mu.va.02

‘திராவிடம்’ அந்தக் காலத்துத்

தமிழ் இலக்கியத்தில் ஆளப்படவில்லை – மு.வ.

  1. தமிழ் இலக்கியம் ஏறக்குறைய 25 நூற்றாண்டு் வரலாறு உடையது.#
  2. தென்னிந்தியாவின் மற்றத் திராவிட மொழிகளின் இலக்கியங்கள் கி.பி. 8 – ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தோன்றியவை. ஆகையால், அதற்கு முந்திய 12 நூற்றாண்டுக் காலத் தமிழ் இலக்கியம் ஒரு கூட்டுக் குடும்பத்தின் முதல் குழந்தை போல் தனியே வளர்ந்து வந்தது.
  3. சங்கக் காலத்துக்கும் கி.பி. 7 – நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சமற்கிருதம் கற்ற அறிஞர்களின் உறவு தமிழ் நாட்டில் இருந்திருக்கிறது.
  4. சைன சமயமும் பௌத்த சமயமும் தமிழ் நாட்டில் பரவத் தொடங்கிய பிறகு, வட நாட்டு மொழிகளின் சொற்கள் பல தமிழில் கலந்தன.
  5. அந்நிலையில் இந்தியாவின் இலக்கிய மொழிகளாக மதிக்கப் பட்டு இருந்தவை இரண்டே. ஒன்று, தமிழ்; மற்றொன்று, சமற்கிருதம்.
  6. திராவிடம் என்ற சொல் தமிழ் என்பதற்கு வடமொழியார் தந்த வடிவம் என்று கொள்ளப்பட்டது. அதனால், திராவிடம் என்ற சொல் அந்தக் காலத்துத் தமிழ் இலக்கியத்தில் ஆளப்படவில்லை.
  7. திருநாவுக்கரசர் கி.பி. 7 – ஆம் நூற்றாண்டில், ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்’ என்று இந்தியாவின் கலைவழிப்பட்ட பாகுபாட்டை இரண்டு இனமாகவே குறிப்பிட்டார்.
  8. கி.பி. 3 – ஆம் நூற்றாண்டு வரை தமிழ் நாட்டில் தமிழ் அரசர்களான சேர சோழ பாண்டியர்களே ஆண்டுவந்தார்கள். பிறகு ஒரு குழப்பம் ஏற்பட்டு, காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட பல்லவர் ஆட்சி தலையெடுத்தது.
  9. பல்லவர் ஆட்சிக் காலத்தில், தமிழ், வடமொழி ஆகிய இரு மொழிகளுக்கும் அவற்றைச் சார்ந்த கலைகளுக்கும் ஆதரவு கிடைத்து வந்தது. காஞ்சிபுரம் வட மொழிக் கல்விக்கு உரிய பெரிய நகரமாக விளங்கியது.
  10. இந்த நிலையில், தமிழறிவு ஒரு புறமும் வடமொழி அறிவு மற்றொரு புறமும் தனித்து இருப்பதை உணர்ந்த அறிஞர். சிலர் ஒரு புது முயற்சியில் ஈடுபட்டார்கள். சமற்கிருதச் சொற்களையும் தமிழ்ச் சொற்களையும் கலந்த ஒரு மொழி நடையாகப் படைத்து மணிப்பிரவாளம் எனப் பெயரிட்டு எழுதத் தொடங்கினார்கள்.
  11. ஒரு நாட்டு மக்களின் வாழ்விலும் சிந்தனையிலும் வழிவழியாக ஊறி, வளர்ந்துவிட்ட மொழியின் தன்மையைப் படித்தவர் சிலர் சேர்ந்து முயற்சி செய்து மாற்றிவிட முடியாது என்பதை அவர்கள் உணரவில்லை.
  12. பல்லவர்கள் ஆட்சி 10 – ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியுற்றது. சோழர்கள் மறுபடியும் தலையெடுத்து பெரிய வல்லரசாக ஓங்கினார்கள். 13 – ஆம் நூற்றாண்டில் அவர்களும் வீழ்ச்சியுற்றார்கள். முகம்மதியர் படையெடுப்பால் நாடு கலங்கியது. விசய நகர ஆட்சியின் கீழ், நாயக்க மன்னர்கள் தமிழ்நாட்டில் செல்வாக்கு பெற்றார்கள்.
  13. மராத்திய சரபோசி மன்னர்கள் தமிழ் நாட்டின் ஒரு பகுதியை ஆண்டார்கள். பிறகு, முகம்மதியர் ஆட்சி ஏற்பட்டது.
  14. அடுத்து, 18 – ஆம் நூற்றண்டின் இறுதியில், (இ)டச்சுக்காரர், போர்ச்சுகீசியர், பிரெஞ்சுக்கரர், ஆங்கிலேயர் முதலானோரின் வாணிக உறவும் ஆட்சியும் ஏற்பட்டன.
  15. தமிழ் இலக்கிய வரலாற்றை மூன்று பெரும் பிரிவாகக் கருதலாம். அவை: பழங் காலம், இடைக்காலம், தற்காலம்.

