– தொகுநர்: சிவ அன்பு & இ.பு.ஞானப்பிரகாசன்

    அறிவியல் முறையில் சிறப்பாக அமைந்தது தமிழ் வரிவடிவம். தமிழ் வரிவடிவம்தான் இந்திய மொழிகளின் வரிவடிவங்களுக்குத் தாய் என்கிறார் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார். ஆனால், அவ்வப்பொழுது வரிவடிவச் சிதைப்பாளர்கள் இவ்வரிவடிவத்தைக் குலைப்பதில்  கண்ணும் கருத்துமாக இருந்து தங்கள் சிதைவு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். செம்மொழி மாநாட்டின்பொழுது சில வரிவடிவச்சிதைகள் அரங்கேற இருந்தன. தமிழ்க்காப்புக்கழகமும் தமிழ் எழுத்துக் காப்பியக்கமும் மேற்கொண்ட முயற்சியால் அவை முறியடிக்கப்பட்டன. அப்போதைய முதல்வர் கலைஞர்  வரிவடிவச்சிதைவிற்கு இடமில்லை என அறிவித்து விட்டார். இப்பொழுது ஒருவர் பழைய குப்பைக்கூடையில் இருந்துஎடுத்துப்போட்டு ஆங்கில வரிவடித்தில் தமிழை எழுத வேண்டும் என்கின்றார். இதனைத் தமிழ் நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. சொல்வதைக்கூடச் சரியாகச் சொல்லத் தெரியாததால் உரோமன் வரிவடிவத்தை ஆங்கில வரிவடிவம் என்கின்றார். இப்படிப்பட்ட கருத்துகளைப் புறந் தள்ள வேண்டும். ஆனால், நாம் அமைதியாக இருந்து விட்டால், மெல்ல மெல்ல நச்சுக் கருத்துகளைப் பரப்பி விடுவர். இதனை உணர்ந்த பலர் இதற்கு எதிர்ப்பாகத் தமிழ் வரிவடிவத்தைக் காக்க வேண்டும்  என்ற உறுதியுடன் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இவற்றுள் தமிழ் இந்து நாளிதழில் வந்த கருத்துகள், முகநூலில் வந்த கருத்துகள், இணையக் குழுக்களின்  கருத்தாடல்களில் வந்த கருத்துகள் சில இங்கே தொகுத்துத் தரப்படுகின்றன.)


ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தை இழிவுபடுத்துவதா
?

உலகெங்கும் வாழும் பல கோடித் தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் விதத்திலும் ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தை இழிவுபடுத்தும் விதத்திலும் எழுதப்பட்டுள்ளது.

 ‘எழுத்தாகிய உடல் இல்லையேல், மொழியாகிய உயிர் அழியும்என்பார் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார். இப்போது தமிழ் மொழியின் உடலை அழிக்கும் முயற்சியில் ஒரு மாமேதைஇறங்கியுள்ளார். அதற்குதி இந்துநாளிதழ் துணைபோகலமா?

தன்னை ஒரு நாயர் என்று பெருமையாகக் கூறிக்கொள்ளும் அவர், மலையாள மண்ணின் மீது மாறாத பற்றுடையவர் என்பதை அறிவோம். அந்த மலையாள மண்ணில் மாற்றங்களை எல்லாம் செய்துமுடித்துவிட்டு, தமிழ் எழுத்து வடிவத்தை அழிக்க அவர் புறப்படட்டும்.

மலாயுடன் ஒப்பிடலாமா?

மலாய் மொழியைத் தமிழுக்கு ஒப்பிட்டுக்காட்டுவது எவ்வகையில் பொருந்தும்? தங்களுக்கென்று தனி வரிவடிவம் இல்லாத நேரத்தில், பிற வரிவடிவங்களைக் கையாள்வது இயல்புதான். மலாய் மொழி ஆங்கில எழுத்துருவுக்கு வந்திருப்பதாக அவர் சொல்கிறார். அது லத்தீன் எழுத்துருவிலும், சுமத்திரா பகுதியில் அரபு எழுத்துருவிலும்கூட எழுதப்படுகிறது என்பதை அவர் அறிவாரா?

தமிழ் எழுத்துகளின் மூல எழுத்து ‘பிராமி’என்பது தவறான கருத்து என்பதை மொழியியலாளர்களே இன்று ஏற்கின்றனர். அதனால்தான், ‘தமிழ் பிராமி’என அழைக்கத் தொடங்கியுள்ளனர். இதனை எல்லாம் இந்த மொழியியல் மேதை அறிவாரா?

