தொல்காப்பிய விளக்கம் 13 – பேராசிரியர் சி. இலக்குவனார்
(சித்திரை 07, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 20, 2014 இதழின் தொடர்ச்சி)
67. குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின்
ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்
குற்றியலுகரம் = குறைந்த ஓசையை, உடையது எனப்படும் ‘உ’, முறைப்பெயர் மருங்கின் = (நுந்தை என்னும்) முறைப்பெயரிடத்து, ஒற்றிய நகரமிசை = ஒற்றாய் நின்ற நகரத்தின் மேல், நகரமொடு முதலும் = நகரமெய்யோடு மொழிக்கு முதலாகி வரும்.
உகரம் ஓசையில் குறைந்து வருவது, நுந்தை என்னும் சொல்லில் மொழிமுதலில் உண்டு என்று அறியற்பாலது. ‘நுந்தை’ என்பதனையும், ‘நுமக்கு’ என்பதனையும் ஒலித்துக் காணலாம்.
ஆனால் தொல்காப்பியர்க்குப் பின்னர் வந்த இலக்கண நூலார் இவ்வொலி நுட்ப வேறுபாட்டை அறிந்து கூறினாரிலர்.
68. முற்றியலுகர மொடு பொருள் வேறுபடா அது
அப்பெயர் மருங்கின் நிலையியலான.
அப்பெயர் மருங்கின் = (உறவு முறை சுட்டும் ‘நுந்தை’ என்னும்) அப்பெயரின்கண், நிலையியலான = (குற்றியலுகரம்) நிற்கும்பொழுது, முற்றியலுகரமொடு = முற்றியலுகரமாகக் கூறினாலும், அதனொடு, பொருள் வேறுபடாது = குற்றியலுகரமாக ஒலித்த பொழுது சுட்டிய பொருளினின்றும் மாறுபடாது.
‘நுந்தை’ என்னும் சொல்லில் உள்ள மொழி முதல் ‘உ’வைக் குற்றியலுகரமாக ஒலித்தாலும் பொருள் வேறுபடாது. மொழியிறுதியில் வரும் குற்றியலுகரத்தை முற்றியலுகரமாக ஒலித்தால் பொருள் வேறுபடும்.
காட்டு: ‘ஆடு’ என்பதைக் குற்றியலுகரமாக ஒலித்தால் ஒரு விலங்கைக் குறிக்கும்; முற்றியலுகரமாக ஒலித்தால் ‘அசை’ விளையாடு என்னும் பொருளைத் தரும்.
மொழிவழி எழுத்துகள்
மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்களைக் கூறி இனி மொழி இறுதியில் வரும் எழுத்துக்களைக் கூறத் தொடங்குகின்றார்.
69. உயிர் ஔ எஞ்சிய இறுதியாகும்.
உயிர் ஔ எஞ்சிய = உயிர் எழுத்துக்களுள் ‘ஔ’ ஒழிந்த பிற, இறுதியாகும் = சொல்லின் கடைசியில் வரும்.
ஔகாரம் மட்டும் தனியாகவோ, மெய்யுடன் சேர்ந்தோ சொல்லிறுதியில் வாராது.
70. கவவோடு இயையின் ஔவுமாகும்.
க வ வோடு = க், வ் என்னும் மெய்களோடு இயையின் = பொருந்தின், ஔவுமாகும் = ஔகாரமும் இறுதியில் வரும்.
கௌ, வௌ என்னும் ஓரெழுத்து மொழிகளில் வந்துள்ளமை காணலாம்.
71. எ எனவரும் உயிர் மெய் யீறு ஆகாது.
‘எ’ என வரும் உயிர் = ‘எ’ என்று சொல்ல வரும் உயிர்; மெய் ஈறு ஆகாது = மெய்யோடு பொருந்தி சொல்லின் கடைசி எழுத்தாக இராது.
அளபெடையில் ‘எ’ இறுதியாக வரும்.
காட்டு: ஏஎ.
72. ஒவ்வும் அற்றே நவ்வலங்கடையே.
ஒவ்வும் அற்று = ‘ஒ’ எனும் உயிர் எழுத்தும் அத்தகையது. (அஃதாவது தானே நின்று அளபெடையில் ஈறாகும்; மெய்யோடு சேர்ந்து ஈறாகாது). ‘ந’ அலங்கடை= நகரமெய்யோடு அல்லாதவிடத்து.
காட்டு: நொ. ஓரெழுத்து மொழியாயின் வருந்து என்னும் பொருள் தரும்.
73. ஏ, ஓ, எனும் உயிர் ஞகாரத்தில் இல்லை.
ஏ, ஓ எனும் உயிர் = ஏ.ஓ என்று சொல்லப்படும் உயிர் எழுத்துக்கள், ஞகாரத்து இல்லை = ஞகர மெய்யோடு ஈறாக வராது. (பிறமெய்களோடும் தனியாகவும் ஈறாக வரும்.)
74. உ, ஊ, காரம் நவவொடு நவிலா.
உ, ஊகாரம் = உ, ஊ எனப்படும் உயிர் எழுத்துக்கள் ந, வ வாடு & முறையே ‘உ’ நகரத்தோடும், ஊ வகரத்தோடும், நவிலா = பயின்றுவாரா.
இவை இரண்டும் ஏனைய மெய்களோடு சேர்ந்து சொல்லுக்கு ஈறாக வரும்.
75. உச்சகாரம் இரு மொழிக்குரித்தே.
உச்சகாரம் = உகரத்தோடு கூடிய சகரம் இரு மொழிக்கு உரித்தே = இரண்டு சொற்களில்தான் ஈறாக வரும்.
காட்டு: உ சு, பசு
‘பசு’ என்பது ஆரிய மொழிச்சிதைவு என்று கூறி ‘முசு’ என்பதைக் காட்டுவர். ‘பசு’வும் தூய தமிழ்ச் சொல் தான். தமிழ் மக்களிடையே பெரு வழக்காகப் பயின்று வரும் இதனை எவ்வாறு தமிழ்ச் சொல் இல்லை என்று கூற முடியும்.
(தொடரும்)
Leave a Reply