செயமங்கலம்: தீப்பற்றி எரியும் மின்மாற்றிகள்
செயமங்கலம் பகுதியில்
தீப்பற்றி எரியும் மின்மாற்றிகள்
தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலத்தில் மின்மாற்றி எரிந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலத்தில் இருந்து வைகை அணை செல்லும் வழியில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி அருகே கயிறு தொழிற்சாலை, கன்னெய்(பெட்ரோல்) நிலையம் உள்ளன. கடந்தவாரம் ஒருநாள் 12 மணியளவில் மளமளவெனத் தீப்பற்றி எரிந்தது. இத்தீயின் புகையைக் கண்டவுடன் கன்னெய் நிலைய ஊழியர்களும், கயிற்றுத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்களும் அலறியடித்து ஓடிவந்து தீயை அணைக்க முற்பட்டனர். அதன்பின்னர் மின்வாரிய அதிகாரிகளுக்கும், தீயணைப்புத்துறைக்கும் தொலைபேசி வழித் தெரிவித்துப் பலமணிநேரம் ஆகியும் யாரும் வரவில்லை.
அவ்வழியே சென்ற செயமங்கலம் ஊராட்சிச்செயலாளர் முருகன், மின்வாரிய அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மின்மாற்றி அருகே உள்ள மின்இணைப்புகளைத் துண்டிக்கக் கூறினார். அதன்பின்னர் மின்மாற்றியில் மணலைக் கொட்டத் தீயை அணைக்க ஏற்பாடு செய்தார். அதன்பின்னர் செயமங்கலம் மின்வாரிய ஊழியர்கள் வந்து மின்இணைப்பைத் துண்டித்து மேலும் தீ பரவாமல் தடுத்தனர். தீயை அணைக்காவிட்டால் அருகில் இருந்த கயிறு தொழிற்சாலை, கன்னெய் நிலையம் ஆகியவை தீப்பற்றி எரிந்து மிகப்பெரிய நேர்ச்சி(விபத்து) ஏற்பட்டிருக்கும். செயமங்லம் பகுதியில் மின்மாற்றி, மின்கம்பங்களில் அடிக்கடி இவ்வாறு நேர்ச்சி(விபத்து)கள் ஏற்படுகின்றன என்பதால், முறையாகப் பேணவேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
Leave a Reply