இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 2
(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)
வரலாற்று நோக்கு
2. மக்கள் அனைவரும் தமிழர்கள். தமிழ் என்னும் சொல் பனம்பாரனார் பாயிர உரையில் குறிப்பிட்டு உள்ளது தவிர தொல்காப்பிய மூலத்திலும் குறிக்கப் பெற்றுள்ளது. [தமிழ்’ என் கிளவியும் அதன் ஓரற்றே – தொல்காப்பியம்: எழுத்து: 386] மக்கள் தாம் பேசிய (தமிழ்) மொழியின் காரணமாகத் தமிழர்கள் என அழைக்கப் பெற்றனர். மொழியினால் மக்களுக்குப் பெயர் வழங்கப்படுகின்றதே தவிர மக்களால் மொழிக்குப் பெயர் வருவது இல்லை.
பேராசியிரியர் வி.கே. இராமசந்திரதீட்சதர், “வயவர் ஃகரி யான்சன்டன் (Sir Harry Johnston)கருத்திற்கு இணங்க இந்தியா மூலமனிதனின் தாயக நிலம் என்ற முடிவிற்கு வந்ததற்குக் காரணம் நாட்டுப்பற்று அன்று; இந்தியக் கண்டத்தின் தென்பகுதியே இதுவாகும்” எனக் கூறியுள்ளார்(Pre-Historic South India, page 12). எனவே தமிழர்கள் (திராவிடர்கள்) இந்தியாவிற்கு வெளியே இருந்து வந்து இங்கு வாழ்ந்தார்கள் என்ற கோட்பாடு அடிப்பட்டு போகிறது. தமிழ் மக்கள் மண்ணின் மைந்தர்கள் ஆவர்.
மக்கள் மண்டிலப் பெயர்களுக்கு (திணை நிலைப் பெயர்) ஏற்ப அழைக்கப் பெற்றனர். [திணைதொறும் மரீஇய, திணை நிலைப் பெயரே – தொல்காப்பியம்: பொருள்: 20] அவற்றுள் ஆயர், வேட்டுவர் ஆகிய இருபெயர்களை மட்டுமே தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்[ஆயர், வேட்டுவர், ஆடூஉத் திணைப் பெயர் – தொல்காப்பியம்: பொருள்: 21].
சொல் நூற்பா 165லிருந்து மக்கள் தத்தம் நிலம், குடும்பம், குழு, தொழில், உடைமை, பண்பாட்டின் அடிப்படையில் அழைக்கப்பெற்றுள்ளனர் எனத் தெரிய வருகிறது.
முல்லை நிலமக்கள் ஆயர் எனவும், குறிஞ்சி நில மக்கள்வேட்டுவர் அல்லது குறவர் எனவும், மருத நில மக்கள் உழவர், நெய்தல் நில மக்கள் பரதவர் எனவும், மரபு வழியிலே அழைக்கப்பெற்று வந்துள்ளனர். பின்னர் குறிப்பிட்டுள்ள இரண்டு குறித்தும் தொல்காப்பியத்தில் எவ்வகை குறிப்பும் இல்லை.
அரசர்கள், அமைச்சர்கள், தலைவர்கள், ஆசிரியர்கள், அறிவோர், ஆராய்ச்சியாளர்கள், வணிகர்கள், பொருநர், விரலியர், பாணர், வீரர், பணியாளர்கள், தோழிகள் எனத் தொழில் முறையால் பலவகையிலும் குறிக்கப்பட்டுள்ளனர்.
அந்தணர், பார்ப்பார், ஐயர் ஆகியோர் பற்றிய குறிப்புகள் உள்ளன; இவை சில அறிஞர்களால் பிராமணர்கள் என எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இது தவறானதாகும். அந்தணர் என்போர் மெய்யியலாளர்கள். பார்ப்பார் என்போர் நூல்களை ஆய்ந்து பார்க்கும் ஆராய்ச்சி அறிஞர்கள். பார்ப்பார் என்பதன் நேர்பொருள் ஒன்றைப் பார்ப்பது என்பதாகும். புத்தகத்தை எப்பொழுதும் பார்ப்பவர்கள் – படித்துக் கொண்டு இருப்பவர்கள் – பார்ப்பார் என அழைக்கப்பெற்றனர். தெற்கில் ஆரியர் வந்த பின்பு ஆரிய வருணாசிரம முறையிலான பிராமணர்கள் தமிழ்ப் பார்ப்பார் உடன் ஒப்பு நோக்கப்பட்டனர். ஆனால் இவை இரண்டும் முற்றிலும் மாறான நிலையினவாகும். பிராமணர்கள் பிறப்பின் அடிப்படையில் அடையாளம் காணப்படுகிறார்கள்; பார்ப்பார் தொழில் முறையில் அறியப் பெறுகிறார்கள். ஐயர் என்னும் சொல் மன்பதைத் தலைவர்களைக் குறிக்கப் பயன் பெறுவதாகும். பிற்காலத்தில் பிராமணச் சாதியில் சில குழுவினர் ஐயர் என்னும் சொல்லை சாதியின் அடையாளமாகத் தத்தம் பெயரின் பின் இணைப்பதைப் பழக்கமாகக் கொண்டு இருந்தனர். ஐயர் என்னும் சொல் பிராமணர் சாதியைக் குறிக்கப் பயன் பெற்ற காலத்தில் வாழ்ந்த உரையாசிரியர்கள் இச்சொல்லை தம் காலத்தில் உள்ள வழக்கத்தை உள்ளத்தில் கொண்டு பிராமணர் எனத் தவறாக விளக்கிவிட்டனர்.
பிறப்பினால் ஆன சாதியைப் பற்றிய குறிப்பு எதுவும் இதில் இல்லை.
(Tholkaappiyam in English with critical studies By Prof. Dr. S. Ilakkuvanar
– 2. Historical Study – pages 470-472)
– தமிழில்: இலக்குவனார் திருவள்ளுவன்
(தொடரும்)
பேராசிரியரின் ஆங்கிலத தொல்காப்பியத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் தமிழில் படிக்கும் வாய்ப்பைத் தந்ததற்கு மகிழ்ச்சி. நன்றிகள்.