சாகித்ய அகாதமி விருதுகள் அறிவிப்பு: தமிழில் ‘கொற்கை’ புதினத்திற்கு விருது
2013- ஆம் ஆண்டுக்கான சிறந்த இலக்கியப் படைப்புகளுக்குரிய சாகித்ய அகாதமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அகாடமியின் தலைவர் விசுவ நாத்து பிரசாத்து திவாரி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள், நூலாசிரியர்களின் பட்டியலை 18.12.13 புதன்கிழமை அன்று வெளியிட்டார்.
தமிழ்,வங்காளம், உருது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான 21 மொழிகளில் கவிதை, புதினம், சிறுகதை, தன்வரலாறு ஆகிய பிரிவுகளில் சிறந்த படைப்புகள் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன.
தமிழில் ‘கொற்கை’ என்னும் புதினத்திற்காக ஆசிரியர் சோ டி குரூசுக்கு வழங்கப்படுகிறது.
கவிஞர்களுக்கு இந்த ஆண்டு அதிக விருதுகள் வழங்கப்படுகின்றன. போடோ கவிஞர் அனில் போரோ, வங்காளக் கவிஞர் சுபோத் சர்க்கார், உருது கவிஞர் சாவேத் அக்தர், சிந்தி கவிஞர் நம்தேவ் தாரசந்தனி, தோக்கிரி கவிஞர் சீத்தாராம் தபோலியா ஆகியோரின் படைப்புகளும் விருதுக்குத் தேர்வு பெற்றுள்ளன. ஆனால், தமிழ்க்கவிதை எதற்கும் விருது வழங்கப்படவில்லை. (இது குறித்துப் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் தெரிவித்த கண்டனம் தனிச் செய்தியாக உள்ளதைக் காணவும்.)
எழுத்தாளர் சோ.டி.குரூசு ‘ஆழிசூழ் உலகு’ என்னும்முதல் புதினத்தின் மூலம், சூழலியல் ஆர்வலர்களால் மதிக்கப் பெற்றார். அவருடைய இரண்டாவது புதினம்தான் ‘கொற்கை’.
இதன் மூலம் கடல்சார் பரதவர் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
பண்டைக் காலத்தில் முத்து வணிகத்தில் கொழித்து விளங்கிய நெல்லை மாவட்டத்தின் (தற்போது தூத்துக்குடி) கொற்கைத் துறைமுகப் பகுதியில் 1914-இல் கதை தொடங்குகிறது; 2000- இல் நிறைவு பெறுகிறது. நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலவெளியில் பயணம் செய்வதால் காலமும் புதினத்தில் முதன்மை இடத்தைப் பெறுகின்றது. அயலவர் ஆட்சி, கிறித்துவச் சமயத்தின் நுழைவு, விடுதலைப்போராட்டம், இந்திய விடுதலைக்குப் பின் ஏற்பட்ட மாற்றங்கள் எனப் பலவற்றையும் பரதவர் வாழ்க்கை மாற்றத்துடன் அழகுபட படைத்துள்ளார்.
சாகித்ய அகாதமி விருதுகளைப் பெறும் கலைஞர்கள் ஒவ்வொருவருக்கும் உரூ.1இலட்சம் பணப்பரிசும் தாமிரப் பட்டயமும் வழங்கப்படும். விருது வழங்கும் விழா தில்லியில் வரும் ஆண்டு மார்ச்சு 11 அன்று நடைபெறும்.
Leave a Reply