(தோழர் தியாகு எழுதுகிறார் 172 : பார்ப்பனப் பெருவாழ்வு! 8/8தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார் 173:

தாய்த் தமிழுக்குச் சந்துரு துணை – அன்றும் இன்றும்


பொழில்வாய்ச்சி (பொள்ளாச்சி) கள்ளிப்பாளையம்புதூர் தாய்த் தமிழ்ப் பள்ளியின் வெள்ளி விழா நேற்று(10.04.23) இனிதே நடந்து முடிந்தது. இனிய நண்பர் சந்துருவை நீண்ட காலத்துக்குப் பிறகு பார்த்துப் பேசிக் கொண்டிருக்க இது நல்ல வாய்ப்பாயிற்று. அவருடனான நட்பு-தோழமை பற்றி நிறைய எழுத வேண்டும். பிறகு எழுதுகிறேன்.
நேற்றைய நிகழ்வில் அவர் ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறைப்பட்டோர் சட்ட உரிமைகள் பற்றி ஒரு நீதிப் பேராணை வழக்கு தொடுத்திருந்தேன். அந்த வழக்கில் நானே நேர்நின்று (party in person) வாதிட்டேன். சந்துரு எனக்குத் துணையாக இருந்தார். நீதியர்கள் இராமசாமி, டேவிட் அன்னுசாமி இருவர்-ஆயம் வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தது. சிறையில் என்னையும் மற்றத் தோழர்களையும் பிற கைதிகளிடமிருந்து பிரித்து வைத்திருப்பது பற்றிப் பேச்சு வந்தது. நீதியர் இராமசாமி என்னைப் பார்த்து “தியாகராசன், நீங்கள் மற்றக் கைதிகளை மூளைச்சலவை செய்து விடுவீர்கள் என்று அஞ்சுகிறார்கள் போலும்” (They seem to fear you may brainwash others) என்றார். நான் உடனே பதிலளித்தேன்: “Certain brains cannot be washed at all. They can only be smashed.” “சில மூளைகளைச் சலவை செய்ய முடியாது. அவற்றை அடித்து நொறுக்கினால்தான் உண்டு” என்ற எனது விடை சில நிமிடம் நீதிமன்றத்தையே மலைக்கச் செய்து விட்டது என்று சந்துரு நினைவுகூர்ந்து பேசினார். தமிழ்வழிக் கல்வி எனும் கருத்துக்கு அனைவரையும் மாற்றுவது பற்றிப் பேசும் போது அவர் இந்த நீதிமன்ற உரையாடலை ஒப்பிட்டார்.
சந்துரு புறப்பட்டுக் கொண்டிருந்த போதே நான் பேசத் தொடங்கி விட்டேன். நானும் ஒரு பழைய நிகழ்ச்சியை நினைவுகூர்ந்தேன். சிறையிலிருந்த போதே 1980 முதல் அவரோடு பழகத் தொடங்கி விட்டேன். அரசியலிலும் எங்களுக்குள் பல வகையில் கருத்து உடன்பாடு இருந்தது. 1989-90 கால கட்டத்தில் ஈழச் சிக்கலை ஒட்டி இருவரும் சிபிஎம் கட்சியிலிருந்து அடுத்தடுத்து நீக்கப்பட்டோம். 1993ஆம் ஆண்டு தமிழ்க் கல்விக்கும் தமிழ்வழிக் கல்விக்கும் ஆக்கப்பணிகள் செய்யும் நோக்கில் தாய்த் தமிழ்க் கல்விப் பணி எனும் கல்வி இயக்கத்தை நிறுவினேன். அதன் முதல் முயற்சியாக அம்பத்தூரில் ஆலமரம் அருகே முதல் தாய்த் தமிழ் பள்ளி அமைத்தோம்.
இது அரசு சார்ந்த முயற்சியோ தனிப்பட்ட செல்வந்தர் சார்ந்த முயற்சியோ அல்ல. மக்கள் சார்ந்த முயற்சியே! மக்களிடம் சிறுகச் சிறுகப் பொருள் திரட்ட ஒரு வழி கண்டோம். “தாருங்கள் ஆளுக்கு ஒரு உரூபாய் நன்கொடையாக!” என்றொரு வேண்டுகோள் விடுத்தோம். ஒரு உரூபாய் நன்கொடைக்கு அடையாளமாகத் தாய் குழந்தை படம் போட்ட முத்திரை வில்லைகள் அச்சிட்டோம். அதற்குப் படம் வரைந்து கொடுத்தவர் டிராட்சுகி மருது.
இந்த ஒரு உரூபாய் நன்கொடை முத்திரைகளை நான் பலரிடம் நீட்டியது போலவே சந்துருவிடமும் நீட்டினேன். அவர் “ஒன்றென்ன? நிறைய வாங்கிக் கொள்கிறேன்” என்று சொல்லி வாங்கிக் கொண்டார். நான் அதற்கு மேல் அவரை இந்த முயற்சியில் ஈடுபடுத்த ஆசைப்பட்டேன்.
“எங்கள் கல்விப் பணிக்கு ஓர் அறக் கட்டளை அமைக்கிறோம், நீங்கள் எங்களுக்குச் சட்ட ஆலோசகராக இருக்க வேண்டும்.” உடனே வந்தது மறுப்பு: “நான் எந்த வழக்கிலும் தொழிலாளர் பக்கம்தான் வாதிடுவேன். முதலாளி பக்கம் வாதிட மாட்டேன். உங்கள் பள்ளியில் ஆசிரியர்களுக்கும் உங்கள் நிருவாகத்துக்கும் நாளை ஒரு பூசல் வந்தால் நான் ஆசிரியர்களின் பக்கம்தான் வழக்காடுவேன். ஆகவே நான் உங்கள் சட்ட ஆலோசகனாக இருக்க இயலாது.”
இதை இப்போது நினைவுபடுத்தி விட்டுச் சொன்னேன்: “அப்போது தாய்த் தமிழ் கல்விப் பணிக்கு ஆலோசகராக இருக்க மறுத்தவர் வழக்கறிஞர் சந்துரு. இப்போது முன்னாள் நீதியராக நம் பள்ளிக்கு வருகை தந்து தாய்த் தமிழ்ப் பள்ளிகளுக்கு எல்லாம் சட்ட ஆலோசனையும் மற்ற ஆலோசனையும் வழங்கியுள்ளார்.
கூடியிருந்தோரின் கையொலி அவருக்குக் கேட்டதா? தெரியவில்லை.

தொடரும்
தோழர் தியாகு

தாழி மடல் 155