எழுத்துருவை மாற்றும்போது (உச்சரிப்பு) ஒலிப்பு முறை முற்றிலும் மாறிவிடாதா? தமிழ் நூல்களின் எழுத்துரு அனைத்தையும், ஒரு தலைமுறைக் காலத்தில் முற்றிலுமாக மாற்றிவிட வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறார். தமிழின் சுவடுகள்கூட இல்லாமல் அதனை அழித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தின் வெளிப்பாடுதானே இது? கனத்த நெஞ்சுடன், மீண்டும் எங்களின் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.’’

தொல்.திருமாவளவன், கலி.பூங்குன்றன், சுப.வீரபாண்டியன், தியாகு, பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியன், க.திருநாவுக்கரசு, சைதை க.வ.சிவா, மே.ப.காமராசு, கி.த.பச்சையப்பன், வா.மு.சே.திருவள்ளுவர், பா.இறையெழிலன், கோ.பாவேந்தன், தமிழ்மகன், உதயன், முத்தையா குமரன், கோவேந்தன்.

தொல்லை வடிவின எல்லா எழுத்தும்

தமிழ்எழுத்துகள் அறிவியல் முறையில் அமைந்தவை. தமிழ் உயிர்மெய்யெழுத்துகள்எளிதில் சொற்களைப் படிக்கவும் புரிந்து கொள்ளவும் உதவுவன. ‘த’, ‘மி’, ‘ழ்’ என மூன்றெழுத்தைச் சேர்த்தால் தமிழ் என வாசித்து விடலாம். ஆனால், ஆங்கிலத்தில் எழுதினால், ‘டி’, ‘எச்’, ‘ஏ’ – த, ‘எம்’, ‘ஐ’ – மி, ‘இசட்’, ‘எச்’ – ழ்>தமிழ் என எழுத்துக் கூட்டிவரும் எழுத்துகளைச் சேர்த்துவாசிக்க வேண்டும். தேவையற்ற உழைப்பும் நேரமும் இதில் செலவாகாதா? …

கல்வெட்டுகளில் உள்ள மாற்றங்களுக்கும் தமிழ் மொழி எழுத்து வளர்ச்சிக்கும்தொடர்பில்லை என்பதை உணர்ந்தால் தமிழ் எழுத்து மாறா வடிவுடன் நிலைத்துவருவதை உணரலாம். எனவேதான்

“தொல்லை வடிவின எல்லா எழுத்தும்”

என்கிறதுநன்னூல். அதனை, அதற்கு 1000 ஆண்டுகளுக்குப் பின் வந்த இலக்கண விளக்கமும்வழி மொழிகின்றது. (நன்னூல்: எழுத்ததிகாரம்: 5.உருவம்: நூற்பா 98 – இலக்கணவிளக்கம்: எழுத்தியல்: நூற்பா 23) அஃதாவது எல்லா எழுத்துமே மிகத் தொன்மையானகாலத்தில் இருந்துமாறாமல் வருகின்றன என இலக்கண நூல்கள் கூறுகின்றன. காலந்தோறும் சிலர் எழுத்து வடிவங்களில் குறை கண்டு மாற்ற வேண்டும் என்று துடித்ததால்தான்

“எண்ணெழுத்து இகழேல்” (ஆத்திச்சூடி 7)

என்று ஔவையார் தெளிவாகவே கூறிச் சென்றுள்ளார்.  …

இந்தியஅரசியல் யாப்பும் (Constitution of India: பிரிவு 29(1)) இதை உணர்ந்தேஎழுத்து வடிவங்கள் காக்கப்பட வேண்டும் என விதி வகுத்துள்ளது. ….

உரோமன் எழுத்துகளில் தமிழை எழுத வேண்டும் என ஆங்கில நாளிதழ் ஒன்றின்வழிச் சிலர் முயன்றனர். பேராசிரியர் சி.இலக்குவனார் முதலானவர்கள்முயற்சியால் அதற்கு முடிவுரை கட்டப்பட்டது. இப்பொழுது மீண்டும் அம்முயற்சியில்  இறங்கி மூக்குடைபடுவது தேவைதானா?

