தலைப்பு-வாழ்வு இன்பததிற்குரியது : thalaippu_vaazhveinbam

  வாழ்வின் குறிக்கோள் என்ன? இன்பமாக வாழ்தல். வாழ்வே இன்பத்திற்குரியது. வாழ்வில் ஒரொருகால் துன்ப நிகழ்ச்சிகள் தோன்றினும் அவையும் இன்பத்திற்கு அடிப்படையாகும்; ஆதலின் இன்பமென்றே கருதத் தக்கன. எல்லாம் இன்பமயம். இன்ப வாழ்வுக்கே இன்ப வாழ்வால் மக்கள் தோன்றியுள்ளனர். உலகில் தோன்றிய பிற நாட்டுப் பொரியார்கள், ” உலகம் துன்ப மயம் ; துன்ப வழ்விலிருந்து விடுதலை பெறுவதே வாழ்வின் குறிக்கோள்” என்றனர். தமிழ்ப் பெரியார்கள் அவ்வாறு கருதாது, “வாழ்வு இன்பத்திற்குரியது; இன்பமாகவாழ்தலே வாழ்வின் குறிக்கோள்” என்று நிலைநாட்டினர். அவ்வின்ப வாழ்வுக்கு அடிப்படை இல்லற வாழ்வு; இல்லறத்திற்கு இன்றியமையாதவர்கள் காதலால் பிணிப்புண்ட தலைவனும் தலைவியும். ஆதலின் தலைவனும் தலைவியும் கொண்டொழுகும் காதல் தொடர்பினை மையமாகக்கொண்டே இலக்கியங்கள் தோன்றி உருவாகி வளர்ந்தன. இலக்கியம் என்பது வாழ்வின் ஓவியம் என்பது மேலை நாட்டறிஞர் கருத்து. அக்கருத்துக்கு எடுத்துக் காட்டாக விளங்குவது பண்டைத் தமிழ் இலக்கியமே. தமிழிலக்கியம் தோன்றிப் பன்னூறு ஆண்டுகள் கழிந்த பின்னரே தொல்காப்பியம் தோன்றியது.

செம்மொழிச் செம்மல் முனைவர் சி. இலக்குவனார்:

தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 125-126