

படைவீரர்களிடத்தில், சிறுமையும்- இழிந்த குணங்களும், செல்லாத் துனியும்-நீங்காத வெறுப்பும், வறுமையும் – ஏழ்மையும், இல்லாயின் – இல்லையானால், படைவெல்லும் – படையானது வெற்றி பெறும்.

 படைவீரர்களிடத்தில், ஒழுக்கக் குறைபாடான செயல்கள் இருத்தல் கூடாது. வீரர்கட்கு உணவு உடை முதலியவற்றால் குறைபாடு இருத்தல் கூடாது.

 செல்லாத் துனி = நீங்காத வருத்தம். படை வீரர்கள் நன்முறையில் நடத்தப் பெறுதல் வேண்டும். மனம் புண்படுமேல் நீங்காத வருத்தம் மேலிட்டு, போர் புரிவதில் ஆர்வம் காட்டாது அயர்வர். நாட்டுக்காக உயிரைக் கொடுக்க  முன்வந்துள்ள வீரர்களை  நன்முறையில் பாதுகாத்துச் சிறப்பிக்க வேண்டும்.

 படைக்கு இழிவு வருவது பெரும்பாலும் செல்லுமிடங்களில், பெண்களைக் கவர்தல், பொதுமக்களைக் கொடுமைப்படுத்தல் முதலியவற்றினால் ஆம்.

 8.

உலைவிடத் தூறஞ்சா வன்கண் டொலைவிடத்துத்

தொல்படைக் கல்லா லரிது. (குறள் 762)

[உலைவிடத்து ஊறுஅஞ்சா வன்கண் தொலைவிடத்துத்

தொல்படைக்கு அல்லால் அரிது.]

 உலைவிடத்து – அழிவு வந்த இடத்து, ஊறு அஞ்சா – துன்பங்கட்கு அஞ்சாத, வன்கண்- தறுகண்மை (அஞ்சாமை), தொலைவிடத்து-தொன்றுதொட்டு வருகின்ற, தொல்படைக்கு- பழமையான படைக்கு, அல்லால் – அல்லாமல், அரிது – இல்லை.

 மிகப் பெரிய நெருக்கடியான நிலைமை வந்துள்ள போது பகைவர், வன்மை மிக்குப் படை மிகுதியால் சிறந்துள்ள நிலையில், அஞ்சாது நின்று பொரவேண்டும் என்ற உரம், பழைமையாம் வீர மரபில் வருகின்றவர்க்குத்தான் இருக்கும். அவ்வப்போது சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள கூலிப் படைக்கு இராது. போர் செய்து போர் செய்து பண்பட்டு வருகின்ற மரபினையுடைய படைதான் எதற்கும் அஞ்சாது உயிர்க்கு இறுதிவரினும் போரிடும்.

 9.

 ஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகை

நாக முயிர்ப்பக் கெடும்.   (குறள் 763)

[ஒலித்தக்கால் என்னாம், உவரி எலிப்பகை,

நாகம் உயிர்ப்பக் கெடும்.]

 உவரி – கடல்போன்ற, எலிப்பகை- எலிகளாகிய பகைக்கூட்டம் ஒலித்தக்கால் என் ஆம்- முழங்கினால் என்ன உண்டாகும் (ஒன்றுமில்லை), நாகம் – நாகமானது, உயிர்ப்ப -மூச்சுவிட, கெடும் – அழிந்து ஓடும்.

ஆற்றல்மிக்க வீரன் ஒருவனைக் கண்டாலே ஆற்றலிலா வீரர் பலர் தோல்வியுற்று ஓடுவர். ஆற்றலுடைய வீரனை, நாகத்திற்கும், ஆற்றலில்லாத பகை வீரர்களை எலிகள் கூட்டத்திற்கும் ஒப்பிட்டுள்ளார். வீரமிலாப் பகைவர்கள் கடல்போலத் திரண்டு ஆரவாரம் செய்தாலும், அதைக் கண்டு உண்மை வீரன் அஞ்சமாட்டான். அவன் அஞ்சாது போர் செயத் தொடங்கிய உடனேயே, பகைவர்கள் ஓட்டமெடுப்பர். ஆதலின் கூட்டப் பெருக்கைக் கண்டு அஞ்சுதல் கூடாது.

 பரிமேலழகர்: எலிப்பகை உவரி ஒலித்தக்கால் என்னாம் – எலியாய பகை திரண்டு கடல்போல் ஒலித்தால் என்னாம். ‘கடல்போல ஒலித்தால்’ என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், ‘உவரி எலிப்பகை’ என்பதற்குக் கடல்போன்ற எலிகளாகிய பகைக்கூட்டம் என்பதுதான் பொருத்தமாகத் தோன்றுகின்றது.

 எலிகள் பல கூடியிருக்கும் தோற்றம் கடலுக்கும், அவற்றின் முழக்கம் கடல் ஒலிக்கும் ஒப்பிடும் முறையில்தான் குறள் அமைந்துள்ளது.

 10.

நிலைமக்கள் சால வுடைத்தெனினுந் தானை

தலைமக்க ளில்வழி யில்.  (குறள் 770)

 

[நிலைமக்கள் சால உடைத்துஎனினும் தானை

தலைமக்கள் இல்வழி இல்.]

 தானை-படையானது, நிலைமக்கள்- போரின்கண் நிற்கும் வீரர்கள், சால உடைத்து எனினும் – மிகப் பெற்றிருந்தாலும், தலைமக்கள் – படைத்தலைவர்கள், இல்வழி-இல்லாதவிடத்து, இல்-இல்லையாம்.

 வீரர் பலராக இருப்பினும் அவரை நடத்திச் செல்லும் சிறந்த தலைவர் வேண்டும். சிறந்த தலைவர் இல்லாப் படை சிதறுண்டு அழியும்.

(தொடரும்)