-இலக்குவனார் திருவள்ளுவன்,


இரு மரபு வழிகள்

பொதுவாக, தமிழ் மொழி வரலாற்றில் இரு மரபு வழிகள்  உண்டு. ஒன்று, தமிழ் வளர்ச்சியில் அக்கறைகொண்டு உழைத்தவர்களால் உருவாக்கப்பட்ட மரபு வழி. இன்னொன்று, தமிழின் உயிரோட்டத்தை, அதன் செறிவை, அதன் மக்கள் பிடிமானத்தைச் செரிக்க மாட்டாமல் அதை நீச பாசைஎன்று தூற்றியும் ஆட்சியிலிருப்போர் துணையுடனும் அதைப் பல வழியிலும்  வலிகுன்றச்செய்ய உழைத்தவர்களின் அழித்தொழிப்பு மரபு வழிகள் . . வரிவடிவ ஒழிப்புக் கட்டுரை இவ்விரண்டாம்  மரபினைச் சார்ந்தது. அறிவொளி இயக்கத்தில் எழுத்தறிவுப் பணிக்காகச் சிற்றூர் சிற்றூராகச் சென்று தமிழ் மக்களிடம் பணியாற்றியபோது நான் கண்ட பேருண்மை-ஆட்சியாளர்களின் அனைத்து மதிகெட்ட முயற்சிகளையும் மீறி, தமிழ் அதன் அழகுகளோடும் செறிவோடும் உழைப்பாளி மக்களிடம் குடிகொண்டிருக்கிறது என்பதைத்தான்.  அலைபேசிக் குறுஞ்செய்திகளின் உரோமானிய வரிவடிவத்தின் வரவால் அழிந்து போகுமளவுக்குத் தமிழ் வலுவிழந்ததாக இல்லை!

ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர், த.மு.எ.க.ச. தலைவர். – தொடர்புக்கு: tamizh53@gmail.com

சமூகத்திற்குப் பகையான சிந்தனை

கருநாடகத்தில் பள்ளி முதல் உயர்கல்வி வரை கன்னட மொழியை ஒரு மொழிப்பாடமாகப் படிக்காமல் யாரும் கல்வி முடிக்க முடியாது. தமிழகத்திலோ  மழலை நிலை  முதல் முனைவர் நிலை வரை தமிழை மொழிப்பாடமாக எந்தக் கட்டத்திலும் எடுக்காமல் கல்வியை முடித்துவிடலாம். இதற்குக் காரணம், தமிழக அரசியல்வாதிகளும் கல்வி வணிகர்களும் கூட்டாகச் செய்துவந்திருக்கும் வணிகச் சதிதான். ….உரோமன் வடிவத்தில் எழுத வேண்டும் என்பது மாற்று சிந்தனையா? எப்படிப்பட்ட  சமூகத்திற்குப் பகையான சிந்தனை!

ஞாநி, மூத்த இதழாளர், தொடர்புக்கு:gnanisankaran@gmail.com.

தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய்?


தமிழைப் படிப்படியே கைவிட்டு ஆங்கிலத்தையே ‘தாய்மொழி’ ஆக்கிக்கொள்ளலாம் என்கிற பயன்கேட்டு மாற்றம்கூடத் தமிழகத்தில் எப்போதோ முன்வைக்கப்பட்டுவிட்டது. வரிவடிவம் உட்பட மரபின் உயிர்ப்போடு மாற்றங்களை இயல்பாக உள்வாங்கிக்கொண்டு தமிழ் தொடர வேண்டும்; தொடர முடியும். ஆனால், பிழைப்புவாதமும் வறட்டுப் பகுத்தறிவும் ஆதிக்கச் சக்திகளும் பயன்கேட்டு  அறிவாண்மையரும் கைகோர்த்துக்கொண்டால், அப்பாவித் தமிழ் மக்கள் என்னாவார்கள்? ‘விதியே விதியே தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரையாயோ? ’- பாரதி.

–பா.மதிவாணன், கல்வியாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: bamavanan@gmail.com.

வரிவடிவத்தை மாற்றுவது பழமரபு மிக்க மன்பதையின் செயலாக இருக்காது

ஒரு பேச்சுக்குத் தமிழின் வரிவடிவத்தை மாற்றுவதனால் வசதிகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அது சரியா? வசதிகள் இருப்பதனாலேயே பண்பாட்டின் முதல் அடையாளமாக விளங்கும் மொழியின் வரிவடிவத்தை மாற்றுவது பழமரபு மிக்க ஒரு சமூகத்தின் செயலாக இருக்காது.

கோயில்களும் தேவாலயங்களும் மசூதிகளும் இருக்கும் இடங்கள் காலி செய்யப்பட்டால், பலர் இருக்க வீடுகள் கட்டப்படலாம் என்று சிலர் சொல்லலாம். மாற்றுத் திறனாளிகளை ஒழித்துவிட்டால் சமூகம் அதிகத் திறனோடு செயல்பட முடியும் என்று சிலர் சொல்லலாம். ஆனால், இத்தகைய அறிவுரைகளை நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்கள் எவரும் கொடுக்க மாட்டார்கள்!

