துலுக்கப்பயலே! 2 -வைகை அனிசு
சன்னி-சியாக்கள்: உலகளவில் முசுலிம்கள், சன்னி, சியாக்கள் என இரு முதன்மைப் பிரிவுகளாக உள்ளனர். திருக்குர்ஆன், அகதீசு(ḥadīth , முகமது நபியின் கருத்துகள் ஆகிய வழிகாட்டலைப் பின்பற்றுபவர்கள் சன்னி முசுலிம்கள் எனவும், முகமது நபியின் மருமகன் இமாம் அலி மற்றும் தம் மரபினர்களின் அகதீசுகளோடு இசுலாத்தைப் பின்பற்றுபவர்கள் சியாக்கள் எனவும் உள்ளனர்.
தமிழகத்தில் முசுலிம்கள்: தமிழகத்தில் உள்ள முசுலிம்கள். நிலங்களுக்கு தகுந்தவாறுத் தொழிலைச் செய்தனர். அந்தத் தொழிலை அடிப்படையாக வைத்து அவர்களுக்கு அடைமொழி வைக்கப்பட்டு அடையாளப்படுத்தினார்கள். இராவுத்தர், (இ)லெப்பை, மரக்காயர்,ஓசா எனத் தாங்கள் செய்த தொழில்களின் அடிப்படையில் சாதிப்பிரிவுகளாக ஏற்படுத்திக்கொண்டார்கள்.இராவுத்தர்கள்:குறிஞ்சி, முல்லைப்பகுதிகளில் வாழ்பவர்கள், இராவுத்தர் என்ற அடைமொழியைத் தன்னுடைய பெயரின் பின்பக்கம் இணைத்துக்கொள்கின்றனர். மரைக்காயர்களில் சிறந்த குதிரை வீரர்களாக விளங்கியவர்கள் “இராவுத்தர்கள்” என்று அழைக்கப்பட்டனர். அரபி மொழியில் ரா-இத் என்றால் குதிரை வீரன் என்று பொருள்படும். ~இராவுத்தம்~ என்பதற்குக் குதிரை என்ற பொருளும் உண்டு. வடமொழியில் ~ராஃக_த்~ என்றும் தெலுங்கில் ~ரவுத்து~ என்றும் அழைக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் ஆட்சியாளர்களில் குதிரைப்படை வீரர்களாக இராவுத்தர்கள் பணிபுரிந்துள்ளனர். தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் அரேபிய குதிரைகளை மிகவும் விரும்பினார்கள்.சங்க இலக்கியமான ‘பட்டினப்பாலை’ என்ற நூலில் “நீரில் வந்த நிமிர்பரப்புரவி” என்று பாடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரேபியாவிலிருந்து குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டதை அறியலாம்.
அருணகிரிநாதர் தமது கந்தர் அலங்காரத்தில் ~மாமயிலேறும் இராவுத்தனே~ என்று புகழ்ந்துள்ளார். “கோட்டம் இல்லா மாணிக்க வாசகர் முன் குதிரை இராவுத்தனாய்”நின்றவர் என்று சிவபெருமானைத் திருப்பெருந்துறைப் புராணம் குறிப்பிடுகிறது.
கி.பி.ஏழாம் நூற்றாண்டில் மாலிக்குல்; இசுலாம் சமாலுத்தீன் என்ற அரபி வணிகரும் பிற வணிகர்களும் ஒன்று சேர்ந்து ஆண்டுதோறும் ‘கைசு’ தீவிலிருந்து 1440 குதிரைகளை மரக்கலம் மூலம் ஏற்றி வந்து பாண்டிய நாட்டில் ஒப்பந்தம் செய்தார்கள் என்பதை அப்துல் வசாப்பு என்ற வரலாற்று அறிஞர் குறிப்பிட்டுள்ளார். ;
தென்மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை முதலான மாவட்டங்களில் வாழும் இராவுத்தர்கள் பல பிரிவுகளை உண்டாக்கியுள்ளனர். எழுத்துக்காரர், கந்தவெட்டி, நல்லாம்பிள்ளை, தெற்கத்தியார், வடக்கத்தியார், வையைக்கரையார், எனப் பல பிரிவுகளை உண்டாக்கி இப்பிளவுகளால் அரசியல், சமூகம், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளனர். இதனால் பீடிசுற்றியும், வேளாண் கூலிகளாகவும், தோல்தொழில் செய்பவர்களாகவும், நகர்ப்புறச் சேரிகளில் வசிக்கும் உடல் உழைக்கும் தொழிலாளர்களாகவும், நிலையான வாழ்விடமின்றி ஊர் ஊராகத் திரியும் முசாபர்களாகவும், பூட்டு, திறவு கோல் தொழில் செய்பவர்களாகவும், சந்தைவணிகம், பலாப்பழ வணிகம் ஆகியவற்றில் ஈடுபடுபவரகளாகவும் என மூதாதையர்கள் செய்த தொழிலைப் பரம்பரையாகச் செய்து வருகின்றனர். ஆனால் பொருளாதார நிலையிலோ,சமூக நிலையிலோ முன்னேற்றத்திற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே வேளையில் தங்களுடைய நபிமார்கள் செய்த தொழிலை தாங்கள் செய்கின்றோம் என மனத்தைத் தேற்றிக்கொள்கின்றனர்.
(தொடரும்)
வைகை அனிசு
3.பள்ளிவாசல் தெரு
தேவதானப்பட்டி-626 601.
தேனி மாவட்டம்
பேசி: 9715795795
Leave a Reply