தொகுநர்: சிவ அன்பு & இ.பு.ஞானப்பிரகாசன்

(முந்தைய இதழின் தொடர்ச்சி)

தாய்ப்பாலும் நாய்ப்பாலும் ஒன்றாகாது. ஆங்கிலேயன் தமிழை விரும்புகிறான். ஆனால், தமிழனோ ஆங்கிலத்தை நேசிக்கிறான்.

–          தில்லை அம்பலம் தில்லை (Telai Amblam Thilai)

தாய்ப் பாலும் புட்டிப் பாலும் ஒன்றாகுமா? என்று எழுதுங்கள் – அது நாகரிகமாகவும் பொருத்தமாகவும் இருக்கும்.

–          யான்சன் விக்டர்(Johnson Victor)

தமிழை ஆங்கில எழுத்துகளில் எழுத வேண்டும் என்போர், ஆங்கில நாட்டில் குடியேறட்டும்.

சிறீதர் இராசசேகர் (SRIDHAR RAJASEKAR)

  தனக்கென்று ஒரு வரிவடிவு இல்லாத மொழிகள் வேற்று மொழி வரிவடிவத்தை ஏற்றுக் கொள்ளலாம். அவர்கள் அந்த நேரத்தில் மிகவும் அறியப்பட்ட ஒரு மொழியின் வரி வடிவத்தைக் கூட ஏற்றுக் கொள்ளலாம், தவறில்லை. ஆனால், உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழ் ஒரு வேற்று மொழி வரிவடிவத்தை ஏற்க வேண்டிய எந்தத் தேவையும் இப்பொழுது வந்து விடவில்லை. தனக்கென்று வரிவடிவம் இல்லாத மொழிகள் எல்லாம் காலப்போக்கில் அழிந்து விட்டன . பெரும்பாலான மலைவாழ் மக்களின் மொழிகளுக்கு வரிவடிவம் கிடையாது. இந்தக் காரணத்தினாலேயே அவை காலப்போக்கில் சிறிது சிறிதாக அழிந்து வருகின்றன.  அந்த நிலைக்குத் தமிழையும் கொண்டு செல்வதா?

–          கல்யாணசுந்தர் (Kalyanasundar)

தமிழ் மொழியின் எழுத்துக்கள் பொருளோடு உதித்தவை. ‘கு’ என்னும் உயிர்மெய் எழுத்து குறிக்கும் எந்தச் சொல்லும் அளவில் சிறுத்தும், கூம்பியும், இளமையுடையதும், உயர்வில் குறுகியதுமான பொருள் விளக்கத்தை மட்டுமே தரும். ஒலிக்குறிப்பில் கூடக் ‘கு’ என்னும் இந்த எழுத்து, மாத்திரையளவில் குறுகியே ஒலிக்கும். குனி, குரங்கு, குழவி, குருத்து, கும்மி, குருவி, குடம் என எவையெல்லாம் ஒரு குறுகிய உருவம் அல்லது சிறுமையின் வடிவமாகவும் ஒரு வட்டத்தினுள் அடைபடுவதுமாகிய பொருளுக்கே வரிவடிவில் மட்டுமின்றி, ஒலிவடிவிலும் அமைந்துள்ள அற்புத உண்மை நீங்கள் அறியாத ஒன்று. அதற்கு மாறாக, ‘ஏ’ என்னும் எழுத்து எவையெல்லாம் பெரியவையோ, உயரமானவையோ அவற்றுக்கு வரிவடிவில் மட்டுமின்றி ஒலிவடிவிலும் உள்ள அருமையை உணரவும். இவ்வெழுத்தினால் விளையும் சொற்கள் சிறப்பினையும், உயர்வினையும், எழுச்சியினையும், ஏற்றத்தினையும் மட்டுமே குறிக்கும் சொற்களுள் தெரிவதை தமிழறிந்தால்தான் புரியவியலும். “கருந்தமிழ்ச் சொல்லுக்குள்ளே கருத்துக்கள் கிடப்பதுபோல்…”- என்று பாவேந்தரும், “சொல்லெல்லாம் தூய தமிழ்ச் சொல்லாகுமா?”- என்று கண்ணதாசனும், “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்று மூதுரையும் சொல்வதெல்லாம் எதற்கு? இது இன்னமொழி என்று எவரும் கூறாமல் எடுத்துக்காட்டுவது அம்மொழியின் எழுத்துக்களே.

சிவநாதன் (Sivanathan)

தலைமுறை அற்றவர்கள் தலைமுறை உள்ள தமிழைப் பற்றி எழுத  இடம்தரக்கூடாது.

–          சகந்நாதன் (jahannathan)

தன்னை ஒரு மேதாவியாக நினைத்துக் கொள்பவா்கள் சில சமயங்களில் செரிக்க முடியாத படுமோசங்களைப் புதுக் கண்டுபிடிப்பு எனப் புகுத்த முற்படுவார்கள். இத்தகைய பக்குவமற்ற, பொறுப்பற்ற, அரைகுறை வேக்காட்டுத்தனமான கருத்துதான்  தமிழ் வரிவடிவத்தை ஆங்கிலத்திற்குத் தாரை வார்ப்பது. பல ஆயிரம் ஆண்டுகளாகின்றன ஒரு மொழியின் வரிவடிவம் நிலைபெற. நிலைபெற்ற வரிவடிவத்தை அழிக்க எத்தனிக்கும் எழுத்தாளரின் உட்கிடக்கை பேரிடரானது புறந்தள்ளுவோம்  பிதற்றலை!

