பண்ருட்டி ராமச்சந்திரன்  முதலான எண்மருக்குத்  தமிழக அரசின் சிறப்பு விருதுகளை முதல்வர்  செயலலிதா வழங்கினார்.

awards 01

தமிழுக்குத் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசால் விருதுகள் ஏற்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 2014-ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது தைவான் நாட்டைச் சேர்ந்த கவிஞர் யூசி என்பவருக்கு வழங்கப்பட்டது.

பிற விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 26.1.2014 அன்று தலைமைச் செயலகத்தில் முதல்– அமைச்சர் செயலலிதா  வழங்கினார்; தமிழ்நாடு அரசின் விருதுகளான தந்தை பெரியார் விருதினை-சுலோச்சனா சம்பத்துக்கும், பேரறிஞர் அண்ணா விருதினை-பண்ருட்டி இராமச்சந்திரனுக்கும், அண்ணல் அம்பேத்கர் விருதினை-பேராயர் முனைவர் பிரகாசுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருதினை-அய்யாறு வாண்டையாருக்கும், மகாகவி பாரதியார் விருதினை-முனைவர் ஞானசம்பந்தனுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருதினை- முனைவர் இராதா செல்லப்பனுக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருதினை-அசோகமித் திரனுக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதினை-பேராசிரியர் முனைவர் செயதேவனுக்கும் வழங்கினார்.

விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் 1இலட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், விருதுக்கான தகுதியுரைச் சான்றிதழ் ஆகியவற்றையும் வழங்கிச் சிறப்பித்தார்.

விருதாளர்களுக்கு ‘அகரமுதல’ -தமிழ் உயர்விற்கும் தமிழர் மேன்மைக்கும் பாடுபடுமாறுவேண்டி- வாழ்த்தினைத் தெரிவிக்கிறது.

நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, தலைமைச் செயலாளர் சீலா பாலகிருட்டிணன், தமிழ் வளர்ச்சி- செய்தித் துறையின் செயலாளர் முனைவர் மூ. இராசாராம், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.