தன்மதிப்புப் பகுத்தறிவாளர் சிவகங்கை இராமச்சந்திரன் – செங்கோ
தன்மதிப்புப் பகுத்தறிவாளர் சிவகங்கை இராமச்சந்திரன்
மருதிருவர் மண்ணிலே…
சிவகங்கை இராமச்சந்திரன் (புரட்டாசி 02, 1915)16.09.1884இல் பிறந்து (மாசி 15, 1964)26.02.1933 இல் மறைந்த திராவிடர் இயக்கத் தன்மதிப்புப் பகுத்தறிவாளர். 1929இல் செங்கற்பட்டு மாநில தன்மதிப்பு(சுயமரியாதை) இயக்க மாநாட்டில் பங்கு பெற்று, பெரியார் பாதையில் தம் சாதி ஒட்டினை நீக்கி, “சிவகங்கை இராமச்சந்திரன் சேர்வை ஆகிய நான், இன்றுமுதல் சிவகங்கை இராமச்சந்திரன் என்றே அழைக்கப்படுவேன்” என்று சூளுரைத்துச் சாதியைத் துறந்தவர்.
ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட பெருந்தகையாளர். இரவுநேரப் பள்ளிகளைத் தொடங்கி, அந்த உழைக்கும் மக்களுக்குக் கல்வியறிவு புகட்டியவர். தம் சொந்த வருவாயில் பெரும்பகுதியை இந்தப் பணிக்காகச் செலவிட்ட வள்ளல்.
சிவகங்கை மன்னரின் கொடையால் தொடங்கி நடத்தப்பட்ட விடுதிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் எனப் போராடி வெற்றி கண்டவர். ‘சத்திரம் நிதி’ எனும் பெயரால் உதவி செய்யப்பட்டுத் தொடங்கப்பட்ட முதல் விடுதியே சிவகங்கையில் அமைந்ததுதான்.
பிராமணச் சிறுவர்களுக்கு மட்டுமே என நடத்தப்பட்ட அந்த விடுதியில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சிறுவர்களும் சேர்க்கப்பட்டு உணவளிக்கப்பட வேண்டும் என வாதாடி வென்றவர்.
தேவகோட்டைக்குப் பக்கத்தில் இரவுசேரிநாடு பகுதியில் ஆதிக்க சாதி அம்பலக்காரர்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கடும் மோதல் அக்காலத்தில் உருவாகிவிட்டது. ஆதிதிராவிட ஆண்களும் பெண்களும் இடுப்புக்கு மேல் ஆடை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை எதிர்த்து நடந்த கிளர்ச்சி மோதலாக வளர்ந்துவிட்ட நிலையில், சிவகங்ககை இராமச்சந்திரன் உயிரைத் துச்சமெனக் கருதி, கலவரப்பகுதிக்குச் சென்று இருதரப்பினரிடமும் பேசிச், சுமூக நிலையை உருவாக்கினார். சட்டப் பிரிவு 144இன் கீழ்த் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலும், எந்த மோதலும் நடக்காமல் தீர்த்து வைத்த பெருமைக்கு உரியவர்.
[திராவிடர் இயக்கத் தொடக்க நாள் தலைவர்களில் ஒருவரான சிவகங்கை இராமச்சந்திரனாரின் பெருமைபற்றிய இச்செய்தி இந்தியப்பதிவிதழில்(கெசட்டில்) – தமிழ்நாடு – இராமநாதபுரம் மாவட்ட அரசிதழில் பக்கம் 810இல் பதிவாகி இருப்பதாகும்]
வேலுநாச்சியார் வழியிலே கிருட்டிணம்மாள் இராமச்சந்திரன்
(ஐப்பசி 02, 1918 – அட்டோபர் 17,10.1887 : தை 25, 2008 – பிப்பிரவரி 07, 1977)
காந்தியார் முதல் பேராய(காங்கிரசு)க்காரர்கள் யாருமே பொதுத்தொண்டில் தம் துணைவியரை ஈடுபடுத்தியது கிடையாது. மனைவி என்ற நிலையில் தமக்குத் தொண்டு செய்யவேண்டும் எனக் கருதும் ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவர்களாக அவர்கள் இருந்தனர்.
ஆனால், தந்தை பெரியார் அவர்களும் அவரைப் பின்பற்றிய அக்காலத் திராவிடர் இயக்கத் தலைவர்களும் தம் துணைவியரையும் பொதுத் தொண்டில் ஈடுபடத் தூண்டியவர்கள்; செயல்படுத்திக் காட்டியவர்கள். 1920களில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் தந்தை பெரியாரின் இணையர் நாகம்மையாரும் தங்கை கண்ணம்மாளும் கலந்து கொண்டது இந்திய வரலாற்றில் காணக்கிடைக்காத அரிய பதிவு ஆகும்.
அதனையொட்டி, பெரியாரின் தொடக்ககாலக் கூட்டு உழைப்பாளி சிவகங்கை இராமச்சந்திரனும் தம் துணைவியாரைப் பொதுவாழ்வில் ஈடுபடுத்திய சிறப்புக்குரியவர். அவரின் துணைவியார் கிருட்டிணம்மாள் படிப்பறிவு பெற்றவர்.
இராமநாதபுரம் மாவட்டக் கழக உறுப்பினர். சிவகங்கை வட்டக்கழக(தாலுக்கா போர்டு) உறுப்பினராகவும் 1932 முதலே பணியாற்றியவர். அப்பகுதியில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் அவரின் தலைமை உரை மிகவும் உணர்ச்சியுடன் நிகழ்த்தப்பட்ட ஒன்றாகும். ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காகத் தம் துணைவர் இராமச்சந்திரனுடன் இணைந்து உழைத்த பெருமைக்குரியவர்.
சிவகங்கையில் பெண்களுக்கெனத் தனி மருத்துவமனையையும் குழந்தைகளுக்கான மருத்துவமும் இணைந்து செயல்படும் மருத்துவமனையையும் அமைத்தது இவரது தொண்டில் சிறந்தது.
இராமநாதபுரம் மாவட்டக் கல்விக் குழுவின் உறுப்பினராகவும் சிவகங்கை நகரின் மதிப்புமிகு நீதிபதி ஆகவும் பணிபுரிந்தவர்.
(முந்தைய இராமநாதபுரம் மாவட்ட அரசிதழில் பக்கம் 820 இல் வந்த இச்செய்தியை எடுத்து அனுப்பி உதவியவர் மண்டலத் தி.க. தலைவர் பொறியாளர் எசு.ஆர்.பாலசுப்பிரமணியம், சிவகங்கை)
– செங்கோ
உண்மை,
ஆகத்து 16-31, 2012
Leave a Reply