–பி.ஏ.கிருட்டிணன், மூத்த எழுத்தாளர், தொடர்புக்கு:tigerclaw@gmail.com.

மொழியைத் தீர்த்துக்கட்டுவதுதான் தீர்வா?

நாளை ஒரு மேதை உரோமானிய வடிவம் வேண்டா,தூட்டானிய வடிவம் வேண்டும்எனலாம், இன்னொரு மாமேதை தேவநாகரிதான் தெய்வாம்சம் பொருந்தியது, தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஏற்றதுஎனலாம்; இதற்கெல்லாம் எங்கள் தமிழ்தான் கிடைத்ததா? தமிழர்கள் தூங்கிவிடவில்லை, ஐயா! ….. நம் குழந்தைகளில் பலர் தாய்மொழி கற்கத் தடுமாறுகின்றனர் என்றால், இந்த அவலத்துக்குத் தீர்வு தேட வேண்டாமா? மொழியை – அதன் வரிவடிவமாகிய மெய் அல்லது உடலை – தீர்த்துக்கட்டுவதுதான் தீர்வா?

தியாகு, மூத்த எழுத்தாளர், தொடர்புக்கு: thozharthiagu@gmail.com.

உடல் உறுப்புகளை வெறும் படமாகப் பார்ப்பதுபோல் ஆகும்

தமிழில் கடல், தங்கம், பகல் என்ற மூன்று சொற்களை எடுத்துக்கொள்ளுங்கள். இதில் முதல் சொல்லில் உள்ள ‘க்’ இரண்டாவது சொல்லில் உள்ள ‘க்’ மூன்றாவது சொல்லில் உள்ள ‘க்’ ஆகிய மூன்றும் வெவ்வேறு பேச்சொலிகள். இவை மூன்றும் ஒரே இடத்தில் வரா (Complimentary distribution). ஆனால், இம்மூன்றுக்கும் ஒரே எழுத்துதான். ஆனால், இந்தியில் இவற்றுக்கு வெவ்வேறு எழுத்துகள். இதற்குக் காரணம், தமிழில் இந்த மூன்று பேச்சொலிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் – மாற்றொலிகள் (Allophones). ஒன்று வருமிடத்தில் மற்றொன்று வராது. வந்து பொருள் வேறுபாட்டைத் தராது. ஆனால், இந்தியில் இந்த மூன்றும் வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவை. ஒரே இடத்தில் வந்து, பொருள் வேறுபாட்டைத் தரும். அதாவது, தனித்தனி ஒலியன்கள். எனவேதான் இந்தியில் அவற்றுக்குத் தனித்தனி எழுத்துகள். தமிழில் அவற்றுக்கு ஒரே எழுத்து.

….. …

மேலும், தமிழில் எழுத்து வடிவத்துக்கும் உச்சரிப்புக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. எழுதுவதை மாற்றொலி விதிகளோடு அப்படியே வாசிக்க முடியும். ஆங்கில எழுத்து முறை வேறு. எழுத்துகளுக்கும் உச்சரிப்புக்கும் நெருங்கிய தொடர்பு கிடையாது. சில வேளைகளில் தொடர்பே இருக்காது. அங்கு, எழுதுவதை அப்படியே உச்சரிக்க முடியாது. உச்சரிப்பைத் தனியே கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு தெளிவான அமைப்பு, அடிப்படை தமிழுக்கு இருக்கும்போது, ரோமன் எழுத்தில் தமிழை எழுத வேண்டும் என்று சொல்வது, உடல் உறுப்புகளை வெறும் படமாகப் பார்ப்பதுபோல் ஆகும்.

ந.தெய்வ சுந்தரம், மொழியியலாளர், தொடர்புக்கு: ndsundaram@hotmail.com.

தமிழ் வரிவடிவத்தைக் கைவிட அதென்ன கிழிந்துபோன பையா? …

தமிழில் எப் (F) ஓசை இல்லை என்று சொல்லி துக்ளக்இதழ், தமிழில் ஆங்கில எப் சேர்த்து எழுதித் தோற்ற கதை தமிழகம் ஏற்கெனவே அறிந்த ஒன்றுதான். பன்மையை அழித்து ஒரே ஒன்றைக் கொண்டாடும் வன்முறை இது. ஆங்கில அறிவின் முக்கியத்துவத்தை யாரும் மறுக்கவில்லை. ஆனால், தீர்வு வரிவடிவத்தில் இல்லை. வாய்ப்புகளில் இருக்கிறது. ஆம், வாய்ப்புகள்தான் தீர்வு.

