(தமிழ்ச்சொல்லாக்கம்: 403-407 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 408-410

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

408. Governor – காவலர்

விசுவநாதரின் இராச விசுவாசமும் வீரமும் புயவலியும் இத்தன்மையவென உணர்ந்த இராயர் மகிழ்ச்சியுற்று அவர் வேண்டும் வரங்களைக் கொடுப்பதாகச் சொன்னார். நாயக்கர் தமது பிதாவிற்கு உயர்ப்பிச்சை கொடுக்க வேண்டுமென்று தாய் உயிர்வேண்டிய பரசுராமரைப் போற் கேட்க, அவரும் மனமுவந்து ஈந்தனர். அன்றியும் விசுவநாதரைப் பாண்டி நாட்டுக்குத் தலைமுறை தத்துவமாய்க் காவலர் ஆக்கினர்.

காவலர் என்ற பதம் Governor என்ற ஆங்கில மொழியின் பெயரில் இந்நூலில் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

நூல்   :           பாண்டிய தேச நாயக்க மன்னர் வரலாறு (1919), பக். 7,

நூலாசிரியர்         :           நெ. ரா. சுப்பிரமணிய சருமா, அமெரிக்கன் மிசன்,

(பசுமலை உயர்தர கலாசாலைத் தலைமைத் தமிழ்ப் பண்டிதர்)

409. அன்னகோசம் – தீனிப்பை

விசபேதி ஒருவகை மோசமான நாசகால வியாதி. கலரா கண்ட இடத்தில் அநேகர் மரித்துப் போவார்கள். ஆகையால் இப் பெருவாரிக்குச் சனங்கள் பெரிதும் பயந்து இடம் பெயர்ந் தோடுவார்கள். கலராவை ஒருவகைத் தொத்து வியாதியென்றே கருதுகிறார்கள். விசபேதி அன்னகோசத்தில் (தீனிப்பை) எவ்வகை ஆகாரத்தையும் இருக்கவொட்டாமல் அதைக் கீழுக்கும் மேலுக்குங் கிண்டிக் கிளப்பிவிடுகிறது.

இதழ் :           நல்லாசிரியர், 1919 சூன் வயது-15 மாதம் – 1, பக்கம் – 8

கட்டுரையாளர்    :           சி. வே. சண்முக முதலியார் உபாத்தியாயர், செசனல் பள்ளி, காரியதரிசி, உபாத்தியாயர் சங்கம், திருவள்ளூர்,

410. மீனாட்சி – கயற்கண்ணி

தமிழே சிறந்தது

இராகம் – பியாகு, தாளம் – ஆதி

பல்லவி

தமிழே சிறந்ததென உனது நாமம் விளங்கச்

சாற்றும் அந்தப் பொருளை யாரறிவார் – அம்மா (தமிழே)

அநுபல்லவி

அமிழ்தினிற் சிறந்தது ஆரியத் துயர்ந்தது

அகத்திய னார்சிவ னிடத்தினி லுணர்ந்தது

அடிசீர் மோனை எதுகை தொடைசேர் தளையின்வகை

ஆகும் பாவினம் சந்தமா விரிந்தது – வண்ணத் (தமிழே)

சரணம்

திணைபால் காட்டும் விகுதி சிறப்புப் பொதுப் பகுதி

சேர்ந்த விதங்களெல்லாம் தென்மொழிக் கே தகுதி

இணையெனும் வடமொழி இருமொழியின் பேர்வழி

இசைக்கும் எழுதுவ தெல்லாம் வலஞ்சுழி – அதால் (தமிழே)

அகரத்தோ டகரஞ்சேர் வடமொழி தீர்க்க சந்தி

ஆகுமென் றுரைப்பார்கள் அறியார்கள் புத்தி நந்தி

மகரவொற் றழிவிதி மார்க்கமென் பதைப் புந்தி

வைத்தவர்மரு வென்றாரே முந்தி – அதால் (தமிழே)

கயற்கண்ணி மொழிபெயர்ப் பதற்கென உரைசெய்வார்

கந்தப் புராணமதின் காப்புச் செய்யு ளறியார்

இயற்படப் புணரியல் என்னுடன் வாதாடுவார்

இசை மராடி என்பதற் கென்புகல்வார் – அதால் – (தமிழே)

வடமொழி வழக்கில்லை வழங்குவர் தமிழ்ச் சொல்லை

மலைவேங் கடங்குமரி மற்றிரு கடல் எல்லை

இடமாக வகுத்தவர் இன்றுள்ளார் களுமல்லை

இயம்பும் மீனாட்சியென்ற பெயர்வல்லை – அதால்- (தமிழே)

– சங்கரதாசு சுவாமிகள்

நூல் : சங்கரதாசு சுவாமிகள் பக்திரசக் கீர்த்தனை (1920)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்