(அ) பழங் காலம்: 
கி.மு. 500 முதல் கிபி. 500 வரை:

கி.மு.500 முதல் கி.பி. 200 வரையில், சங்க இலக்கிய அகப்புறப் பாடல்கள் தோன்றின.

கி.பி. 100 முதல் கி.பி. 500 வரையில்,  திருக்குறள், கார் நாற்பது முதலிய நீதி நூல்கள் தோன்றின.*

இக்காலக் கட்டத்தில் சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம் முதலிய பழையகாப்பியங்கள் தோன்றின.

(ஆ) இடைக்காலம்: கி.பி. 500 முதல் கி.பி. 1800 வரை:

கி.பி. 500 முதல் 900 வரை, நாயன்மார், ஆழ்வார், கலம்பகம் முதலிய பக்திப் பாடல்கள் தோன்றின.

கி.பி.900 முதல் கி.பி. 1200 வரை, சீவக சிந்தாமணி, பெருங்கதை, சமண பௌத்தக் காப்பியங்களும், இறையனார் களவியல் முதலிய இலக்கண நூல்களும், சேக்கிழார், கம்பர், ஒட்டக்கூத்தர், ஔவையார் ஆகியோர் நூல்களும் உலா பரணி பிள்ளைத் தமிழ் நூல்களும்  தோன்றின.

கி.பி. 1200 முதல் கி.பி. 1500 வரையில் இளம்பூரணர், பேராசிரியர் ஆகியோரின் உரை நூல்களும், வைணவ விளக்க நூல்களும், சைவச் சித்தாந்த சாத்திர நூல்களும், சிறு நூல்களும், தனிப்பாடல்களும் தோன்றின.

கி.பி. 1500 முதல் 1800 வலையில், புராணங்கள், தலபுராணங்கள், இசுலாமிய இலக்கியங்கள், கிறித்தவர் இலக்கியங்கள், வீரமாமுனிவர் முதலானோரின் உரைநடை நூல்கள் தோன்றின.

(இ) தற்காலம்: கி.பி. 1800 முதல் கி. பி. 2000 வரை:

19 – ஆம் நூற்றாண்டு
கிருத்தவ இலக்கியம், இராமலிங்கர், வேதநாயகர் முதலனோர் நாவல் வளர்ச்சி, கட்டுரை வளர்ச்சி

20 – ஆம் நூற்றாண்டு
பாரதி, கல்கி, புதுமைப்பித்தன், முதலானோர், சிறுகதை, புதினம், நாடகம், வாழ்க்கை வரலாறு, கட்டுரை, ஆராய்ச்சி.

aa.raa.amaithianantham

ஆ.இரா.அமைதி ஆனந்தம்

மு.வ. வின் “தமிழ் இலக்கிய வரலாறு” அத்தியாயம் – 2

attai_thamizhilakkiyavaralaru_mu.va.

[ பி.கு. #தமிழ் இலக்கியம் முப்பது நூற்றாண்டிற்கும் மேற்பட்ட ஆதார வளம் உடையது. அதற்கும் முந்தைய பல்லாயிரம் ஆண்டுகள் வரலாறு உடையது என்பதை நூல்களின் வழியே உய்த்துணரலாம்.

*திருக்குறள் கி.மு. நூற்றாண்டைச்சேர்ந்தது.]