மாடசாமி, கல்வியாளர், மூத்த எழுத்தாளர் – தொடர்புக்கு: aruvi.ml@gmail.com

சீன மொழி ஆதிக்க மொழியாக ஆகிவிட்டது என்றால் …?

இன்று கிழக்காசிய நாடுகளிலும், தென் கிழக்காசிய நாடுகளிலும் ஆங்கிலத்துக்கு இணையாகச் சீன மொழியைக் கற்கத் தொடங்கியுள்ளனர். அமெரிக்காவிலேயே சீன மொழியைக் கற்க ஆர்வம் வளர்ந்து வருகிறது. ஒருவேளை சீன மொழி ஆதிக்க மொழியாக ஆகிவிட்டது என்றால், அப்போது தமிழைச் சீன வரிவடிவத்துக்கு மீண்டும் மாற்ற முயல  வேண்டுமா?

வசந்தி தேவி, கல்வியாளர், தொடர்புக்கு: vasanthideviv@gmail.com.

ஆரிய அடிவருடிகளின் வேலை

தாய்மொழிக்கல்விக்கு முதன்மை கொடுப்பதோடு, தமிழ்வழிக் கல்விக்குப் பிற மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டில் கட்டாயச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். தமிழ்வழிக் கல்வி கற்றவர்களுக்கே அரசுப் பணிகளில் முதலிடம் கொடுக்கப்படச் சட்டம் இயற்ற வேண்டும். பிற மாநிலங்களில் குடியேறிய தமிழர்கள் அவ்வந்த மாநில ஆட்சி மொழிகளை மதித்துக் கட்டுப்பட்டு வாழ்வதைப் போல, தமிழ்நாட்டில் குடியேறிய பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாகிய தமிழை மதித்து ஏற்று, கற்று, கட்டுப்பட்டு வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும். இப்படிச் செய்து தமிழை எல்லாரும் படிக்கவைக்கவேண்டுமே தவிர… தமிழைத் திருத்தியோ அல்லது எழுத்தை மாற்றியோ அல்ல! காலங்காலமாகத் தமிழுக்கு எதிரான கருத்துகளை அறிவுவிளக்கங்களோடு சொல்லி… அதற்கு ஆள் அம்பு படை சேனை எல்லாவற்றையும் திரட்டிவந்து தங்கள் சித்துவிளையாட்டைக் காட்டுவதே ஆரிய அடிவருடிகளின் வேலையாகிவிட்டது. தமிழனை விடத் தமிழ் வளர்ச்சியில் தமிழர் அல்லாதவர்தான் அதிகம் மெனக்கெடுகிறார்கள்! அதிகம் சிந்திக்கிறார்கள்! அதிகம் எழுதுகிறார்கள்! ஏன்? ஏன்? ஏன்?

–சுப நற்குணன், தமிழார்வலர். தொடர்புக்கு:

thirutamilblog@gmail.com.

அரைவேக்காடான சிந்தனை

 

ஒரு மொழியைக் கசடறக் கற்க அம்மொழியின் எழுத்து (அகரவரிசை) இன்றியமையாதது.

கற்கும் கற்றுக்குட்டிகள், அந்தந்த மொழியின் அகரவரிசையிலிருந்து எழுத்துக்களைக் கற்றுக்கொண்டு, படிப்படியாக முன்னேறவேண்டும் என்பதுதான் இயல்பு.வேறு வரிவடிவில்தமிழை எழுத வேண்டும் என்பது ஒரு நடைமுறையில் செல்லாத, அரைவேக்காடான சிந்தனை!

–          வி.வி.சுப்பிரமணியன் (V.V.Subramanian)

 பலமொழிகள் அழிந்து ஒழிந்ததின் காரணம்      ஒரு மொழியின் மரபே தொன்மையான அதன் எழுத்து வடிவில்தான் உள்ளது. பலமொழிகள் அழிந்து ஒழிந்ததின் காரணம் அதற்கெனத் தனி எழுத்துவடிவம் இல்லாதது. தமிழ் ஒழியவேண்டும் என்ற நோக்கில்  சொல்லப்படும் கருத்து.

–           சகுபெர் சாதிக்கு (Jahufer Sadik)

தமிழ் அடங்கிப் போகக் கூடாது.

ஆங்கில எழுத்துக்களில் தமிழ் வாழும் நிலை வரவிட கூடாது… தமிழ் எழுத்துக்களை இது அழித்து விடும்… ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவாகிய ஆங்கிலத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு உருவெடுத்த தமிழ் அடங்கிப் போகக் கூடாது.

–          போபோ-டையோவுலாசோ டி சர்னா, இதழாளர் (Bobo-Dioulasso De Sarna, Journalist)

(தொடரும்)