ந.சேகரன்

இஃது ஓர் அபத்தமான – படுமோசமான = கருத்து! ஆங்கிலம் உலக மொழியல்ல என்பது ஒன்று. இது நடைமுறைக்குச் சிறிதும் ஒத்துவராத ஒன்று. இவ்வாறு பல சொல்லிப் போகலாம்..

 சுந்தரம்

மகிழ்ச்சி என்ற எழுத்துக்களைப் பார்க்கும்போதே அந்த உணர்வு தெரிகிறதே! இந்த உணர்வை எப்படி வேறு மொழியில் எழுதினால் பெற முடியும்?

 – கே.திலீபன் (k.dileepan)

முனைவர்.எல்.எசு.வாகன்கர் மற்றும் சில மொழியாளர்கள் என ஒன்றிணைந்து 1975 -ஆம் ஆண்டு ‘இந்திய வரிவடிவங்களை உரோமானியப்படுத்தல்’ (Romanization of Indian Scripts) என்ற நோக்கில் இந்திய மொழிகளுக்கு ஒட்டுமொத்தமாக ஆங்கில வரிவடிவம் கொடுக்க இயலுமா என்று ஆராய்ந்தனர். அடியேன் முனைவர்.வாகன்கரின் மாணவன். அது தமிழ் மொழிக்கு இயலாத ஒன்று என்று கண்டறியப்பட்டது.

.. யாப்பறியாதான் பாபுனைந்த கதையாய்த்  தமிழுக்கு ஆங்கில எழுத்துரு தர முன்வருவது, “கல்லாதான்………காமுற்றற்று” – என்று தொடங்கும் 402-ஆம் குறள்காட்டும் உவமைக்கே நிகராகும்.

சிவநாதன் (Sivanathan)

எவ்வளவோ அருமையான இலக்கணம் உள்ள மொழி தமிழ் .. நல்ல எழுத்து வளம், இலக்கிய வளம் உள்ள மொழியை அதன் வழியிலேயே முன்னேற்ற எண்ணாமல் தமிழை விட இளைய மொழி வழியாக எழுத எண்ணுவது படுமோசம்!

முகமது அலி (Mohamed Ali)

வரிவடிவத்தை மாற்ற வேண்டா!….தமிழ் மொழி கட்டாயம் ஒரு பாடமாக்கப்பட வேண்டும். இதற்குத் தமிழக அரசு கல்வி மானியம் வழங்க வேண்டும். மேலும், தமிழ் அறவே இல்லாத கல்வி வழங்கும் பள்ளிகளுக்கு வரி விதிக்க வேண்டும்.

 – பிரசன்னா (Prasanna)

எழுத்து இல்லாத சோமாலிய, மலாய், இந்தோனேசிய மொழிகள் உரோமன் எழுத்துகளைப் பயன்படுத்துகின்றன. ஆனால், ஆயிரம் ஆண்டுகளாக எழுத்துகளைக் கொண்டுள்ள தமிழ் ஏன் ஆங்கிலத்தில்(உரோமனில்) எழுதப்படவேண்டும்? சிரிப்பாக உள்ளது!

தமிழை அயல் வரிவடிவிற்கு மாற்றினால் நீங்களும் நானும் மார்தட்டிப் பெருமையாய்க் கூறிக்கொள்ளும் ‘தமிழ்’ தன் இயல்பை இழந்துவிடும். விரைவில் தமிழ் அழிந்து தமிங்கிலம் அல்லது தங்கிலீசு பிறக்கும். தெலுங்கு, கன்னடம், மலையாளம், இன்னும் ஏறத்தாழ ௩௦(30) திராவிடக்குடும்ப மொழிகள் தமிழிலிருந்து பிறந்தவையெனக் கூறச் சாட்சியங்கள் இற்றைத் தமிழிலேயே குறைவுதான். எழுத்தும் மாற்றியாகிவிட்டதென்றால் ‘ஆங்கிலச் சொற்கள்’ மிக எளிதாகத் தமிழில் கலந்துவிடும். பிறகு, தமிழ் ஆங்கிலத்தினின்று வந்தது என்பர். (எப்படி தெலுங்கர், கன்னடர் சமசுகிருத்திலிருந்து தங்கள் மொழி வந்ததாய்க் கூறுகிறார்கள்!) தமிழை அழிக்க நாமே காரணமாவதா? சீனர், சப்பானியர், கொரியர்களைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை மொழியுணர்வும் தூய்மை பேணலும். அவர்களுக்கு நிகராய்த் தமிழுக்காகப் போராடுவோரில் உண்மையில் ஈழத்தமிழர் மிகச் சிறந்தவர்கள். (நான் தமிழகத்தைச் சேர்ந்தவன்). ஈழவர்கள் தமிழை ஐ-பேசியில் (i-phone)  இடம்பெறச் செய்தனர். உலகரங்கில் தமிழையும் தமிழரையும் பற்றி அறியச் செய்தனர். நாமோ? சற்றுச் சிந்திக்க வேண்டும்! என் மனதில் பட்டதைக் கூறினேன். (பின்குறிப்பு: நான் வடகிழக்கு இந்தியாவில் பணிபுரிகின்றேன்).

–          சத்யமூர்த்தி

(தொடரும்)