தொல்காப்பிய விளக்கம் – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)
தொல்காப்பியம்எழுத்து, சொல், பொருள் எனும் முப்பெரும் பிரிவுகளையுடையது. எழுத்தும் சொல்லும் தமிழ்மொழியைப் பற்றியும் பொருள் தமிழ் இலக்கியத்தைப்பற்றியும் அறிவிப்னவாகும். இற்றைநாளில் மேலைநாட்டார், ஒரு மொழியின் பேச்சொலி பற்றி ஆராய்வதை ‘Phonology’ என்றும் சொற்கள்பற்றி ஆராய்வதை’ Morphology’ என்றும் அழைப்பர். இவை இரண்டும் மொழிநூலின் கூறுகளாகும். தொல்காப்பியத்தின் எழுத்தும் சொல்லும் தமிழ் மொழியின் ஆராய்ச்சியேயாகும்(Science of Tamil Language).
உள்ளத்தில் எழும் எண்ணங்களைப் பிறர்க்கு அறிவிப்பதற்குப் பயன்படும் கருவிதான் மொழி என்றாலும், உணர்ச்சி வயப்பட்ட உயர்ந்த எண்ணங்களையும் உண்மைகளையும் இனிமை தூய்மை அழகு முதலியன பொருந்தச் சொல்லுங்கால் நிலைத்துநிற்கும் இலக்கியமாகிவிடுகின்றது. இவ்விலக்கியம்பற்றி ஆராய்வதுதான் தொல்காப்பியத்தின் பொருள் ஆகும். ஆதலின் பொருள் என்பது ‘Science of Literature’ ஆகும்.
அன்றியும் இலக்கியம் என்பது மக்கள் வாழ்வினை அடிப்படையாகக் கொண்டதாகும். (Literature is the mirror of Life). ஆகையால், பொருட்பகுதியால் பண்டைத்தமி்ழ் மக்கள் வாழ்வும் அறியப்படும்.
ஆகவே, தொல்காப்பியம் எனும் தொன்மைப்பெருநூல்,தமிழ்மொழி, இலக்கி்யம், தமிழர்வாழ்வு அறிவிக்கும் பழங்கருவூலமாகும். தமிழராய்ப் பிறந்தோர் தவறாது கற்க வேண்டிய தனிப்பெருநூலாகும்.
இப்பெருநூலின் எழுத்து, சொல், பொருள் எனும் முப்பிரிவுகள் ஒவ்வொன்றும்ஒன்பது இயல்களைக் கொண்டுள்ளன
எ ழுத்து: 1. நூன்மரபு 2. மொழிமரபு 3பிறப்பியல் 4. புணரியல் 5. தொகை மரபு 6. உருபியல் 7. உயிர் மயங்கியல் 8. புள்ளிமயங்கியல் 9. குற்றியலுகரப் புணரியல்
சொல்: 1.கிளவியாக்கம் 2. வேற்றுமையியல் 3. வேற்றுமை மயங்கியல் 4. விளிமரபு 5. பெயரியல் 6. வினையியல் 7. இடையியல் 8. உயிரியல் 9. எச்சஇயல்
பொருள்: 1.அகத்திணையியல் 2. புறத்திணையியல் 3. களவு இயல் 4. கற்பு இயல் 5. பொருள் இயல் 6. மெய்ப்பாட்டு இயல் 7. உவம இயல் 8 செய்யுள் இயல் 9. மரபு இயல்
இவ்வாறு மூன்று பெரும்பிரிவுகளைக் கொண்ட தொல்காப்பியத்திற்குப் பனம்பாரனார் என்பவர் (பாயிரம்) கூறியுள்ளார். அது வருமாறு:-
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்கும் சொல்லும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல்
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கறை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே.
இம்முன்னுரையால் அறியப்படும் செய்திகளாவன:
தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாடு வடக்கே திருவேங்கடத்தையும் (திருப்பதியையும்) தெற்கே குமரிக்கடலையும் எல்லையாகக் கொண்டிருந்தது. கிழக்கிலும் மேற்கிலும் கடல்களே எல்லையாக இருந்தன. (கிழக்கில் உள்ள வங்காளக் கடல், குணகடல் எனவும் மேற்கில் உள்ள கடல் -அரபிக்கடல்- குடகடல் என அழைக்கப் பட்டதாகவும் பிற இலக்கியங்கள் வாயிலாக அறியலாம்.) இப்பகுதியுள் செந்தமிழே வழங்கியது. மலையாளம், கன்னடம், குடகு போன்ற மொழிகள் அன்று தோன்றில. (திருப்பதிக்குவடக்கே தமிழின் கிளைமொழியான தெலுங்கு வடுகு என்ற பெயரோடு உருப்பெறத் தொடங்கியுள்ளது.) தமிழ் வளமுற்ற செந்தமிழாகவே வழங்கியுள்ளது. உலக வழக்கு, செய்யுள் வழக்கு எனப் பிரிவுபடுத்தும் செப்பமுற்ற நிலையைப் பெற்றிருந்தது. தமிழ் இலக்கணம் எழுத்து, சொல், பொருள் என முப்பெரும் பிரிவுகளாக ஆராயப்பட்டது. தொல்காப்பியத்திற்கு முற்பட்ட பல நூல்கள் இருந்துள்ளன.
தொல்காப்பியர் காலத்தில் பாண்டியநாட்டை ஆண்ட அரசன் நிலம்தருதிருவின் பாண்டியன் ஆவான். அவனுடைய அரச அவையில் புலவர்கள்கூடித் தமிழ்ஆராயும் நிலை இருந்துள்ளது. அரச அவையில் புலவர்கள் கூடித் தமிழ் ஆராய்ந்தனரேயன்றித் தமக்கெனச் சங்கம் அமைத்துக் கொண்டிலர். ஆகவே, தொல்காப்பியர் சங்கக் காலத்துக்கு முற்பட்டவர் எனத் தெளியலாம். சங்கக்காலம் என்பது தொல்காப்பியர் காலத்துக்குப் பின்னும் கி.பி.இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னுமாகும்.
தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டபோது, அவைத்தலைவராய் இருந்தவர் அதங்கோட்டு ஆசான் என்பவராவார். அதங்கோடு என்னும் ஊர் இப்பொழுதும் குமரி மாவட்டத்தில் உள்ளது. அவ்வூரைச் சேர்ந்த ஆசான் எனக் கூறப்பட்டுள்ளது. இன்றும் அப்பகுதிகளில் ஒரு துறையில் வல்லுநரை ஆசான் என்றே அழைக் கின்றனர். அதங்கோட்டுஆசானின் இயற்பெயர் தெரிந்திலது.
தொல்காப்பியம் இயற்றிய பின்னரே தொல்காப்பியன் எனநூலாசிரியர் அழைக்கப்பட்டுள்ளார். தொல்காப்பியன் எனப் பெயர்தோன்றிய பின்னர் அவர் இயற்பெயர் வழக்காறு அற்றுவிட்டதுபோலும். தொல்காப்பியர்தமிழ் நூல்களையும் ஐந்திரம் என்ற வடமொழி நூலையும் முற்றக்கற்று புகழ்மிகுந்த அறவொழுக்கப் பெரியோராய் வாழ்ந்துள்ளார்.
இன்னோரன்ன வரலாறு தெரிவிக்கும் இப்பாயிரப்பாடலை ஒவ்வொரு தமிழரும் நினைவில் கொண்டு போற்றுதல் வேண்டும்.
(தொடரும்)
நன்றி : குறள்நெறி 1.2.64 : பக்கம் 14
Leave a Reply