நூலழகு பத்து – பவணந்தி முனிவர், நன்னூல்
நூலழகு பத்து
சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல்,
நவின்றோர்க்கு இனிமை, நனிமொழி புணர்த்தல்,
ஓசை உடைமை, ஆழம் உடைத்து ஆதல்,
முறையின் வைப்பே, உலகம் மலையாமை,
விழுமியது பயத்தல், விளங்கு உதாரணத்தது
ஆகுதல், நூலிற்கு அழகு எனும் பத்தே.
சுருங்கச் சொல்லல் – சொற்கள் வீணாக விரியாது சுருங்கிநிற்கச் சொல்லுதலும் , விளங்கவைத்தல் – சுருங்கச் சொல்லினும் பொருளைச் சந்தேகத்துக்கு இடமாகாது விளங்க வைத்தலும் , நவின்றோர்க்கு இனிமை – வாசித்தவருக்கு இன்பத்தைத் தருதலும் , நன்மொழி புணர்த்தல் – நல்ல சொற்களைச் சேர்த்தலும் ; ஓசை உடைமை – சந்தவின்பம் உடைத்து ஆதலும் , ஆழம் உடைத்து ஆதல் – பார்க்கப் பார்க்க ஆழ்ந்த கருத்தை யுடைத்து ஆதலும் ; முறையின் வைப்பு – படலம், ஓத்து முதலியவைகளைக் காரண காரிய முறைப்படி வைத்தலும் , உலகம் மலையாமை – உயர்ந்தோர் வழக்கத்தோடுமாறுகொள்ளாமையும் , விழுமியது பயத்தல் – சிறப்பாகிய பொருளைத் தருதலும் , விளங்கு உதாரணத்தது ஆகுதல் – விளங்கிய உதாரணத்தை உடையதாதலும் , நூலிற்கு அழகு எனும் பத்து – நூலினுக்கு அழகு என்று சொல்லப்படும் பத்து.
பவணந்தி முனிவர், நன்னூல்: 13
காண்டிகையுரை
நல்ல தமிழ்ப் பணி.
வாழ்க நீர் பல்லாண்டு!